Saturday, 4 January 2014

கோசல நாட்டின் மருத நிலம்

நிரஞ்சன் என்ற நண்பரின் கூகுள் சந்தம் வசந்தம் பகுதியில் ராமாயணத்தின் பால காண்டம், நாட்டுப் படலத்தில் மருத நிலத்தில், பல ஒலிகளும் தம்முள் கலந்து ஒலிப்பதைக் கூறும் ஆறு பாய் அரவம்பாடலை வாசித்து, soundcloud ல் வரும் விளக்கமும் கேட்டேன். பயன் உள்ளது. ஆனால், ஆங்கில மொழிபெயர்ப்பு மிகவும் தவறாக உள்ளது. இதை எப்படிப் பதிவு செய்தார்கள் என்று புரியவில்லை.

ஆறு பாய் அரவம், மள்ளர்
   ஆலை பாய் அமலை, ஆலைச்
சாறு பாய் ஓதை, வேலைச்
   சங்கின் வாய்ப் பொங்கும் ஓசை,
ஏறு பாய் தமரம், நீரில்
   எருமை பாய் துழனி, இன்ன
மாறு மாறு ஆகி, தம்மில்
   மயங்கும் - மா மருத வேலி.  34

பால காண்டம்
நாட்டுப் படலம்

Lyrics:
Six Boy aravam, mallar 
Mill Bay conduct, alaic
 
Juice Boy otai, velaic
 
Sangin mouth turbulent noise,
 
Tamaram climb mat, water
 
Buffalo Boy tulani, etc.
 
Switch to Switch to become, in their
 
Places fence wet flour.
 

Condom: Condom bridge
Foil: nattuppatalam

பால காண்டம் என்பதை Condom bridge என்றும், ஆறு பாய் அரவம் என்பதை Six Boy aravam என்றும்,  ஏறு பாய் தமரம் என்பதை Tamaram climb mat என்றும், மா மருத வேலி என்பதை fence wet flour என்றும் நூற்றுக்கு நூறு விழுக்காடு தவறாக மொழி பெயர்த்தது ஆங்கிலமும், தமிழும் அறியாத ஒரு சிறுவன் மொழி பெயர்த்ததாக எண்ணி கண்ணீர் வரவழைக்கிறது.

கம்ப ராமாயணத்தின் பால காண்டம், நாட்டுப் படலத்தில் ’மருத நிலத்தில், பல ஒலிகளும் தம்முள் கலந்து ஒலிப்பதை சுவையுடன் கம்பர் கூறுகிறார்.’ஆறு பாய் அரவம்’ என்ற பாடலின் என்னுடைய ஆங்கில மொழி பெயர்ப்பு.

A feeling of euphoria in the fertile fields of Kosala Kingdom!

River flowing with splattering noise,
ploughmen working in the sugarcane
fields with rustling sounds of their leaves,

crushed cane juice flowing with bubbling noise,
the whistling sounds from the mouth of the
small shells drifted from the sea into the land,

great noise due to the rubbing of horns
due to bulls fight, sounds while the buffalo
jumps splashing into the shallow water,

many such different pleasant noises, mingled
with each other, offer a feeling of  euphoria,
the land of fertile fields of Kosala Kingdom!

 Childhood Period (or)
Childhood Canto: பால காண்டம்
Country scene: நாட்டுப் படலம்

Translation by Dr.V.K.Kanniappan, M.S, D.O; Professor of Ophthalmology (Retired)

I have used different English words for different Tamil words for sounds.

அரவம் – splattering
அமலை – rustling
ஓதை – bubbling
சங்கின் வாய் ஓசை – whistling
தமரம் - rubbing of horns
துழனி - splashing into the water.

பொருளுரை: ”வயல் வெளிகளில் ஆற்று நீர் பாய்வதால் எழும் மெல்லிய சலசல ஓசையும்,  உழவர்கள் கரும்பு வயல்களில் வேலை செய்யும் பொழுது கரும்புத் தோகைகளால் உண்டாகும் சரசர ஓசையும், கரும்பாலைகளில் கரும்பைப் பிழிந்து கருப்பஞ்சாறு பாய்வதால் எழும் ஓசையும், புது வெள்ளப் பெருக்கில் கடலிலிருந்து எதிரேறி நீர்க் கரைகளில் உள்ள சங்குகளிடமிருந்து   பெருகும்  ஓசையும், எருதுகள் தம்முள்  மோதிப்  பாயும்போது அவைகளின் கொம்புகள் உராய்வதால் எழும் ஓசையும், நீர்நிலைகளில்  எருமைகள் படிந்து எழுவதால் உண்டாகும் ஓசையும் ஆகிய ஓசைகள் வெவ்வேறாக மாறி மாறி தமக்குள்  ஒன்றோடொன்று கலந்து ஒலிக்கும் பெருமையுடையது கோசல நாட்டின் மருத நிலம்” என்று கம்பர் சுவைபட உரைக்கின்றார். அவ்வொலிகள் இயற்கையை அனுபவித்தவர்களால் தான் புரிந்து கொள்ள முடியும்.


Monday, 27 May 2013

தாயின் மெல்லிய பாத ஒலி!

பச்சிளம் குழந்தை அழுகிறது,

பாலுக்கா! வேறு ஏதாவது காரணமா!

எனக்கு ஆவலாய் இருக்கிறது!


குழந்தை விம்மி விம்மி அழுகிறது,

பாலுக்கா! வேறு ஏதாவது காரணமா!

எனக்கு கவலையாய் இருக்கிறது!


இப்பொழுது தேம்பித் தேம்பி அழுகிறது,

பாலுக்கா! வேறு ஏதாவது காரணமா! என்னவாய்

இருக்கும்! எனக்கு ஒரே யோசனை!


தேம்பி அழும் குழந்தை கீச்சிடுகிறது,

பாலுக்கா! வேறு ஏதாவது காரணமா! - என் ஆர்வம்

என்னை விரல் நுனியில் நிற்க வைக்கிறது!


குழந்தையின் கீச்சழுகை சிரிப்பாக மாறிவிட்டது,

எனக்கும் புரிந்து விட்டது அதோ

தாயின் மெல்லிய பாத ஒலி! 

புறத்திணை பன்னிரண்டு

புறப்பொருள் என்பது பொருள் இலக்கண வகைகளுள் ஒன்று. இது புறம் பற்றிய உலகியல் நெறிகளாகிய மன்னனின் வீரம், வெற்றி, கொடை, புகழ், கல்வி, அறம் முதலியவற்றைக் குறித்து விளக்கிக் கூறுவது ஆகும். புறப்பொருள் அல்லது புறத்திணை பன்னிரண்டு வகைப்படும்.

1. வெட்சித் திணை: 

பகை நாட்டின் மீது போர் தொடங்கும் முன் அந்நாட்டிலுள்ள ஆநிரைகளுக்குத் தீங்கு நேரக்கூடாது எனக் கருதும் மன்னன், தன் வீரர்களை அனுப்பி ஆநிரைகளாகிய ஆடு, மாடுகளைக் கவர்ந்து வரச் செய்வது வெட்சித்திணை ஆகும். அவ்வீரர்கள் வெட்சிப்பூவைச் சூடிச் செல்வர். நிரை என்பது ஆடு, மாடுகள் ஆகும். இது நிரை கவர்தல் எனப்படும்.

2. கரந்தைத் திணை:

வெட்சி வீரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை கரந்தைப்பூவைச் சூடிச் சென்று மீட்டுவருவது கரந்தைத் திணை ஆகும். கரந்தை என்பது நிரை மீட்டல் ஆகும்.

3. வஞ்சித் திணை:

மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டுடன் போரிடுதல். வீரர்கள் வஞ்சிப்பூவைச் சூடிப் போரிடுவர்.

4. காஞ்சித் திணை:

தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடுவர்.

5. நொச்சித் திணை:

தன்னுடைய மதிலை வேண்டி உள்ளிருந்தே, வெளியே இருக்கும் பகை அரசனோடு நொச்சிப் பூவைச் சூடிப் போரிட்டு அம்மதிலைக் காப்பர்.

6. உழிஞைத் திணை:

உழிஞைப் பூவைச் சூடி தன் வீரர்களுடன் மாற்றரசன் கோட்டைக்குள் புகுந்து மதிலைக் கைப்பற்றுவர்.

7. தும்பைத் திணை:

பகைவேந்தர் இருவரும் தும்பைப் பூவைச் சூடி வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தம் வீரர்களுடன் இணைந்து போரிடுவர்.
8. வாகைத்திணை: வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வான்.

9. பாடாண் திணை: பாடு + ஆண் = திணை = பாடாண்திணை

பாடுதற்குத் தகுதி உடைய ஓர் ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது பாடாண் திணை.

10. பொதுவியல் திணை:

வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல் திணை.

11. கைக்கிளைத் திணை:

கைக்கிளை என்பது ஒருதலைக் காமம். இது ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று என இரு வகைப்படும்.

12. பெருந்திணை:

பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். இதுவும் ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று என இரு வகைப்படும்.


Monday, 11 March 2013

கண்ணீர் பெருகுகிறது..!


கண்ணீர் பெருகுகிறது..!
பன்னிரண்டு வயது பாலகன்
பாலச்சந்திரன் பிரபாகரனின்
குழந்தைத்தனமான பார்வை;

இன்றைய இந்து பத்திரிகையில்
உள்ள மூன்று படங்களைப்
பார்த்தாலே கண்ணீர் பெருகுகிறது,
பரிதாபமாக எதையோ சாப்பிடுகிறான்!

பாவிகள் எப்படித் துணிந்தார்கள்
நெஞ்சில் சுட்டுக் கொல்ல!
இரக்கமற்ற இலங்கை
இராணுவ அரசாங்கம்!

19.02.2013 ஆம் தேதி, அன்றைய ’ஹிந்து’ பத்திரிக்கையில் பார்த்த செய்தியில் அதிர்ச்சியாகி எழுத்து.காமில் நான் வெளியிட்ட கவிதை.

Tuesday, 26 June 2012

பூசைக்கேற்ற மலர்கள்


மலர்கள் கொண்டு பூசை செய்வதில் சில மரபுகளை ஆன்றோர்கள் பின்பற்றியுள்ளனர். அவற்றுள் எண்மலர்கள் கொண்டு பூசை செய்வதும் ஒன்றாகும். அவையாவன புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், ந்ந்தியாவர்த்தம், நீலோற்பவம், பாதிரி, அலரி, செந்தாமரை. இதனை புட்பவிதி பாடல் 20 ல்

இலகிய புன்னைவெள் ளெருக்குச் சண்பக
நிலவிய வலம்புரி, நீலம், பாதிரி
அலரிசெந் தாமரை யஷ்ட புஷ்பமாம்
புலரியம் போதொடெப் பொழுதும் சாத்தலாம்

என்று சொல்லப்படுகிறது.

எண்மலர்கள்:

புன்னை, சண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு ஆகியவை கோட்டுப்பூக்களாகும். இவை மரங்களிலிருந்து கிடைப்பவை.

வலம்புரி (நந்தியாவர்த்தம்), அலரி (அல்லி) இரண்டும் நிலப்பூ வகையாகும். புதர்ச்செடிகளிலிருந்து கிடைப்பவை.

நீலோத்பவம் (குவளை), தாமரை இரண்டும் நீர்ப்பூ வகையாகும். இவை குளங்கள் போன்ற நீர்த்தேக்கங்களிலிருந்து கிடைப்பவை.

காலை, உச்சிப்பொழுது, அர்த்தயாமம் என்று பூசைக்கு வெவ்வேறு மலர்கள் சொல்லப்பட்டிருந்தாலும், எக்காலத்திற்கும் பூசைக்குரிய மேற்கூறிய எண்மலர்கள் ஏற்புடையதாகும்.

திருவதிகை வீரட்டானேஸ்வரர்  கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்ட்த்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீரசைவக்  கோவில்களுள் ஒன்று. அப்பர், சம்பந்தர்,சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும்.

எண்மலர்கள் கொண்டு சிவபெருமானைப் பூசித்தால் கரும்புக் கட்டியில் தேன் கலந்ததைப் போல இனிமையும் தரும், வினைகளும் ஒழியும் என்கிறார் நாவுக்கரசர்.

எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி
மட்ட லர்இடு வார்வினை மாயுமால்
கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ
ரட்டனார்அடி சேரும் அவருக்கே

மலர்களைக் கிள்ளிப் பூசித்தால்  பாக்கியச் சிதைவு ஏற்படும் என்பதால், மலர்களைக் கிள்ளாமல் முழுவடிவில் அர்ச்சிப்பதே சிறந்தது. ஆகம விதிகளின்படி பூசையின் இறுதியில் எண்மலர்கள் கொண்டு அர்ச்சிப்பது உயர்ந்தது என்கிறார் நாவுக்கரசர்.

Saturday, 16 June 2012

ஆசிரியர் - மாணவர் நல்லுறவின் வெளிப்பாடு - 'சித்த மருத்துவ பேராசிரியர் டாக்டர்.ஜெயபிரகாஷ் நாராயணனின் கடிதம்'


என் மூன்றாவது தம்பி குருநாதன் 1973 ஜூலை மாதத்திற்குப் பின் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையிலுள்ள மாணவர் விடுதியில் தங்கிப படித்து வந்தான். முதலாம் ஆண்டிலேயே மாணவர் சங்க உதவி செயலாளராக இருந்து, ஒரு பேராசிரியரிடம் தலைமை செவிலியர் மரியாதைக் குறைவாக பேசினார் என்பதற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு படிப்பில் பின்தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 1981 இறுதியில் BIM முடித்தான்.

1982 சனவரியில் உதவி சித்த மருத்துவராக வட ஆற்காடு மாவட்டம் ஆலங்காயம் என்ற ஊரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேர்ந்தா(ர்)ன்.

குருநாதன் கல்லூரியில் மாணவனாக படிக்கும் காலத்தில் ஆசிரியர்களிடம் பெருமதிப்பு வைத்திருந்தார். முதிய மாணவர்கள், இளம் மாணவர்கள், சம வகுப்பில் படித்தவர்கள் என்று அனைவருடனும் அன்பும், நட்பும் கொண்டு உறவினர்கள் போலவே பழகி வந்தார்.

கல்லூரியில் நடக்கும் விழாக்களில் பாட்டு, நாடகம் போன்ற கலைகளில் கலந்து கொண்டு பரிசுகளும் வாங்கியுள்ளார். 'இசைச் சித்தர்' சிதம்பரம் ஜெயராமன் பாடல்களை இனிமையாகப் பாடுவார். அலைபேசி வசதி இல்லாத அக்காலத்தில் கடிதப் போக்குவரத்துதான். மாணவப் பருவத்தில் அவர்க்கு நண்பர்களிடமிருந்து வந்த கடிதங்கள் நூற்றுக் கணக்கில். அனைத்திலும் அண்ணன், மாமா, தாத்தா, அத்தான், தம்பி, பாஸ் என்று உறவு முறை வைத்து விளித்துத்தான் கடிதங்கள் வந்தன.

ஆலங்காயத்திலிருந்து மாற்றலாகி உசிலம்பட்டி மருத்துவமனையில் பணியில் சேர்ந்த பொழுது 1984 ல் திருமணம் நடந்தது. அப்பொழுது சோழவந்தானிலிருந்தே போய் வந்தார். ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தன தாயார் பெயரையும் சேர்த்து சந்திரவதனா என்று பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர் பெற்றோர்.

பின் விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாற்றல். 1996  மே மாதத்திற்குப் பின் திருச்சி மாவட்டம், ஆரம்ப சுகாதார நிலையம் சோமரசம்பேட்டையில் பணி. பெருங்குடலில் (Rectum carcinoma) புற்று நோய் ஏற்பட்டு, 1997 மார்ச் மாதம் அறுவை சிகிட்சைக்குப் பின் ஆறு மாதங்கள் நலமுடன் வாழ்ந்தார். கடைசியாக சில மாதங்கள் மதுரை யானைமலை ஒத்தக்கடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிந்தார். அதன்பின் பின்விளைவுகளால் 1997  நவம்பர் மாதம் 3 ஆம் தேதி உயிரிழந்தார். 

வேலைக்குச் சென்றபின், திருமணத்திற்குப் பின் வந்த கடிதங்கள் அவர் மனைவியிடம் இருக்க வாய்ப்புண்டு. சித்த மருத்துவக் கல்லூரியில் படிக்கும்பொழுது மருத்துவர்கள் திரு.வேலுச்சாமி, திரு.பசியுதீன் அகமது, திரு.ஜெயபிரகாஷ் நாராயணன் போன்றவர்களை 'அண்ணன்' என்றுதான் அன்போடு அழைத்து பழகி வந்தார்.

சென்ற 31.05.2012 தேதியில் நோய்வாய்ப்பட்டு எங்கள் தாயார் மரணம்  எய்தியதை அடுத்து வீட்டிற்கு வெள்ளையடிக்க சில இடங்களை சுத்தம் செய்தோம். அப்பொழுது பல வருடங்களாக பூட்டியிருந்த அறையிலிருந்து சாமான்களை வெளியிலெடுத்தோம். கத்தையாக குருநாதனுக்கு வந்த கடிதங்கள் கிடைத்தன.

அவற்றில் ஒன்று மருத்துவர்.ஜெயபிரகாஷ் நாராயணன் அவரது ஆசிரியரும், தமிழ்நாடு இந்திய மருத்துவத்துறை இயக்குநருமான திருமிகு.பொன்.குருசிரோன்மணி அவர்களுக்கு எழுதி அனுப்பப்படாமல் (அல்லது அனுப்பியும் இருக்கலாம்) என் தம்பி குருநாதன் வசம் இருந்த கடிதம்.

Dr.P.Jeyaprakash Narayanan M.D,(Siddha)                                     Place: பாளையங்கோட்டை
                                                                                                                                   Date: 2/4/77

பெறுநர்:-
திருமிகு.Dr.பொன்.குருசிரோன்மணி B.A, G.C.I.M அவர்கள்,
தமிழ்நாடு இந்திய மருத்துவத்துறை இயக்குநர். 
பெருமதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு

  
இதய நிறைவான வணக்கம். இறைவன் திருவருளால் இங்கு நட்பும் சுற்றமும் நலம். இதுபோல் அங்கு தாங்களும் சுற்றமும் நட்பும் நலமுடன் திகழ இறைஞ்சுகிறேன்.
  
"விரிவுரையாளர்" பதவி உயர்வு ஆணை கிடைக்கப் பெற்றேன். தங்கள் அன்பிற்கும் அருளிற்கும் எனது நன்றி.

யார் எதைச் சொன்னாலும் நான் உங்களால் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு.

தனக்கே உரிய தனிக்கோட்பாடுகளை என்றும் தளரவிடாது ஏறுநடை போடுகின்ற அரிமா தாங்கள்.

"சித்த மருத்துவ வளர்ச்சிக் குழு" தனி அதிகாரி பொறுப்பிற்கு அழைத்தீர்கள் . பின் கல்லூரியிலேயே பணியாற்றப் பணித்தீர்கள். இரண்டிற்கும் சரி என்றேன். 

இருபது ஆண்டு காலமாக சித்த மருத்துவத் துறையின் வளர்ச்சிகள் - குறைபாடுகள் அனைத்தையும் நன்கு அறிந்தவர்கள் நீங்கள்.

இன்று கொள்கைகளை உருவாக்கி அதற்குச் செயல்வடிவம் தருகின்ற சிற்பியாக அமைந்திருக்கிறீர்கள்.

அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தொலைவிலிருந்து கேலி பேசியவர்கள் இப்போது நன்கு குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதைப்பற்றி எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. தெய்வீக நியதிகளை நான் உறுதியாக நம்புகிறேன்.

உங்களுக்கு நான் என்றும் தலைவணங்குகிறேன். அது எனது கடமை மட்டுமல்ல - உரிமையுங் கூட.

உங்களுக்குப் பக்கத்திலே நிற்கிறோம் என்ற நினைப்பில் இங்கே சில பரிவாரமூர்த்திகள் அவர்களுக்கும் பயப்படவேண்டும் என எண்ணுகிறார்கள் - அது எப்படி முடியும்! தெய்வத்திற்குக் கொடுக்கின்ற மதிப்பு தேர் இழுக்கிறவனுக்கும் கொடுக்க முடியுமா!

உங்கள் அன்பை வைத்து வியாபாரம் செய்கின்ற அசடுகள் சில அப்படி எதிர்பார்க்கின்றன.

இவர்கள் தேரை இழுக்காவிட்டால் இன்னொருவன் வந்து இழுக்கிறான். நீண்ட தொலைநோக்கோடு திட்டங்களை உருவாக்குகிறீர்கள். அதில் என்னை நீங்கள் "கலசமாக வைத்தாலும் சரி. மிதிபாயாகப் போட்டாலும் சரி" கொடுத்த பணியை முறையாகச் செய்கிறேன்.

அதிகாரத்திலிருக்கும்போது எனக்கு யார் யார் வேண்டுமென்றே கெடுதல்கள் புரிந்தார்களோ அவர்களிடமெல்லாம் இப்போது அன்பாகத்தான் இருக்கிறேன்.

அப்படி இருக்கையில் எனது வாழ்க்கைப் பாதையைத் தொடங்கி வைத்த உங்களிடம் எத்தகைய பற்றுக் கொண்டிருப்பேன் என்பதை உங்கள் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறேன்.

உங்களுக்கு இந்த மகிழ்ச்சியான நேரத்தில் என் நன்றியை - என் நெஞ்சத்தில் தாங்கள் குடிகொண்டு என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் முறை இவைகளை தங்கள் திருவடிகளில் சமர்ப்பித்திட எண்ணி எதையெதையோ எழுதி என் நெஞ்சம் எப்படிப்பட்டது என்று விளக்கம் கொடுத்துவிட்டேன்.

என்னை மாணவனாக, மணமகனாக, ஆசிரியனாக, தாங்கள் உயிரையே வைத்திருக்கும் தங்களால் உருவாக்கப்பட்ட இம்மருத்துவக் கல்லூரியில் ஒரு தொண்டனாக என்னை ஆக்கி, தாங்கள் ஆசீர்வதித்து தங்களால் இன்று பதவி உயர்வும் பெற்று நான் நிற்பதை நினைத்து தங்களுக்கு எத்தனை கோடி நன்றி - எப்படிப்பட்ட நன்றி கூற முடியும் என்று எழுத ஆரம்பித்தேன். கடைசியில் தங்களுக்கு ஒரு தலைமகனாக, உண்மை மாணவனாக, தாங்கள் இடும் கட்டளையைச் செய்யும் தொண்டனாக என்றென்றும் இருப்பேன் என உறுதி கூறி தாங்கள் நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி முடிக்கிறேன்.
                                                                          
                                                                                         நன்றியுள்ள -
                                                                   பு ஜெயப்பிரகாசு நாராயணன்.
                                                                                                                      2 /4 /77 .       

"விரிவுரையாளர்" பதவி உயர்வு ஆணை கிடைத்ததற்கு நன்றி தெரிவித்து 2/4/77 தேதியிட்டு எழுதிய பணிவான கடிதம். இது மிகுந்த நயத்துடன் முத்து முத்தான கையெழுத்துடன் எழுதப்பட்டது.

இக்கடிதம் ஆசிரியர் - மாணவர் நல்லுறவை இவ்வுலகத்திற்கு எடுத்துக் காட்டும் விதமாக அமைந்திருப்பதாக நான் கருதுகிறேன். மருத்துவர் ஜெயப்பிரகாசு நாராயணனின் விலாசமும், அலைபேசி எண்ணும் வலைத்தளத்தில் கண்டுபிடித்து நேற்று அவரிடம் பேசினேன். அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவர் சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் தற்சமயம் சென்னை அரும்பாக்கம், பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவில் நோயாளிகளை சந்திக்கிறார். அவரது அனுமதி பெற்று இக்கடிதத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன்.