Showing posts with label தமிழ்க் கவிதைகள். Show all posts
Showing posts with label தமிழ்க் கவிதைகள். Show all posts

Monday, 27 May 2013

தாயின் மெல்லிய பாத ஒலி!

பச்சிளம் குழந்தை அழுகிறது,

பாலுக்கா! வேறு ஏதாவது காரணமா!

எனக்கு ஆவலாய் இருக்கிறது!


குழந்தை விம்மி விம்மி அழுகிறது,

பாலுக்கா! வேறு ஏதாவது காரணமா!

எனக்கு கவலையாய் இருக்கிறது!


இப்பொழுது தேம்பித் தேம்பி அழுகிறது,

பாலுக்கா! வேறு ஏதாவது காரணமா! என்னவாய்

இருக்கும்! எனக்கு ஒரே யோசனை!


தேம்பி அழும் குழந்தை கீச்சிடுகிறது,

பாலுக்கா! வேறு ஏதாவது காரணமா! - என் ஆர்வம்

என்னை விரல் நுனியில் நிற்க வைக்கிறது!


குழந்தையின் கீச்சழுகை சிரிப்பாக மாறிவிட்டது,

எனக்கும் புரிந்து விட்டது அதோ

தாயின் மெல்லிய பாத ஒலி! 

Friday, 30 March 2012

கொஞ்சம் புன்சிரிப்பு, நிறைய பாசம்

'மதர் கிரியேசன்ஸ்' நாடகம்,  
பார்த்தேன் 'பிரியமுடன் அப்பா'
கதை, வசனம், இயக்கம்
சி.வி.சந்திரமோகன்;

பார்த்தது கதையல்ல,
வாழ்க்கையில் நடக்கும் நிஜம்,
வயதான பெற்றோரை - உதாசீனப்படுத்தும்
பிள்ளைகள்;

நடிகர்கள் நடிக்கவில்லை,
வாழ்ந்து காட்டினார்கள் - நாடகம்
கண்டவர்கள் கண்களில்
கண்ணீர் மழை;    

பெற்றோர்களுக்கு தேவை
'பிள்ளைகளின் அக்கறை,
கொஞ்சம் புன்சிரிப்பு,
நிறைய பாசம்'!

Thursday, 22 March 2012

கவனம்!! குழந்தைகள் கவனித்துக் கொண்டுதான்...

எழுத்து.காம் ல் 16.09.2011 தேதியில் வெளியிட்ட என் கவிதை
மேக கன்னிகா, குருபிரசாத்

திரும்பி விட்டார்கள்
பள்ளியிலிருந்து பிள்ளைகள்
பேரப் பிள்ளைகள்;

பசியாற சாதமுடன்
முட்டைப் பொரியல் அல்லது
நூடுல்ஸ்;

தாத்தாவிற்கும் வேண்டும், தா! என்று
செல்லங்களிடம் கேட்பேன் வேண்டுமென்றே! 
தரமாட்டார்கள்;

மீண்டும் மீண்டும் கேட்பேன்,
என்னிடம் தயங்கியபடி கேட்டார்கள்
ஒரு கேள்வி!

இரவினில் நீங்கள் அருந்தும்
பானத்தை 'என்றாவது' கேட்டோமா
நாங்கள்? 

கவனம்!!
குழந்தைகள் நம்மையும்
கவனித்துக் கொண்டுதான்...
இருக்கிறார்கள்.    

Sunday, 18 March 2012

இசை மேதை மதுரை சோமசுந்தரம்

'என்ன கவி பாடினாலும்
உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையோ முருகா';

ஆனையாம்பட்டி
ஆதிசேசய்யர் பாடல்,
நீலமணி ராகம்;

தேவரின் தெய்வம் திரைப்படம்,
'மருதமலை மாமணியே முருகையா'
தர்பாரி கானடா ராகம்;

'மஹா கணபதிம் பாவயே'
கோபிகாதிலகம் ராகம்;

இசை மேதை
மதுரை சோமசுந்தரம்,
பாடிக் கேட்க வேண்டும்,
அருமையான குரல் வளம்,
கேட்டுக் கொண்டே இருக்கலாம்!

கவிஞர்.வ.க.கன்னியப்பன் 

Saturday, 17 March 2012

Meka

குதூகலத்துடன் மேகா
அவள் கூந்தல் முல்லை

என் பேத்தி கூந்தலுக்கு
மகிழம்பூ வாசமுண்டு;
அவள் கூந்தல் முல்லைக்கு
அதீத வாசமுண்டு.

அவள் முக மலர்ச்சிக்கு
என்றென்றும் நான் அடிமை;
அவள் வரையும் ஓவியங்கள்
எல்லையில்லாக் கற்பனையின்
உயிரோட்டம்.