Wednesday 2 May 2012

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த.. புனித சவேரியார் கல்லூரி மாணவர்கள்

பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியின் ஒரு வருட வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. கல்லூரியில் ஆசிரியர்களிடமும், மாணவர் விடுதியில் நண்பர்களிடமும் விடைபெறும் நேரம். நண்பர்களின் விலாசமும், நட்பிற்கான ஒரு நற்செய்தியும் பெற கையொப்ப ஏடு (Autograph) ஏந்தி முடிந்த வரை பெற்றோம். ஒரு சில ஆசிரியர்களின் அறிவுரையுடன் கையொப்பமும் பெற்றோம்.

அந்த வருடம் புகுமுக வகுப்பில் படித்த எங்களில் சுமார் 20 பேர் வரை மதுரை மருத்துவக் கல்லூரியிலும், 20 பேர் வரை மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியிலும் 1961 சூன் மாதம் சேர்ந்தார்கள். நான் கர்நாடக மாநிலம் மணிப்பாலில் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். விடுமுறையில் மதுரை வரும்பொழுது ஓரிரு முறை மதுரையில் மருத்துவக் கல்லூரியிலும், பொறியியல் கல்லூரியிலும் நண்பர்களைச் சந்தித்து இருக்கிறேன்.

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் படித்தவர்களில் என் நினைவிலும் தொடர்பிலும் உள்ளவர்கள் அரசு போக்குவரத்துத் துறையில் உயர்பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பொறியாளர் ச.ரெங்கநாதன் மற்றும் மின்வாரியத்தில் மேற்பார்வைப் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற வெ.அழகர்சாமி ஆவார்கள். பொறியாளர் க.பாக்கியராமன் மதுரை மாகராட்சியில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்தார். (இவர் மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் திரு.முத்து அவர்களின் மருமகன்).

பொறியாளர் R.பூர்ணலிங்கம் B.E (EEE) படிக்கும்பொழுதே IAS தேர்வுக்கு தன்னை தயார் செய்தார் என்று அவருடன் படித்த நண்பர் வெ.அழகர்சாமி சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் நினைத்தது போலவே IAS தேர்வாகி அரசு ஆட்சிப் பணியில் பலதுறைகளில் பணியாற்றிப் பிரகாசித்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

மருத்துவராகி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் நான் உதவி மருத்துவராகப் பணியில் சேர்ந்த நேரம். வருடம் 1970 சூலை மாதம். தங்குவதற்கு இடம் தேடி வந்தபோது, தற்செயலாக எதிரில் வந்தவரைப் பார்த்து நின்றேன். சில ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த அவர்தான் என் நண்பர் பொறியாளர் வெ.அழகர்சாமி. அன்றிலிருந்து நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களானோம்.


No comments:

Post a Comment