Wednesday, 25 April 2012

'சுற்றி வளைத்துப் பேசுறது' என்ற சொற்றொடர்

'சுற்றி வளைத்துப் பேசுறது' என்ற சொற்றொடர் - ஆங்கிலத்தில் இதை 'Beating around the bush' என்பார்கள். ஒருவர் பிறரிடம் தனக்கு ஒரு காரியம் ஆகவேண்டுமென்றல், நேரடியாகத் தன் தேவையைத் தெரிவிக்காமல் தனக்கு ஆர்வமில்லாதது போல பேசிக் கொண்டே இருப்பார்கள்.

'நீ என்னதான் சொல்ல வருகிறாய்? உனக்கு என்ன வேண்டும் என்று நேராகத் தெளிவாகச் சொல்' என்றதும் தனக்கு ஆக வேண்டிய தேவையைச் சொல்வார்கள். இத்தகைய சுற்றி வளைத்துச் சொல்லும் பாங்கையே 'He is beating around the bush" என்பார்கள்.

Batfowler
இந்த ஆங்கிலச் சொற்றொடர் எப்படி வந்தது என்று பார்ப்போம். முற்காலத்தில் இளைஞர்கள் அவ்வப்பொழுது இரவு நேரங்களில்   அருகிலுள்ள புதர் நிறைந்த அடர்ந்த காட்டுப் பகுதிகளில் பறவைகளை வேட்டையாடச் செல்வர். இது ஒரு சவாலான விளையாட்டாகும். இந்த வகையான வேட்டையை Batfowling (Sports) விளையாட்டு என்றும், வேட்டையாடுபவர்களை Batfowlers என்றும் சொல்கிறார்கள்.

சாதாரணமாக இவர்கள் உறங்கும் பறவைகளையே குறி வைக்கிறார்கள். ஆனால் பறவை வேட்டையில் உண்மையான ஈடுபாடுள்ளவர்கள் அப்பறவைகள் எதிர்பாராத சமயத்தில் தாக்கிக் கொல்ல விரும்புவதில்லை. சில நேரங்களில் சில பறவைகள் எச்சரிக்கையாக மற்றவர்களுக்கு எளிதில் தென்படாதபடி, புதர்கள் நிறைந்த பகுதிகளில் கூடு கட்டி மறைந்திருக்கும்.

எனவே, இரவில் பறவை வேட்டைக்குச் செல்பவர்கள் சில பணியாளர்களையும் உடன் அழைத்துச் செல்வர். அவர்களை Beaters என்பார்கள். அவர்களின் பணி வேட்டையாடுபவர்களுக்கு உதவியாக பறவைகள் இருக்கும் புதர்களில் தடி கொண்டு அடித்தபடி பறவை கூட்டங்களைக் கலைத்துவிட வேண்டும்.

திடுக்கிட்ட பறவைகள் விழித்து பீதியில் அங்குமிங்கும் பறக்கும். அப்பொழுது கண்கள் கூசும் விளக்கின் ஒளி்யை அவைகளின் மேல் செலுத்தி, திகைப்பில் பறக்க முடியாத சந்தர்ப்பத்தில் வேட்டையாடுபவர்கள் பறவைகளை மட்டையால் அடித்து உணர்விழக்கச் செய்து பிடித்துவிடுவார்கள். மனச்சாட்சியுள்ள ஒரு சிலர் மட்டையுடன் பொருத்தியுள்ள வலையின் உதவியுடன் பறவைகளை லாவகமாகப் பிடித்துவிடுகிறார்கள்.

அதுபோல, பிறரிடம் தனக்கு ஒரு காரியம் சாதித்துக் கொள்ள விரும்பும் ஒருவர் சுற்றி வளைத்துப் பேசுவார். சாமர்த்தியமாக உண்மையை மறைத்து அவருக்கு அக்கறையில்லாதது போல நடந்து கொள்வார். ஆனால் காரியமே கண்ணாயிருந்து நினைத்ததை சாதித்துக் கொள்வார். இப்படியாகத்தான் 'சுற்றி வளைத்துப் பேசுறது' (Beating around the bush) என்ற சொற்றொடர் பேச்சு வழக்கில் புழக்கத்திற்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஞாயிறு, 05 ஜூன் 2011 அன்று ’கீற்று’ வலைத் தளத்தில் வெளியான எனது கட்டுரை.

No comments:

Post a Comment