Tuesday 29 May 2012

உலகத்தோடு ஒட்ட ஒழுகல்

29.04.2012 ல் சுப்பிரமணிபுரத்தில் நடந்த அ.தி.மு.க பட்ஜெட் விளக்க கூட்டத்திற்கு மின்கம்பத்தில் கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கப்பட்டது. அருகில் உள்ள மதுரை கல்லூரி மேம்பாலத்தையும் மின்விளக்கு களால் அலங்கரித்திருந்தனர் என்ற செய்தியை வாசித்தேன்.

இதில் ஆச்சரியப்படவும், அதிர்ச்சி யடையவும் ஒன்றுமில்லை. ஏனென்றால் எல்லாத் தரப்பினரும் - அரசியல்வாதியானாலும் சரி, ஆன்மீகவாதியானாலும் சரி அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கும் சரி, கோவில் திருவிழாக்களானாலும் சரி தனியாக அனுமதி வாங்கி மீட்டர் வைத்து commercial tariff ல் மின்கட்டணம் செலுத்துவதில்லை. கவனிக்க வேண்டிய அலுவலர்களையும், அதிகாரிகளையும் கவனித்து அரசு மின்சாரத்தையே கொக்கி போட்டு எடுக்கின்றனர்.

மதுரை விளாங்குடியில் முக்கிய வீதி நேரு மெயின் வீதி. அரை கிலோமீட்டர் நீளமுள்ள பஸ் போக்குவரத்துள்ள முக்கிய வீதி. ஒரு முனையிலிருந்து வரிசையாக புறம்போக்கு இடத்தில் விநாயகர் கோயில், காளியம்மன் கோவில், முருகன் கோவில், பாலமுருகன் கோவில் என்று பல கோவில்கள்.

சமீபத்தில் பங்குனி - சித்திரை மாதத்தில் முருகன் கோவிலில் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடினார்கள். தெருவை அடைத்து பந்தல் போட்டு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பகலில் காலை முதல் இரவு வரை ஒலிபெருக்கியில் உச்சத்தில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. பள்ளிக் குழந்தைகள், வயதானோர், வியாபாரம் செய்வோர் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதை யாரிடமும் புகார் செய்ய முடியாது. பொல்லாப்பும் பகையும் வளரும். பகல் நேரத்தில் பெண்கள் ரோட்டின் இருபுறமும் பொங்கல் வைக்கிறோம் என்று போக்குவரத்திற்கு இடையூறு செய்தனர்.

கோவிலுக்கு நேர் மேலேயுள்ள மின்வாரிய வயரில் கொக்கி போட்டு பத்து நாட்களும் மின்சாரம் எடுக்கப்பட்டது. அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் தெரியாமலில்லை. மனிதராய்ப் பார்த்து தர்ம நியாயங்களுக்கு பயந்து, கட்டுப்பாட்டுடன் நடந்தால் மட்டுமே நம் நாடு உருப்படும்.

இன்றுள்ள சூழ்நிலையில் வாய்பொத்தி, கேள்வி கேட்காமல் அநியாயங்களைக் கண்டும் காணாமல், மௌனமாய்ப் பார்த்துக் கொண்டே வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இதைத்தான் வள்ளுவர் 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்று சொன்னாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
திருக்குறள் 140, அதிகாரம் 14 ஒழுக்கமுடைமை  

Friday 4 May 2012

பயணிகளின் நரகம்

டோக்கியோ நகர ரயில் பயணம் அவ்வளவு எளிதல்ல. உற்சாகம் ஊட்டுவதுமல்ல. ஜப்பான் ரயில்களில் தினமும் 8.7 மில்லியன் பயணிகள் பயணிக்கிறார்கள். ரயில் பெட்டிகளின் கொள்ளளவுக்கு மேல் இரண்டு மடங்கு பயணிகள் பயணிக்க வேண்டியிருப்பதால், ரயில் பெட்டிகளில் உள்ள இடங்களில் அனைத்துப் பயணிகளையும் அடைக்க என்றே 'ஓஷியா' என்றழைக்கப்படும் வெள்ளைக் கையுறை அணிந்த பணியாட்கள் இருக்கிறார்கள்.

ரயில் பெட்டிக்குள் அழுத்தித் தள்ளும் பணியாட்கள், ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும், ஒவ்வொரு பெட்டிக்கு முன்னும்  அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். பயணிகளை உள்ளே திணித்த பின்புதான் கதவுகள் சாத்திக் கொள்ளும், ரயிலும் கிளம்பிச் செல்லமுடியும். 

முதன்முதலில் ஷிஞ்சுகு என்ற ரயில் நிலையத்தில் மாணவர்கள் பகுதிநேர 'பயணிகள் உதவியாளர்கள்' என்று பணி புரிந்தார்கள். பின் ரயில் நிலைய பணியாளர்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டார்கள். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மோசமான நடத்தையுள்ள ஆண்களும், பெண்களும் திருடுவதும், பாலியல் தொல்லை தருவதும் உண்டு.


Wednesday 2 May 2012

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த.. புனித சவேரியார் கல்லூரி மாணவர்கள்

பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியின் ஒரு வருட வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. கல்லூரியில் ஆசிரியர்களிடமும், மாணவர் விடுதியில் நண்பர்களிடமும் விடைபெறும் நேரம். நண்பர்களின் விலாசமும், நட்பிற்கான ஒரு நற்செய்தியும் பெற கையொப்ப ஏடு (Autograph) ஏந்தி முடிந்த வரை பெற்றோம். ஒரு சில ஆசிரியர்களின் அறிவுரையுடன் கையொப்பமும் பெற்றோம்.

அந்த வருடம் புகுமுக வகுப்பில் படித்த எங்களில் சுமார் 20 பேர் வரை மதுரை மருத்துவக் கல்லூரியிலும், 20 பேர் வரை மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியிலும் 1961 சூன் மாதம் சேர்ந்தார்கள். நான் கர்நாடக மாநிலம் மணிப்பாலில் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். விடுமுறையில் மதுரை வரும்பொழுது ஓரிரு முறை மதுரையில் மருத்துவக் கல்லூரியிலும், பொறியியல் கல்லூரியிலும் நண்பர்களைச் சந்தித்து இருக்கிறேன்.

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் படித்தவர்களில் என் நினைவிலும் தொடர்பிலும் உள்ளவர்கள் அரசு போக்குவரத்துத் துறையில் உயர்பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பொறியாளர் ச.ரெங்கநாதன் மற்றும் மின்வாரியத்தில் மேற்பார்வைப் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற வெ.அழகர்சாமி ஆவார்கள். பொறியாளர் க.பாக்கியராமன் மதுரை மாகராட்சியில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்தார். (இவர் மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் திரு.முத்து அவர்களின் மருமகன்).

பொறியாளர் R.பூர்ணலிங்கம் B.E (EEE) படிக்கும்பொழுதே IAS தேர்வுக்கு தன்னை தயார் செய்தார் என்று அவருடன் படித்த நண்பர் வெ.அழகர்சாமி சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் நினைத்தது போலவே IAS தேர்வாகி அரசு ஆட்சிப் பணியில் பலதுறைகளில் பணியாற்றிப் பிரகாசித்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

மருத்துவராகி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் நான் உதவி மருத்துவராகப் பணியில் சேர்ந்த நேரம். வருடம் 1970 சூலை மாதம். தங்குவதற்கு இடம் தேடி வந்தபோது, தற்செயலாக எதிரில் வந்தவரைப் பார்த்து நின்றேன். சில ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த அவர்தான் என் நண்பர் பொறியாளர் வெ.அழகர்சாமி. அன்றிலிருந்து நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களானோம்.