Saturday, 7 April 2012

புனித சவேரியார் கல்லூரியில் விடுதி வாழ்க்கை

ஃபாதர்.அந்தோணிசாமி உதவி முதல்வராகவும், விடுதி  வார்டனாகவும் இருந்தார். அவரைப் பார்த்தால் எங்களுக்கு பயம். அவர் வான சாஸ்திரத்தில் அனுபவம் உள்ளவர் என்று சொல்வார்கள். பிரதர்.பரஞ்சோதி உதவி வார்டனாக இருந்தார். 

வார்டன் ஃபாதர் தினமும் இரண்டு வேளை விடுதியை முழுவதும் சுற்றி வந்து கண்காணிப்பார். அப்பொழுது மாணவர்கள் எல்லோரும் அவரவர் அறைகளில் படித்துக் கொண்டிருக்க வேண்டும். ஒரு சில நேரங்களில் மாணவர்கள் தூங்கினாலும் பரவாயில்லை. பேசி அரட்டை அடிக்கக் கூடாது.

ஆனால் நான் என் அறை நண்பர்களிடம் பலநேரம் பேசிக் கொண்டிருப்பேன்.  வார்டன் வருவது தெரிந்ததும் சப்தமில்லாமல் படுத்து விடுவேன். வார்டன் அறைக்குள் நுழைந்து, விழித்திருக்கும் மற்ற இருவரையும் காலையில் வரச் சொல்லி 'எட்டணா அபராதம்' விதிப்பார். அவர்களுக்கு என் மேல் கோபம்!

நாங்கள் படிக்கும்போது சவேரியார் கல்லூரியில் பயில்பவர்களை Slaves of Xavier's college என்று சொல்வார்கள். நான் ஒருபோதும் அப்படி உணர்ந்ததில்லை. கல்லூரி வகுப்பிற்கு ஒழுங்காகச் சென்றும், விடுதி விதிமுறைகளின்படியும் நடந்து கொண்டால், அங்கே அடிமைத்தனத்திற்கு ஏது இடம்? மாலை வேளைகளில் விடுதி வளாகத்திலேயே இரட்டையர் அல்லது ஐவர் பூப்பந்து விளையாட்டு  விளையாடுவோம். அப்பொழுது Bsc படித்து வந்த முஸ்லிம் நண்பரொருவர் குழுத் தலைவராக இருந்தார்.  

உணவகத்தைப் (Mess) பற்றி சொல்ல வேண்டும். விடுதிக்குச் சென்ற புதிதில் சாப்பிடவே பிடிக்காது. அங்கு காலை வேளையில் இலை போட்டதும் பூரி கிழங்குடன், இட்லி, வெங்காய ஊத்தப்பம் (சிறியது), உப்புமா, முழு ரொட்டி (ஜாமுடன்) இவைகளில் ஏதாவது அட்டவணைப்படி இருக்கும். பூரி, இட்லி, வெங்காய ஊத்தப்பம் நான்கு நான்காக இரண்டு முறை பரிமாறுவார்கள்.

முதலில் விடுதிக்கு சென்ற சில நாட்களில் மூன்று, நான்கு இட்லிகளுக்கு மேல் சாப்பிட முடியாது. போகப்போக இட்லி, ஊத்தப்பம் பிய்த்துப் போட்டு, குளம் கட்டி சாம்பார் அல்லது சட்னி ஊற்றி எட்டு இட்லி, எட்டு ஊத்தப்பம் என்று சாப்பிடப் பழகி விட்டோம். பூரி கிழங்கும் சுவையாக இருக்கும். ரொட்டியும், ஜாமும் பிரமாதமாக இருக்கும். மதியச் சாப்பாடும் மிக சுவையாக இருக்கும். ஒரு மாதத்திற்கு மொத்த சாப்பாடு செலவு ரூபாய் 34 -35 க்குள்தான் இருக்கும். இதை ஆனந்தவிகடன் விகடன் மேடை பகுதியில் நண்பர் வை.கோ வும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.    

ஒரு நாள் என் புகுமுக வகுப்பு நண்பரும் (கணிதப் பிரிவு), என் உறவினருமான ச.ரெங்கநாதன் என் அறைக்கு வந்து ஒரு பொட்டலத்தைக் கொடுத்தார். அதை வைத்திருக்கச் சொல்கிறார் என்று நான் பிரிக்காமல் பத்திரமாக வைத்திருந்தேன். அடுத்த நாள் காலையில் வந்து 'சாப்பிட்டீர்களா' என்றார்.

எனக்குப் புரியாமல் கேட்டபோது 'நேற்று விநாயகர் சதுர்த்தி. என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். உங்களுக்கும், நண்பர்களுக்கும் கொழுக்கட்டை கொடுத்திருந்தார்கள்' என்றார். எடுத்துப் பார்த்தேன், ஊசி விட்டது. நாங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!

1 comment:

  1. உங்களுக்கு நாளாக நாளாக நன்றாகச் சாப்பிட்டிருக்கிறீர்கள். எனக்குத் தலை கீழ். முதலில் வெட்டினேன் ..பின்னால் கொறித்தேன் ..

    ReplyDelete