Sunday, 1 April 2012

ஈத்துவக்கும் இன்பம்


தானங்கள் பல செய்த என் அப்பா
சோழவந்தான்  ’கன்ட்ரோல்’ கன்னியப்ப முதலியார்
அவர்களின் வலது கை
  உடன்பிறப்புகளுக்கும், உறவினர்களுக்கும், நம்மைத் தேடி வரும் வறியவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற பேருண்மையை திருவள்ளுவர் மிக அழகாக ஈகை என்னும் அதிகாரத்தில்

'ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை 
வைத்திழக்கும் வன்க ணவர்'.

 என்ற திருக்குறள் (228) வழியாக வெளிச்சமாக்குகிறார்.

   ஒருவர் தம் படிப்பு, அறிவு, பூர்வீகச் செல்வம், தன் உழைப்பு வழியாக செல்வம் சேர்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய நல்ல நேரம் பணம், நகை, வீடு, சேமிப்பு என்று சொத்துக்களை சேர்த்துக் கொண்டே போகிறார். பிள்ளைகள் கல்வி, மக்கள் திருமணம் என்று பெரும் செலவு. இருந்தாலும் அவரிடம் குறையாத செல்வமாய் பணம்  சேர்ந்து கொண்டிருக்கிறது

   பணத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை. வருமான வரி விலக்குப் பெற, சேமிக்க என்று பலவித மியூச்சுவல் ஃபண்ட்கள், பங்கு வர்த்தக மூலதனங்கள் என்று பலவிதமாக வருமானத்தைப் பெருக்கும் திட்டங்கள் உண்டு. இதிலெல்லாம் நல்ல அனுபவமிருந்தால் மட்டுமே பணம் பெருக வாய்ப்புண்டு. இந்தத் திட்டங்களில் ஆசைப்பட்டு பெரும் பணத்தை முதலீடு செய்கிறார்.

   எவ்வளவு அனுபவமிருந்தாலும், சில நேரங்களில் நாம் எதிர்பார்த்தது நடக்காமல் இழப்பு ஏற்படுவதும் உண்டு. உதாரணமாக 2008 சனவரிக்குப் பின் மே, 2009 வரை சுமார் ஒன்றரை வருட கால கட்டத்தைச் சொல்லலாம். அதே போல 2011 ஆம் வருடத்தையும் சொல்லலாம்நடப்பாண்டில் ஏற்பட்ட பங்குச் சந்தை வீழ்ச்சியால், அவர்களின் முதலீட்டில், 19 லட்சத்து 11 ஆயிரத்து 122 கோடி ரூபாய், மாயமாக மறைந்து விட்டது. பங்குச் சந்தை சரிவால், சராசரியாக ஒரு முதலீட்டாளருக்கு 9.70 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது

   இதை நான் சொல்வதற்குக் காரணம் மியூச்சுவல் ஃபண்ட்கள் மற்றும் பங்கு வர்த்தக மூலதனங்களில் பெருமளவு இழந்ததில் நானும் ஒருவன் என்பதுதான். இதில் ஒரே ஆறுதல் நான் வட்டிக்குக் கடன் வாங்கி முதலீடு செய்யவில்லை என்பதும், என் பங்குகளும், மியூச்சுவல் ஃபண்ட்களும் மதிப்புள்ளவை என்பதும், மேலும் ஒரு வருடத்தில் இழப்பு  சமன்படும் என்ற நம்பிக்கையுமே.

   தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் (குறள், 228) என்பதில் வன்கண் - வன்-மை: பொருள்: மனக்கொடுமை, இரக்கமின்மை, கல்நெஞ்சினர் என்றும் சொல்லலாம். இத்தகைய இரக்கமில்லா தன்மையை நீக்கி, நாம் கொடுத்து உதவும்போது, அவர்கள் உள்ளத்திலும், முகத்திலும் தோன்றும் மகிழ்ச்சிக்கும், மன நிறைவுக்கும் ஈடு இணை ஏதுமில்லை என்பதை 'ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்' என்று வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார்

  எனவே நம் தேவைக்கு மேல் உள்ள பணத்தை, பொருளை தேவையுள்ள உடன்பிறப்புகளுக்கும், உறவினர்களுக்கும், நம்மைத் தேடி வரும் வறியவர்களுக்கும் அவர்கள் தேவையறிந்து, கல்வி, திருமணம், மருத்துவம் போன்ற நற்காரியங்களுக்கு உதவும் மனப்பான்மை வர வேண்டும், வளர வேண்டும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.  

No comments:

Post a Comment