Tuesday, 24 April 2012

கண்தானம் வழங்க உறுதிமொழி மட்டும் போதாது

17.04.2012 தேதியிட்ட தினமலர் செய்தித்தாளில் ஆந்திரா விஜயநகரம் மாவட்டம், சிபுடுபள்ளி அடுத்த மெட்டபள்ளி கிராமத்தில் 'ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் கண்தானம்' என்ற தலைப்பில் செய்தி வாசித்தேன்.

தலைப்பிலேயே தவறு இருக்கிறது. தாங்கள் இறந்த பின் கண்தானம் வழங்க முன் வருவதாக உறுதிப் பத்திரத்தில் கையொப்பம் இட்டுள்ளனர் என்பதே உண்மையான செய்தியாக இருக்க வேண்டும்.

மேலும், இதுவரை இப்பகுதியில் 42 கிராமங்களைச் சேர்ந்த 55 ஆயிரம் பேர் கண்தானம் வழங்க உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்து இட்டிருப்பதாக தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்திருக்கிறார்.

இவர்களில் எத்தனை பேரிடம் இருந்து இறந்த பின் கண் தானம் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லச் சொல்லுங்கள். இன்றிலிருந்து ஒரு மாதத்தில், மூன்று மாதத்தில், ஆறு மாதத்தில், ஒரு வருடத்தில் எத்தனை பேர் இறந்தபின் கண்கள் தானம் அளிக்கிறார்கள் என்ற கணக்குத் தேவை. இல்லையென்றால் இவ்வளவும் வெறும் விளம்பரமே. இங்கு தியாகம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

நான் கண் மருத்துவத் துறையில் மதுரை, தஞ்சாவூர், ஈரோடு, திருச்சி போன்ற வெவ்வேறு ஊர்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் பணியிலிருந்திருக்கிறேன். மதுரை அரசு கண் மருத்துவமனையில் சுமார் 500  பேர் கண்தானம் பதிவு செய்திருப்பதாகக் கொள்வோம். இதில் எத்தனை பேர் கண்கள் உண்மையில் இறந்தபின் தானம் செய்யப்பட்டிருக்கின்றன? ஒன்று கூட இல்லை.

கண்தானம் வழங்க உறுதிமொழி மட்டும் போதாது. எனவே கண்தானம் தருவதாகப் பதிவு செய்வதை விட, ஒவ்வொருவரும் தங்கள் முயற்சியால் வருடம் ஒருமுறையாவது இரண்டு கண்கள் தானமாகப் பெற்றுத் தந்து புண்ணியம் பெறுங்கள். 

எழுத்து.காமில் இன்று நான் வெளியிட்டுள்ள இக்கட்டுரைக்கு பின்னூட்டமாக,  ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரிமா சங்கத்தைச் சேர்ந்த முருகபூபதி என்பவர் தெரிவிக்கும் நற்செய்தி:

 இந்த வருடம் 60 ஜோடி கண்கள் தானம் பெறுவது என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வரும் சங்கம் இதுவரை 52  ஜோடி கண்கள் தானம் பெற்றுள்ளார்கள் என்று தெரிவிக்கிறார். கருவிழி (Corneal disease or opacity) நோயால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்த சுமார் 100 பேருக்காவது தானமாகப் பெற்ற இக் கண்களின் கருவிழி (Cornea) பொருத்தப்பட்டு பார்வை பெற்றிருப்பார்கள் என்று நம்புகிறேன். 

கருவிழியில் பூ விழுந்த குழந்தையின் கண்கள்
கருவிழி மாற்று அறுவை சிகிட்சை செய்யப்பட்ட வேறொருவரின் கண்
பின்குறிப்பு:  கருவிழி (Cornea) என்பது நிறமில்லாதது. ஒளி ஊடுருவக் கூடிய  கண்ணாடி போன்ற அமைப்பு கொண்ட கண்ணின் முன்பகுதியாகும்.

பெருந்துறை அரிமா சங்கத்தினரின்  தொண்டு வளர வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment