Tuesday 26 June 2012

பூசைக்கேற்ற மலர்கள்


மலர்கள் கொண்டு பூசை செய்வதில் சில மரபுகளை ஆன்றோர்கள் பின்பற்றியுள்ளனர். அவற்றுள் எண்மலர்கள் கொண்டு பூசை செய்வதும் ஒன்றாகும். அவையாவன புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், ந்ந்தியாவர்த்தம், நீலோற்பவம், பாதிரி, அலரி, செந்தாமரை. இதனை புட்பவிதி பாடல் 20 ல்

இலகிய புன்னைவெள் ளெருக்குச் சண்பக
நிலவிய வலம்புரி, நீலம், பாதிரி
அலரிசெந் தாமரை யஷ்ட புஷ்பமாம்
புலரியம் போதொடெப் பொழுதும் சாத்தலாம்

என்று சொல்லப்படுகிறது.

எண்மலர்கள்:

புன்னை, சண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு ஆகியவை கோட்டுப்பூக்களாகும். இவை மரங்களிலிருந்து கிடைப்பவை.

வலம்புரி (நந்தியாவர்த்தம்), அலரி (அல்லி) இரண்டும் நிலப்பூ வகையாகும். புதர்ச்செடிகளிலிருந்து கிடைப்பவை.

நீலோத்பவம் (குவளை), தாமரை இரண்டும் நீர்ப்பூ வகையாகும். இவை குளங்கள் போன்ற நீர்த்தேக்கங்களிலிருந்து கிடைப்பவை.

காலை, உச்சிப்பொழுது, அர்த்தயாமம் என்று பூசைக்கு வெவ்வேறு மலர்கள் சொல்லப்பட்டிருந்தாலும், எக்காலத்திற்கும் பூசைக்குரிய மேற்கூறிய எண்மலர்கள் ஏற்புடையதாகும்.

திருவதிகை வீரட்டானேஸ்வரர்  கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்ட்த்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீரசைவக்  கோவில்களுள் ஒன்று. அப்பர், சம்பந்தர்,சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும்.

எண்மலர்கள் கொண்டு சிவபெருமானைப் பூசித்தால் கரும்புக் கட்டியில் தேன் கலந்ததைப் போல இனிமையும் தரும், வினைகளும் ஒழியும் என்கிறார் நாவுக்கரசர்.

எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி
மட்ட லர்இடு வார்வினை மாயுமால்
கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ
ரட்டனார்அடி சேரும் அவருக்கே

மலர்களைக் கிள்ளிப் பூசித்தால்  பாக்கியச் சிதைவு ஏற்படும் என்பதால், மலர்களைக் கிள்ளாமல் முழுவடிவில் அர்ச்சிப்பதே சிறந்தது. ஆகம விதிகளின்படி பூசையின் இறுதியில் எண்மலர்கள் கொண்டு அர்ச்சிப்பது உயர்ந்தது என்கிறார் நாவுக்கரசர்.

No comments:

Post a Comment