Wednesday, 4 April 2012

புகுமுக வகுப்பிற்கு - பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரி 1960 - 61

நான் சோழவந்தான் போர்டு உயர்நிலைப் பள்ளியில் 1960 ல் SSLC முடித்து பரீட்சை தேறிவிட்டேன். அடுத்து புகுமுக வகுப்பிற்கு கல்லூரி செல்ல வேண்டும். அந்தக் காலத்திலும், இன்றும் எங்களூரில் கல்லூரி செல்பவர்கள் மதுரைக்கு புகைவண்டியில் தான் செல்வார்கள். அதுவும் முதலிலேயே ஏறி அமர மாட்டார்கள். வண்டி கிளம்பி ஓட ஆரம்பித்ததும் நகரும் வண்டியில் ஏறுவதுதான் வழக்கம், வீரச் செயலும் கூட.

அதனால் என் தந்தை அந்த செயலுக்கு என்னை விடவில்லை. எனவே பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் சேர்க்க திட்டமிட்டார். மதுரையில் அப்பொழுது அரசியலில் பிரபலமாயிருந்த முனிசிபல் சேர்மன் திரு. சிதம்பர முதலியார் திருநெல்வேலியிலிருந்த உறவினர்க்கு கடிதம் தந்தார். அவர் மீண்டும் எனக்கு சவேரியார் கல்லூரி கணிதத் துறை பேராசிரியர். திரு.ஜானகிராமன் அவர்களுக்கு கடிதம் கொடுத்து பார்க்கச் சொன்னார்.

கணிதத்தில் 76 மார்க்கும், விஞ்ஞானத்தில் 45 மார்க்கும் எடுத்திருந்ததால் பேராசிரியர். திரு.ஜானகிராமன் என்னை முதல் குரூப் கணிதம் எடுத்துக் கொள்ள சொன்னார். எனக்கு காம்போசிட் கணக்கு வராது என்றும், விஞ்ஞான குரூப் எடுத்துக் கொள்வதாகவும் கூறினேன். அதுவே எனக்கு கிடைத்தது.   

பேராசிரியர் செல்வநாயகம் (ஆங்கிலம்), பேராசிரியர் குரூஸ் அந்தோணி (தமிழ்), பேராசிரியர் M.V.ராஜேந்திரன் (விலங்கியல்), உதவிப் பேராசிரியர் ஆராச்சி (தாவரவியல்), ஃபாதர்.ஜார்ஜ் (பொருளாதாரம்), விரிவுரையாளர்களாக திரு S.வெங்கடராமன் (வேதியியல்), திரு.சூசை ரத்னம் (பௌதிகம்), திரு.பாலாஜி (விலங்கியல்) ஆகியோர் பாடம் நடத்துவார்கள். தமிழ் வழிக் கல்வி கற்ற எனக்கு சில நாட்கள் புரிந்து கொள்ள பிரமிப்பாக இருந்தது. திரு.பொன்னரசு என்ற தமிழ் ஆசிரியர் மிகவும் அருமையாக திருக்குறள் வகுப்பெடுப்பார்.
 
சுமார் 25 வருடங்களுக்குப் பின் ஒருநாள் மதுரை திருநகரில் என் உறவினர் வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் இடம் தேடி என்னிடம் விசாரித்தார். அவரை நான் தெரிந்து கொண்டு, 'சார், நீங்கள் கெமிஸ்ட்ரி பேராசிரியர் வெங்கட்ராமன் தானே' என்று கேட்டேன். அவருக்கு மிகுந்த ஆச்சர்யமாய்ப் போய் விட்டது. நான் அவரிடம் 1961 ல் சவேரியார் கல்லூரியில் படித்த மாணவன் என்றேன். அவர் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் பேராசிரியராக இருப்பதாகச் சொன்னார். இருவர்க்கும் மகிழ்ச்சியாக இருந்தது.        
                                                                                                                                             (தொடரும்)

2 comments:

  1. அடே .. எல்லா ஆசிரியர்கள் பெயரும் நினைவில் வைத்திருக்கிறீர்களே ... ! ஆராய்ச்சி சாரைத் தவிர மற்ற விஞ்ஞான ஆசிரியர்கள் பெயர்கள் நினைவில் இல்லை.
    அப்புடி படிச்சிருக்கேன் :-(

    ReplyDelete
  2. லெக்சரர்களிடம் ஆட்டோகிராப் வாங்கியிருப்பதால் நினைவிலும் இருக்கிறது. முகம் நினைவிலில்லை. பேராசிரியர் ஆராச்சியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாளையங்கோட்டை அவர் வீட்டிற்குச் சென்று சந்தித்தேன்.

    ReplyDelete