Friday, 6 April 2012

நான் அறிந்த நல் உள்ளம் கொண்ட மருத்துவர்கள்

மருத்துவம் செய்யும் தொழில் புனிதமானது. ஆனாலும் பல வருடங்களுக்கு முன்பாகவே மருத்துவமும் வியாபாரமாகி விட்டதென்று கர்நாடக மாநிலம், மங்களூர் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி மற்றும் வென்லாக் தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய என் காது, மூக்கு, தொண்டை பேராசிரியர் டாக்டர்.சத்தியசங்கர் அடிக்கடி கூறுவார். நம்மைத் தேடி வரும் நோயாளிகளின் முகத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக அவர்கள் சட்டைப் பாக்கட்டையும், பர்சையுமே பார்க்கிறோம் என்பார். அது இன்று நூற்றுக்கு நூறு உண்மை.

ஆனாலும் எனக்குத் தெரிந்த மனித நேயம் கொண்ட மருத்துவர்கள் சிலரைப் பற்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

1. மருத்துவர் T.N.ராமகிருஷ்ண பணிக்கர்
முதலாவதாக என் சிறு வயது முதல் நான் அறிந்த மருத்துவர் ராமகிருஷ்ண பணிக்கர். இவரை 1940 களில் எங்கள் ஊர் சோழவந்தானுக்கு அறிமுகப்படுத்தியவர் முன்னாள் டாக்டர் கோபால்சாமி. டாக்டர் பணிக்கர் LMP மருத்துவப் பட்டம் பெற்றவர். ஒவ்வொரு ஊரிலும் எந்தத் தொழில் தொடங்குவதானாலும் முதல் தேவை நல்ல அறிமுகமும், நல்லோர் தொடர்புமே. அப்படியாக சுமார் 35 ஆண்டுகள் நல்ல தொடர்புடன் மக்களுடன் இணைந்து அவர்தம் தொழில் செய்து, பிள்ளைகளையும் படிக்க வைத்து, தேவையான அளவு பொருளும் சேர்த்து, 1975 ல் மனநிறைவுடன் தன் தொழிலைப் பூர்த்தி செய்து, பிரியாவிடை பெற்று சொந்த ஊரான திருவனந்தபுரம் சென்றார்.       

ஒருமுறை எங்கள் உறவினர், செல்வாக்குள்ள ஒருவர், அழைப்பதாகக் கூறி அவரைப் பார்க்க மருத்துவர் பணிக்கர் சென்றார். உறவினர் சினிமா தியேட்டர் நடத்தி வந்தார். மருத்துவர் வந்ததும், 'நாங்கள் சீட்டாடுகிறோம், நீங்களும் வாருங்கள்' என்று அழைத்திருக்கிறார். மருத்துவர் அதிர்ச்சியடைந்து, நான் மருத்துவ தொழில் செய்ய இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். இனிமேல் இத்தகைய காரியங்களுக்கு என்னை அழைக்காதீர்கள்' என்று சொல்லி திரும்பியிருக்கிறார்.

என் தாத்தா சந்திரசேகர முதலியார் அவர்களிடம் மருத்துவர் பணிக்கர் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். என் தாத்தா மருத்துவ தேவைக்கு மருத்துவரின் கிளினிக் வந்தால், வந்த காரியத்தை முடித்து அனுப்பும் வரை மருத்துவர் அவர் இருக்கையில் அமர மாட்டாராம்.

என் அப்பா சொல்வார்கள், 'சில விஷயங்களில் என் அப்பா சொன்னால்கூட நான் அஞ்சமாட்டேன். டாக்டர் பணிக்கர் கூப்பிடுகிறார் என்றால் மிகுந்த பயத்துடனேயே செல்வேன்' என்று. கோவில் விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டு, மிகுந்த பொருள் செலவு செய்வதை பணிக்கர் கண்டிப்பாராம்.

மருத்துவர் பணிக்கரிடம் வழக்கமாக வரும் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவர் ஒருநாள் உடல்நலக் குறைவிற்கு பார்க்க வந்திருக்கிறார். மருத்துவரும் பரிசோதித்து தக்க மருந்துகள் கொடுத்திருக்கிறார். வந்தவர் மருத்துவரிடம் ஊசி போடக் கேட்டிருக்கிறார். ஊசி தேவையில்லை என்றதும், வந்தவர், 'ஐயா, நான் ஊரில் தெரிந்தவர்களிடம் மருத்துவர் பணிக்கரிடம் ஊசி போடப் போகிறேன் என்று சொல்லி வந்திருக்கிறேன், எனவே ஊசி போடுங்கள்' என்று மீண்டும் கேட்டிருக்கிறார். அவரைத் திருப்திப்படுத்துவது பெரும்பாடாயிற்று.

மருத்துவர் பணிக்கர் தன தொழில் நிமித்தமாக ஒரு சில வீடுகளுக்கு நோயாளிகளைப் பார்க்க செல்வார். அப்படி பல நேரங்களில் எங்கள் வீட்டிற்கு என் அம்மாவை, என் பாட்டியைப் பரிசோதித்து ஊசி போட்டு மருந்து கொடுக்க வருவார். எங்கள் வீட்டு வேலையாள், இரட்டை மாட்டு வண்டி கட்டி, காத்திருந்து மருத்துவரை அழைத்து வருவார்.

வைத்தியம் முடிந்து திரும்பும்போது, மரியாதை நிமித்தமாக வெற்றிலை பாக்குடன் ஒரு இரண்டு ரூபாய் நோட்டு வெள்ளித் தட்டில் வைத்து மருத்துவரிடம் கொடுப்போம். இது நாங்கள் செய்யும் மரியாதை.

இதுபோல இன்னும் பலர் வீடுகளுக்கு தேவையறிந்து வைத்தியம் பார்க்க செல்வார். வைத்தியத்துக்கான பீசை வருடம் ஒருமுறை மருந்தாளுனர் மூலம் குறிப்பு சீட்டு கொடுத்து மருத்துவர் பெற்றுக் கொள்வார். அந்த அளவு மருத்துவருக்கு மக்களிடம் ஒரு புரிதலும், மக்களுக்கு மருத்துவரிடம் ஒரு மரியாதையும் இருந்தது.

இன்று மருத்துவர்களுக்கு பணம் ஒன்று மட்டுமே குறி. மக்களிடத்து எந்த மரியாதையும், புரிதலும் இல்லை. நோயாளியைப் பார்க்க யார் வீட்டுக்கும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் வருவதில்லை. அவர்களுக்கு யார் தயவும் தேவையில்லை. மருத்துவம் வியாபாரம் ஆகிவிட்டது.

மருத்துவர் பணிக்கர் எங்கள் ஊருக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்.

மருத்துவர் பணிக்கர் நினைவாக நான் எழுதி எழுத்து.காமில் வெளியான கவிதை:      

நினைவுகள் மறையாது

எங்கள் டாக்டர் பணிக்கர்,
TNR பணிக்கர்,
T.N. ராமகிருஷ்ண பணிக்கர்,
நோயைக் கணிப்பதில் சமர்த்தர்;

ஆய்வுக் கூட சோதனை செய்வார் அவரே,
எங்கள் நோயைத் தீர்ப்பதில் வல்லவர்; நல்லவர்;
கலர் கலரான மருந்தும் கொடுப்பார்,
கனிவான ஆறுதலும் தருவார்;

நோய் பறந்து போகுமே
ஃபீசும் குறைவே;
பணிக்கர் டாக்டர் மறைந்தாலும்
அவர் நினைவுகள் மறையாது.                                                                         (தொடரும்)

No comments:

Post a Comment