Monday, 9 April 2012

நான் அறிந்த நல் உள்ளம் கொண்ட மருத்துவர்கள்

2. மருத்துவர் சுவாமிநாதன், சொக்கப்ப நாயக்கன் தெரு, மதுரை

வடக்கு சித்திரை வீதியிலிருந்து வடக்கு ஆவணி மூல வீதி செல்லும் சிறிய சந்து சொக்கப்ப நாயக்கன் தெரு. எனக்குத் தெரிந்து அங்கு 1950 - 70 களில் மருத்துவர் சுவாமிநாதன் என்றொரு முதிய மருத்துவர் இருந்து வந்ததாக என் தகப்பனார் சொல்லியிருக்கிறார்.

நானும் ஓரிரு முறை பார்த்ததாக நினைவு. அவரிடம் என் அப்பாவும் மருத்துவத்திற்கு சென்றிருக்கிறார்கள். நோயின் தன்மையை அறிவதிலும், சிகிட்சை செய்வதிலும் வல்லவர். என் பெரியப்பா S.சோமசுந்தர முதலியார் அவர்களின் குடும்ப டாக்டர்.

என் அப்பா இளம் வயதில் சில நேரங்களில், 'நெஞ்சை ஏதோ அழுத்தி நெஞ்செலும்புகள் நொறுங்கி உயிர் போய்விடும்போல உணர்கிறேன்' என்று மருத்துவர் சுவாமிநாதனிடம் சொல்வார்களாம். மருத்துவர் சோதித்து விட்டு, 'உங்களுக்கு எல்லாம் நன்றாய் இருக்கிறது. இருந்தாலும் நீங்கள் வேறு யாரிடமாவது பரிசோதித்து என்ன நோய் என்று மட்டும் தெரிந்து வாருங்கள், நான் மருத்துவம் செய்கிறேன்' என்பாராம். இப்பொழுது என் அப்பாவிற்கு 88  வயதாகிறது. முதுமையில் சிரமப்படுகிறார்.

என் அப்பா 1948 லிருந்து சபரிமலை அய்யப்ப தரிசனம் சென்று வருவார்கள். அவருடைய குருநாதராக குமாரம் என்ற ஊரில் வெற்றிலை பாக்கு பெட்டிக்கடை நடத்தி வந்த சுந்தரம் பிள்ளை என்பவர் வசித்து வந்தார். ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் என் அப்பா, நான், இன்னும் ஓரிரு ஐயப்ப சாமிகள் குமாரம் சென்று, அவர் வீட்டில் இருமுடி கட்டி, பூஜை செய்தபின் சுந்தரம் சாமியை காரில் சோழவந்தான் அழைத்து வருவோம்.

அவர் வீட்டில் கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்வதே ஆனந்தமாக இருக்கும். ஸ்வாமியேய்.. என்று கண்கள் சொருக அழைப்பதில் ஐயப்பனே மனம் இரங்கி, இறங்கி வந்துவிடுவார் என்று தோன்றும். சோழவந்தான் மாரியம்மன் கோவிலில் எங்களுக்கு அவர் இருமுடி கட்டி நாங்கள் காரில் சபரிமலை செல்வோம்.

அப்படிப்பட்டவர்க்கு ஒரு கெட்ட பழக்கம். மறைவாகச் சென்று அடிக்கடி பீடி புகைப்பார். அவருக்கு குழந்தைகள் ஏராளம், எல்லாம் நல்ல குணமுள்ள பெண் குழந்தைகள். அவருக்கு திடீரென்று காய்ச்சலும், இருமலும் வந்து விட்டது. என் அப்பா எங்கள் குருநாதரை மருத்துவர் சுவாமிநாதன் அவர்களிடம் அழைத்துச் சென்றார்.

அவர் பரிசோதித்ததில் காசநோய் இருப்பது தெரிந்தது. பீடி பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் சிகிட்சை செய்தார். சுந்தரம் பிள்ளையும் ஆறுமாதத்தில் நல்ல குணமடைந்தார்.

1966 ல் நான் மருத்துவ இறுதியாண்டில் இருக்குபோது, என் தாயாருக்கு ஒன்பதாவதாக ஓர் ஆண் குழந்தை பிறந்தது. உடல் நலமில்லாமல் அரசு மருத்துவமனை குழந்தைப் பிரிவில் சேர்த்திருந்த பொழுது மருத்துவர் சுவாமிநாதன் அவர்கள் மகள் மீனாட்சி பயிற்சி மருத்துவராக இருந்தார் என்று என் நினைவு. இப்பொழுது அவர் இங்கில்லை.

மருத்துவர் சுவாமிநாதன் 1972 க்குப் பின் இறந்து விட்டார் என அறிகிறேன். இவர் அன்புடனும், கண்டிப்புடனும் சிகிட்சை செய்வதில் வல்லவர், நேர்மையானவர்.

No comments:

Post a Comment