Saturday 28 April 2012

நீல நிலவு

ஒவ்வொரு ஆங்கில மாதத்தில் வரும் 'பௌர்ணமி நிலவு'க்கு ஒரு பெயர் குறிப்பிடப்படுகிறது.
ஜனவரி      -  Wolf Moon         -   ஓநாய் பௌர்ணமி நிலவு
பிப்ரவரி   -  Snow Moon        -    வெண்பனி பௌர்ணமி நிலவு
மார்ச்           -  Worm Moon       -   புழு பௌர்ணமி நிலவு  
ஏப்ரல்          -  Pink Moon          - இளஞ்சிவப்பு பௌர்ணமி நிலவு
மே                -  Flower Moon      -  மலர் பௌர்ணமி நிலவு
ஜூன்           - Strawberry Moon -  செம்புற்றுப்பழ பௌர்ணமி நிலவு
ஜூலை       - Buck Moon          -  ஆண் மான் பௌர்ணமி நிலவு
ஆகஸ்ட்     - Sturgeon Moon   -   கோழிமீன் (சுறா வடிவம்) பௌர்ணமி நிலவு
செப்டம்பர்  - Harvest Moon     -   சாகுபடி பௌர்ணமி நிலவு
அக்டோபர்  - Hunter's Moon    -   வேடரின் பௌர்ணமி நிலவு
நவம்பர்        -  Beaver Moon     -   நீர்நாய் பௌர்ணமி நிலவு
டிசம்பர்         -  Cold Moon        -   குளிர் பௌர்ணமி நிலவு

வருடத்தில் ஏதாவது ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமி வர வாய்ப்புண்டு. இரண்டாவதாக வரும் பௌர்ணமிக்கு (Blue Moon) ’நீல நிலவு’ என்று பெயர்.

Wednesday 25 April 2012

'சுற்றி வளைத்துப் பேசுறது' என்ற சொற்றொடர்

'சுற்றி வளைத்துப் பேசுறது' என்ற சொற்றொடர் - ஆங்கிலத்தில் இதை 'Beating around the bush' என்பார்கள். ஒருவர் பிறரிடம் தனக்கு ஒரு காரியம் ஆகவேண்டுமென்றல், நேரடியாகத் தன் தேவையைத் தெரிவிக்காமல் தனக்கு ஆர்வமில்லாதது போல பேசிக் கொண்டே இருப்பார்கள்.

'நீ என்னதான் சொல்ல வருகிறாய்? உனக்கு என்ன வேண்டும் என்று நேராகத் தெளிவாகச் சொல்' என்றதும் தனக்கு ஆக வேண்டிய தேவையைச் சொல்வார்கள். இத்தகைய சுற்றி வளைத்துச் சொல்லும் பாங்கையே 'He is beating around the bush" என்பார்கள்.

Batfowler
இந்த ஆங்கிலச் சொற்றொடர் எப்படி வந்தது என்று பார்ப்போம். முற்காலத்தில் இளைஞர்கள் அவ்வப்பொழுது இரவு நேரங்களில்   அருகிலுள்ள புதர் நிறைந்த அடர்ந்த காட்டுப் பகுதிகளில் பறவைகளை வேட்டையாடச் செல்வர். இது ஒரு சவாலான விளையாட்டாகும். இந்த வகையான வேட்டையை Batfowling (Sports) விளையாட்டு என்றும், வேட்டையாடுபவர்களை Batfowlers என்றும் சொல்கிறார்கள்.

சாதாரணமாக இவர்கள் உறங்கும் பறவைகளையே குறி வைக்கிறார்கள். ஆனால் பறவை வேட்டையில் உண்மையான ஈடுபாடுள்ளவர்கள் அப்பறவைகள் எதிர்பாராத சமயத்தில் தாக்கிக் கொல்ல விரும்புவதில்லை. சில நேரங்களில் சில பறவைகள் எச்சரிக்கையாக மற்றவர்களுக்கு எளிதில் தென்படாதபடி, புதர்கள் நிறைந்த பகுதிகளில் கூடு கட்டி மறைந்திருக்கும்.

எனவே, இரவில் பறவை வேட்டைக்குச் செல்பவர்கள் சில பணியாளர்களையும் உடன் அழைத்துச் செல்வர். அவர்களை Beaters என்பார்கள். அவர்களின் பணி வேட்டையாடுபவர்களுக்கு உதவியாக பறவைகள் இருக்கும் புதர்களில் தடி கொண்டு அடித்தபடி பறவை கூட்டங்களைக் கலைத்துவிட வேண்டும்.

திடுக்கிட்ட பறவைகள் விழித்து பீதியில் அங்குமிங்கும் பறக்கும். அப்பொழுது கண்கள் கூசும் விளக்கின் ஒளி்யை அவைகளின் மேல் செலுத்தி, திகைப்பில் பறக்க முடியாத சந்தர்ப்பத்தில் வேட்டையாடுபவர்கள் பறவைகளை மட்டையால் அடித்து உணர்விழக்கச் செய்து பிடித்துவிடுவார்கள். மனச்சாட்சியுள்ள ஒரு சிலர் மட்டையுடன் பொருத்தியுள்ள வலையின் உதவியுடன் பறவைகளை லாவகமாகப் பிடித்துவிடுகிறார்கள்.

அதுபோல, பிறரிடம் தனக்கு ஒரு காரியம் சாதித்துக் கொள்ள விரும்பும் ஒருவர் சுற்றி வளைத்துப் பேசுவார். சாமர்த்தியமாக உண்மையை மறைத்து அவருக்கு அக்கறையில்லாதது போல நடந்து கொள்வார். ஆனால் காரியமே கண்ணாயிருந்து நினைத்ததை சாதித்துக் கொள்வார். இப்படியாகத்தான் 'சுற்றி வளைத்துப் பேசுறது' (Beating around the bush) என்ற சொற்றொடர் பேச்சு வழக்கில் புழக்கத்திற்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஞாயிறு, 05 ஜூன் 2011 அன்று ’கீற்று’ வலைத் தளத்தில் வெளியான எனது கட்டுரை.

நான் அறிந்த நல் உள்ளம் கொண்ட மருத்துவர்கள்

3. மருத்துவர் T.துரைராஜன், குழந்தைகள் அறுவை மருத்துவர்

1970 - 74 ஆம் ஆண்டுகளில் நான் திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் உதவி மருத்துவராகப் பணியாற்றிய நேரம். என் இரண்டாவது குழந்தை - பெண் குழந்தை - குறைப் பிரசவமாக வீட்டிலேயே பிறந்தது. குழந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதில் மதுரை அரசு மருத்துவமனையில் பேராசிரியர் K.A.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் காண்பித்து வந்தோம். அவர் குழந்தைக்கு Congenital heart disease with cutis laxa இருப்பதாகச் சொல்லி மருத்துவம் செய்தார்.

cutis laxa குறைபாட்டினால் குழந்தை தொடர்ந்து அழும்பொழுது Inguinal hernia ஏற்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ நண்பர்கள் குழந்தையைக் கவனித்து வந்தாலும், மதுரையிலுள்ள குழந்தைகள் அறுவை சிகிட்சைத் துறையின் மூத்த மருத்துவர் T.துரைராஜனிடம் காண்பித்து விட முடிவு செய்தேன்.

அவரிடம் அறிமுகப்படுத்த எங்கள் குடும்ப மருத்துவர் பணிக்கர் அவருடைய காரிலேயே வடக்குச் சித்திரை வீதியிலுள்ள மருத்துவர் T.துரைராஜனின் கிளினிக்கிற்கு எங்களை - நான், என் மனைவி, நான்கு மாதக் குழந்தை, என் அப்பா - அழைத்து வந்தார்.

அறிமுகம் ஆனதும் மிக இளம் மருத்துவரான என்னிடம் அவர் சொன்ன முதல் செய்தி, 'நீங்களும் மருத்துவராக இருக்கிறீர்கள். நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் என்னிடம் வந்து குழந்தையைக் காண்பிக்கலாம். பீஸ் மட்டும் நான் உங்களிடம் வாங்க மாட்டேன், கொடுக்க முயற்சிக்காதீர்கள்' என்பதே.

அதன்பின் பலமுறை அவருடைய கிளினிக்கிலும், அரசு மருத்துவ மனையின் அவர் துறையிலும் காண்பித்து வந்தேன். அவ்வப்பொழுது குடலிறக்கத்தை உள்ளே அழுத்தி சரி செய்தாலும், ஒரு சந்தர்ப்பத்தில் அறுவை சிகிட்சை செய்ய அவர் முடிவு செய்தார். உதவி மயக்க நிபுணரிடம், இந்த நான்கு மாதக் குழந்தைக்கு பொது மயக்கம் (General anesthesia) கொடுக்கலாமா என்ற ஆலோசனைக்கு சென்ற போது, 'இதை நாங்கள் சொல்ல முடியாது, எங்கள் Chief தான் முடிவு செய்ய வேண்டும்' என்று சொல்லி விட்டார்கள்.

அப்பொழுது இருந்த மயக்க இயல் தலைமை மருத்துவர் திரு.தி.சீனிவாசன் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் வேண்டிய நண்பரின் மகன் என்பதால் அவர் வீட்டிற்கே குழந்தையைப் பரிசோதிக்க கொண்டு சென்றோம். குழந்தையைப் பரிசோதித்த அவர் இந்தக் குழந்தைக்கு 90% ஆபத்து உண்டு, பொது மயக்கம் (General anesthesia) கொடுத்தால் 100% ஆபத்து உண்டு என்றும் சொல்லி விட்டார்.

ஆனாலும் மருத்துவர் T.துரைராஜன் இறுதியாக Local anesthesia விலேயே அறுவை சிகிட்சை செய்ய முடிவெடுத்து, அழகிய மிகச் சிறிய incision மூலமாக அருமையாக அறுவை சிகிட்சை செய்து Hernia வை சரி செய்தார். அடுத்த 5 வது மாதத்தில் மறுபக்கத்தில் ஏற்பட்ட Hernia வும் சரி செய்யப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டமாக 6 வது மாதத்தில் Prolapse rectum ஏற்பட்டு குழந்தை இறந்து விட்டது.

தன் நீண்ட அனுபவத்தின் காரணமாக மிகவும் திறமையுடன் செயல்பட்டு பல குழந்தைகளைக் காப்பாற்றிய மருத்துவர் மிகவும் வணங்கத் தக்கவர். அவர் இன்றில்லாவிட்டாலும் அவர் புகழ் அவர் சென்றவிடமெல்லாம் விளங்கும்.   

Tuesday 24 April 2012

கண்தானம் வழங்க உறுதிமொழி மட்டும் போதாது

17.04.2012 தேதியிட்ட தினமலர் செய்தித்தாளில் ஆந்திரா விஜயநகரம் மாவட்டம், சிபுடுபள்ளி அடுத்த மெட்டபள்ளி கிராமத்தில் 'ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் கண்தானம்' என்ற தலைப்பில் செய்தி வாசித்தேன்.

தலைப்பிலேயே தவறு இருக்கிறது. தாங்கள் இறந்த பின் கண்தானம் வழங்க முன் வருவதாக உறுதிப் பத்திரத்தில் கையொப்பம் இட்டுள்ளனர் என்பதே உண்மையான செய்தியாக இருக்க வேண்டும்.

மேலும், இதுவரை இப்பகுதியில் 42 கிராமங்களைச் சேர்ந்த 55 ஆயிரம் பேர் கண்தானம் வழங்க உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்து இட்டிருப்பதாக தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்திருக்கிறார்.

இவர்களில் எத்தனை பேரிடம் இருந்து இறந்த பின் கண் தானம் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லச் சொல்லுங்கள். இன்றிலிருந்து ஒரு மாதத்தில், மூன்று மாதத்தில், ஆறு மாதத்தில், ஒரு வருடத்தில் எத்தனை பேர் இறந்தபின் கண்கள் தானம் அளிக்கிறார்கள் என்ற கணக்குத் தேவை. இல்லையென்றால் இவ்வளவும் வெறும் விளம்பரமே. இங்கு தியாகம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

நான் கண் மருத்துவத் துறையில் மதுரை, தஞ்சாவூர், ஈரோடு, திருச்சி போன்ற வெவ்வேறு ஊர்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் பணியிலிருந்திருக்கிறேன். மதுரை அரசு கண் மருத்துவமனையில் சுமார் 500  பேர் கண்தானம் பதிவு செய்திருப்பதாகக் கொள்வோம். இதில் எத்தனை பேர் கண்கள் உண்மையில் இறந்தபின் தானம் செய்யப்பட்டிருக்கின்றன? ஒன்று கூட இல்லை.

கண்தானம் வழங்க உறுதிமொழி மட்டும் போதாது. எனவே கண்தானம் தருவதாகப் பதிவு செய்வதை விட, ஒவ்வொருவரும் தங்கள் முயற்சியால் வருடம் ஒருமுறையாவது இரண்டு கண்கள் தானமாகப் பெற்றுத் தந்து புண்ணியம் பெறுங்கள். 

எழுத்து.காமில் இன்று நான் வெளியிட்டுள்ள இக்கட்டுரைக்கு பின்னூட்டமாக,  ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரிமா சங்கத்தைச் சேர்ந்த முருகபூபதி என்பவர் தெரிவிக்கும் நற்செய்தி:

 இந்த வருடம் 60 ஜோடி கண்கள் தானம் பெறுவது என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வரும் சங்கம் இதுவரை 52  ஜோடி கண்கள் தானம் பெற்றுள்ளார்கள் என்று தெரிவிக்கிறார். கருவிழி (Corneal disease or opacity) நோயால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்த சுமார் 100 பேருக்காவது தானமாகப் பெற்ற இக் கண்களின் கருவிழி (Cornea) பொருத்தப்பட்டு பார்வை பெற்றிருப்பார்கள் என்று நம்புகிறேன். 

கருவிழியில் பூ விழுந்த குழந்தையின் கண்கள்
கருவிழி மாற்று அறுவை சிகிட்சை செய்யப்பட்ட வேறொருவரின் கண்
பின்குறிப்பு:  கருவிழி (Cornea) என்பது நிறமில்லாதது. ஒளி ஊடுருவக் கூடிய  கண்ணாடி போன்ற அமைப்பு கொண்ட கண்ணின் முன்பகுதியாகும்.

பெருந்துறை அரிமா சங்கத்தினரின்  தொண்டு வளர வாழ்த்துக்கள்.

Monday 9 April 2012

நான் அறிந்த நல் உள்ளம் கொண்ட மருத்துவர்கள்

2. மருத்துவர் சுவாமிநாதன், சொக்கப்ப நாயக்கன் தெரு, மதுரை

வடக்கு சித்திரை வீதியிலிருந்து வடக்கு ஆவணி மூல வீதி செல்லும் சிறிய சந்து சொக்கப்ப நாயக்கன் தெரு. எனக்குத் தெரிந்து அங்கு 1950 - 70 களில் மருத்துவர் சுவாமிநாதன் என்றொரு முதிய மருத்துவர் இருந்து வந்ததாக என் தகப்பனார் சொல்லியிருக்கிறார்.

நானும் ஓரிரு முறை பார்த்ததாக நினைவு. அவரிடம் என் அப்பாவும் மருத்துவத்திற்கு சென்றிருக்கிறார்கள். நோயின் தன்மையை அறிவதிலும், சிகிட்சை செய்வதிலும் வல்லவர். என் பெரியப்பா S.சோமசுந்தர முதலியார் அவர்களின் குடும்ப டாக்டர்.

என் அப்பா இளம் வயதில் சில நேரங்களில், 'நெஞ்சை ஏதோ அழுத்தி நெஞ்செலும்புகள் நொறுங்கி உயிர் போய்விடும்போல உணர்கிறேன்' என்று மருத்துவர் சுவாமிநாதனிடம் சொல்வார்களாம். மருத்துவர் சோதித்து விட்டு, 'உங்களுக்கு எல்லாம் நன்றாய் இருக்கிறது. இருந்தாலும் நீங்கள் வேறு யாரிடமாவது பரிசோதித்து என்ன நோய் என்று மட்டும் தெரிந்து வாருங்கள், நான் மருத்துவம் செய்கிறேன்' என்பாராம். இப்பொழுது என் அப்பாவிற்கு 88  வயதாகிறது. முதுமையில் சிரமப்படுகிறார்.

என் அப்பா 1948 லிருந்து சபரிமலை அய்யப்ப தரிசனம் சென்று வருவார்கள். அவருடைய குருநாதராக குமாரம் என்ற ஊரில் வெற்றிலை பாக்கு பெட்டிக்கடை நடத்தி வந்த சுந்தரம் பிள்ளை என்பவர் வசித்து வந்தார். ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் என் அப்பா, நான், இன்னும் ஓரிரு ஐயப்ப சாமிகள் குமாரம் சென்று, அவர் வீட்டில் இருமுடி கட்டி, பூஜை செய்தபின் சுந்தரம் சாமியை காரில் சோழவந்தான் அழைத்து வருவோம்.

அவர் வீட்டில் கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்வதே ஆனந்தமாக இருக்கும். ஸ்வாமியேய்.. என்று கண்கள் சொருக அழைப்பதில் ஐயப்பனே மனம் இரங்கி, இறங்கி வந்துவிடுவார் என்று தோன்றும். சோழவந்தான் மாரியம்மன் கோவிலில் எங்களுக்கு அவர் இருமுடி கட்டி நாங்கள் காரில் சபரிமலை செல்வோம்.

அப்படிப்பட்டவர்க்கு ஒரு கெட்ட பழக்கம். மறைவாகச் சென்று அடிக்கடி பீடி புகைப்பார். அவருக்கு குழந்தைகள் ஏராளம், எல்லாம் நல்ல குணமுள்ள பெண் குழந்தைகள். அவருக்கு திடீரென்று காய்ச்சலும், இருமலும் வந்து விட்டது. என் அப்பா எங்கள் குருநாதரை மருத்துவர் சுவாமிநாதன் அவர்களிடம் அழைத்துச் சென்றார்.

அவர் பரிசோதித்ததில் காசநோய் இருப்பது தெரிந்தது. பீடி பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் சிகிட்சை செய்தார். சுந்தரம் பிள்ளையும் ஆறுமாதத்தில் நல்ல குணமடைந்தார்.

1966 ல் நான் மருத்துவ இறுதியாண்டில் இருக்குபோது, என் தாயாருக்கு ஒன்பதாவதாக ஓர் ஆண் குழந்தை பிறந்தது. உடல் நலமில்லாமல் அரசு மருத்துவமனை குழந்தைப் பிரிவில் சேர்த்திருந்த பொழுது மருத்துவர் சுவாமிநாதன் அவர்கள் மகள் மீனாட்சி பயிற்சி மருத்துவராக இருந்தார் என்று என் நினைவு. இப்பொழுது அவர் இங்கில்லை.

மருத்துவர் சுவாமிநாதன் 1972 க்குப் பின் இறந்து விட்டார் என அறிகிறேன். இவர் அன்புடனும், கண்டிப்புடனும் சிகிட்சை செய்வதில் வல்லவர், நேர்மையானவர்.

Saturday 7 April 2012

புனித சவேரியார் கல்லூரியில் விடுதி வாழ்க்கை

ஃபாதர்.அந்தோணிசாமி உதவி முதல்வராகவும், விடுதி  வார்டனாகவும் இருந்தார். அவரைப் பார்த்தால் எங்களுக்கு பயம். அவர் வான சாஸ்திரத்தில் அனுபவம் உள்ளவர் என்று சொல்வார்கள். பிரதர்.பரஞ்சோதி உதவி வார்டனாக இருந்தார். 

வார்டன் ஃபாதர் தினமும் இரண்டு வேளை விடுதியை முழுவதும் சுற்றி வந்து கண்காணிப்பார். அப்பொழுது மாணவர்கள் எல்லோரும் அவரவர் அறைகளில் படித்துக் கொண்டிருக்க வேண்டும். ஒரு சில நேரங்களில் மாணவர்கள் தூங்கினாலும் பரவாயில்லை. பேசி அரட்டை அடிக்கக் கூடாது.

ஆனால் நான் என் அறை நண்பர்களிடம் பலநேரம் பேசிக் கொண்டிருப்பேன்.  வார்டன் வருவது தெரிந்ததும் சப்தமில்லாமல் படுத்து விடுவேன். வார்டன் அறைக்குள் நுழைந்து, விழித்திருக்கும் மற்ற இருவரையும் காலையில் வரச் சொல்லி 'எட்டணா அபராதம்' விதிப்பார். அவர்களுக்கு என் மேல் கோபம்!

நாங்கள் படிக்கும்போது சவேரியார் கல்லூரியில் பயில்பவர்களை Slaves of Xavier's college என்று சொல்வார்கள். நான் ஒருபோதும் அப்படி உணர்ந்ததில்லை. கல்லூரி வகுப்பிற்கு ஒழுங்காகச் சென்றும், விடுதி விதிமுறைகளின்படியும் நடந்து கொண்டால், அங்கே அடிமைத்தனத்திற்கு ஏது இடம்? மாலை வேளைகளில் விடுதி வளாகத்திலேயே இரட்டையர் அல்லது ஐவர் பூப்பந்து விளையாட்டு  விளையாடுவோம். அப்பொழுது Bsc படித்து வந்த முஸ்லிம் நண்பரொருவர் குழுத் தலைவராக இருந்தார்.  

உணவகத்தைப் (Mess) பற்றி சொல்ல வேண்டும். விடுதிக்குச் சென்ற புதிதில் சாப்பிடவே பிடிக்காது. அங்கு காலை வேளையில் இலை போட்டதும் பூரி கிழங்குடன், இட்லி, வெங்காய ஊத்தப்பம் (சிறியது), உப்புமா, முழு ரொட்டி (ஜாமுடன்) இவைகளில் ஏதாவது அட்டவணைப்படி இருக்கும். பூரி, இட்லி, வெங்காய ஊத்தப்பம் நான்கு நான்காக இரண்டு முறை பரிமாறுவார்கள்.

முதலில் விடுதிக்கு சென்ற சில நாட்களில் மூன்று, நான்கு இட்லிகளுக்கு மேல் சாப்பிட முடியாது. போகப்போக இட்லி, ஊத்தப்பம் பிய்த்துப் போட்டு, குளம் கட்டி சாம்பார் அல்லது சட்னி ஊற்றி எட்டு இட்லி, எட்டு ஊத்தப்பம் என்று சாப்பிடப் பழகி விட்டோம். பூரி கிழங்கும் சுவையாக இருக்கும். ரொட்டியும், ஜாமும் பிரமாதமாக இருக்கும். மதியச் சாப்பாடும் மிக சுவையாக இருக்கும். ஒரு மாதத்திற்கு மொத்த சாப்பாடு செலவு ரூபாய் 34 -35 க்குள்தான் இருக்கும். இதை ஆனந்தவிகடன் விகடன் மேடை பகுதியில் நண்பர் வை.கோ வும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.    

ஒரு நாள் என் புகுமுக வகுப்பு நண்பரும் (கணிதப் பிரிவு), என் உறவினருமான ச.ரெங்கநாதன் என் அறைக்கு வந்து ஒரு பொட்டலத்தைக் கொடுத்தார். அதை வைத்திருக்கச் சொல்கிறார் என்று நான் பிரிக்காமல் பத்திரமாக வைத்திருந்தேன். அடுத்த நாள் காலையில் வந்து 'சாப்பிட்டீர்களா' என்றார்.

எனக்குப் புரியாமல் கேட்டபோது 'நேற்று விநாயகர் சதுர்த்தி. என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். உங்களுக்கும், நண்பர்களுக்கும் கொழுக்கட்டை கொடுத்திருந்தார்கள்' என்றார். எடுத்துப் பார்த்தேன், ஊசி விட்டது. நாங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!

உடல்தானம் - கண்தானம்

எழுத்து.காமில் சேதுராமலிங்கம் என்பவர் 'பகட்டு மனிதன் இறந்தால்???' என்று கவிதை பதிவு செய்திருந்தார். அதை வாசித்த மற்ற எழுத்து தளத்தின் கவிஞர்கள் சிலர் உடல்தானம் - கண்தானம் பற்றி சில விபரங்கள் என்னிடம் கேட்டிருந்தார்கள். அதற்கு பதிலாக நான் அளித்த கட்டுரையை வலைப்பூவில் அளிக்கிறேன்.

மனிதர்கள் இறந்தபின் உடல்தானம் செய்யலாம். உடல்தானம் செய்ய விரும்புபவர்கள் தங்கள் மனைவி, கணவன், மகன், மகள் போன்ற நெருங்கிய உறவினர்களிடம் தெரிவித்தும், உயிலாக எழுதி வைத்தும் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். இறந்தபின் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் அல்லது உடற்கூறு (Anatomy) துறை சார்ந்த பொறுப்பிலுள்ள மருத்துவரிடம் தெரிவித்து ஒப்புதல் கொடுத்தும் தானமளிக்கலாம்.

கடந்த ஒரு வருடத்துக்குள் என் நண்பரின் நெருங்கிய நண்பர் விருதுநகரில் வசித்த Er.தங்கமணி (இவர் எனக்கும் நண்பர்தான்) என்பவர் உடலை மதுரை மருத்துவக் கல்லூரி உடற்கூறு (Anatomy) துறைக்கு தானமளித்ததாக அறிந்தேன்.

அடுத்தது கண்தானம். உயிரோடிருக்கும் போது கண்களைத் தானம் செய்ய முடியாது. ஒருவர் இறந்த சுமார் 6 மணி நேரத்திற்குள் கண்தானம் பெற்றால் நல்லது. இதற்கும் தானம் செய்பவர் மேற்கூறிய நெருங்கிய உறவினரிடம் தெரிவித்திருக்க வேண்டும். அல்லது நெருங்கிய உறவினரின் ஒப்புதல் பேரிலும் கண்தானம் செய்யலாம்.

இறந்தவரின் கண்களை மூடி வைத்திருக்கவேண்டும். ஈரமான பஞ்சினால் கண்கள் இமையின் மேல் வைத்து கண்ணின் கருவிழி உலர்ந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். அருகிலுள்ள மருத்துவமனையின் கண் பிரிவிற்கு தெரிவித்தால் மருத்துவர்களை அனுப்பி சில நிமிடங்களில் இரு கண்களையும் எடுத்து, எடுத்தது தெரியாமல் கண் இமைகளை மூட்டி விடுவார்கள்.

டாக்டர்.வ.க.கன்னியப்பன்,
     (முன்னாள் கண் மருத்துவ பேராசிரியர்)
 மதுரை பெரிய ஆஸ்பத்திரி கண் பிரிவில் 1966 ல் இருந்து கண்தானம் பெற்று கருவிழி மாற்று அறுவை சிகிட்சை செய்யப்படுகிறது. கருவிழி என்று சொல்லப்படுகிற cornea நிறமில்லாதது. இதில் ஏற்படும் புண், பூ விழுதல், பிறவியில் ஏற்படும் Dystrophy என்ற நோய்களின் போது மட்டும் இந்த சிகிட்சை செய்யப்படுகிறது. Dr.G.வெங்கடசாமி அவர்கள் தொடங்கி, Dr.S.தியாகராஜன், Dr.சாமுவேல் ஞானதாஸ், நான், Dr.P.தியாகராஜன் (இன்றைய கண் துறைத் தலைவர்) மற்றும் Dr.சந்திரகுமார் (கண் மருத்துவ உதவிப் பேராசிரியர்) போன்றவர்கள் செய்திருக்கிறார்கள்.


அரவிந்த் கண் மருத்துவமனை 1976 ல் Dr.G.வெங்கடசாமி அவர்களால் தொடங்கப்பட்டது. கண் சம்பந்தமான அனைத்து மருத்துவ சேவைகள் செய்வதுடன், கண்தானம் பெறப்பட்ட கண்கள்   ஆயிரக்கணக்கானவர்களுக்கு Dr.M.சீனிவாசன், Dr.N.வெங்கடேஷ் பிரஜ்னா மற்றும் குழுவினர்  இங்கும் கருவிழி மாற்று அறுவை செய்திருக்கிறார்கள், செய்து கொண்டு இருக்கிறார்கள்.

சௌராஷ்டிரா வகுப்பைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர் தனி முயற்சியாக இறந்தவர்கள் குடும்பத்தை அணுகி நிறைய கண்தானம் பெற்றுத் தந்திருக்கிறார். அவர் செயல் மிகுந்த பாராட்டுக்குரியது.

Friday 6 April 2012

நான் அறிந்த நல் உள்ளம் கொண்ட மருத்துவர்கள்

மருத்துவம் செய்யும் தொழில் புனிதமானது. ஆனாலும் பல வருடங்களுக்கு முன்பாகவே மருத்துவமும் வியாபாரமாகி விட்டதென்று கர்நாடக மாநிலம், மங்களூர் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி மற்றும் வென்லாக் தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய என் காது, மூக்கு, தொண்டை பேராசிரியர் டாக்டர்.சத்தியசங்கர் அடிக்கடி கூறுவார். நம்மைத் தேடி வரும் நோயாளிகளின் முகத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக அவர்கள் சட்டைப் பாக்கட்டையும், பர்சையுமே பார்க்கிறோம் என்பார். அது இன்று நூற்றுக்கு நூறு உண்மை.

ஆனாலும் எனக்குத் தெரிந்த மனித நேயம் கொண்ட மருத்துவர்கள் சிலரைப் பற்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

1. மருத்துவர் T.N.ராமகிருஷ்ண பணிக்கர்
முதலாவதாக என் சிறு வயது முதல் நான் அறிந்த மருத்துவர் ராமகிருஷ்ண பணிக்கர். இவரை 1940 களில் எங்கள் ஊர் சோழவந்தானுக்கு அறிமுகப்படுத்தியவர் முன்னாள் டாக்டர் கோபால்சாமி. டாக்டர் பணிக்கர் LMP மருத்துவப் பட்டம் பெற்றவர். ஒவ்வொரு ஊரிலும் எந்தத் தொழில் தொடங்குவதானாலும் முதல் தேவை நல்ல அறிமுகமும், நல்லோர் தொடர்புமே. அப்படியாக சுமார் 35 ஆண்டுகள் நல்ல தொடர்புடன் மக்களுடன் இணைந்து அவர்தம் தொழில் செய்து, பிள்ளைகளையும் படிக்க வைத்து, தேவையான அளவு பொருளும் சேர்த்து, 1975 ல் மனநிறைவுடன் தன் தொழிலைப் பூர்த்தி செய்து, பிரியாவிடை பெற்று சொந்த ஊரான திருவனந்தபுரம் சென்றார்.       

ஒருமுறை எங்கள் உறவினர், செல்வாக்குள்ள ஒருவர், அழைப்பதாகக் கூறி அவரைப் பார்க்க மருத்துவர் பணிக்கர் சென்றார். உறவினர் சினிமா தியேட்டர் நடத்தி வந்தார். மருத்துவர் வந்ததும், 'நாங்கள் சீட்டாடுகிறோம், நீங்களும் வாருங்கள்' என்று அழைத்திருக்கிறார். மருத்துவர் அதிர்ச்சியடைந்து, நான் மருத்துவ தொழில் செய்ய இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். இனிமேல் இத்தகைய காரியங்களுக்கு என்னை அழைக்காதீர்கள்' என்று சொல்லி திரும்பியிருக்கிறார்.

என் தாத்தா சந்திரசேகர முதலியார் அவர்களிடம் மருத்துவர் பணிக்கர் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். என் தாத்தா மருத்துவ தேவைக்கு மருத்துவரின் கிளினிக் வந்தால், வந்த காரியத்தை முடித்து அனுப்பும் வரை மருத்துவர் அவர் இருக்கையில் அமர மாட்டாராம்.

என் அப்பா சொல்வார்கள், 'சில விஷயங்களில் என் அப்பா சொன்னால்கூட நான் அஞ்சமாட்டேன். டாக்டர் பணிக்கர் கூப்பிடுகிறார் என்றால் மிகுந்த பயத்துடனேயே செல்வேன்' என்று. கோவில் விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டு, மிகுந்த பொருள் செலவு செய்வதை பணிக்கர் கண்டிப்பாராம்.

மருத்துவர் பணிக்கரிடம் வழக்கமாக வரும் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவர் ஒருநாள் உடல்நலக் குறைவிற்கு பார்க்க வந்திருக்கிறார். மருத்துவரும் பரிசோதித்து தக்க மருந்துகள் கொடுத்திருக்கிறார். வந்தவர் மருத்துவரிடம் ஊசி போடக் கேட்டிருக்கிறார். ஊசி தேவையில்லை என்றதும், வந்தவர், 'ஐயா, நான் ஊரில் தெரிந்தவர்களிடம் மருத்துவர் பணிக்கரிடம் ஊசி போடப் போகிறேன் என்று சொல்லி வந்திருக்கிறேன், எனவே ஊசி போடுங்கள்' என்று மீண்டும் கேட்டிருக்கிறார். அவரைத் திருப்திப்படுத்துவது பெரும்பாடாயிற்று.

மருத்துவர் பணிக்கர் தன தொழில் நிமித்தமாக ஒரு சில வீடுகளுக்கு நோயாளிகளைப் பார்க்க செல்வார். அப்படி பல நேரங்களில் எங்கள் வீட்டிற்கு என் அம்மாவை, என் பாட்டியைப் பரிசோதித்து ஊசி போட்டு மருந்து கொடுக்க வருவார். எங்கள் வீட்டு வேலையாள், இரட்டை மாட்டு வண்டி கட்டி, காத்திருந்து மருத்துவரை அழைத்து வருவார்.

வைத்தியம் முடிந்து திரும்பும்போது, மரியாதை நிமித்தமாக வெற்றிலை பாக்குடன் ஒரு இரண்டு ரூபாய் நோட்டு வெள்ளித் தட்டில் வைத்து மருத்துவரிடம் கொடுப்போம். இது நாங்கள் செய்யும் மரியாதை.

இதுபோல இன்னும் பலர் வீடுகளுக்கு தேவையறிந்து வைத்தியம் பார்க்க செல்வார். வைத்தியத்துக்கான பீசை வருடம் ஒருமுறை மருந்தாளுனர் மூலம் குறிப்பு சீட்டு கொடுத்து மருத்துவர் பெற்றுக் கொள்வார். அந்த அளவு மருத்துவருக்கு மக்களிடம் ஒரு புரிதலும், மக்களுக்கு மருத்துவரிடம் ஒரு மரியாதையும் இருந்தது.

இன்று மருத்துவர்களுக்கு பணம் ஒன்று மட்டுமே குறி. மக்களிடத்து எந்த மரியாதையும், புரிதலும் இல்லை. நோயாளியைப் பார்க்க யார் வீட்டுக்கும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் வருவதில்லை. அவர்களுக்கு யார் தயவும் தேவையில்லை. மருத்துவம் வியாபாரம் ஆகிவிட்டது.

மருத்துவர் பணிக்கர் எங்கள் ஊருக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்.

மருத்துவர் பணிக்கர் நினைவாக நான் எழுதி எழுத்து.காமில் வெளியான கவிதை:      

நினைவுகள் மறையாது

எங்கள் டாக்டர் பணிக்கர்,
TNR பணிக்கர்,
T.N. ராமகிருஷ்ண பணிக்கர்,
நோயைக் கணிப்பதில் சமர்த்தர்;

ஆய்வுக் கூட சோதனை செய்வார் அவரே,
எங்கள் நோயைத் தீர்ப்பதில் வல்லவர்; நல்லவர்;
கலர் கலரான மருந்தும் கொடுப்பார்,
கனிவான ஆறுதலும் தருவார்;

நோய் பறந்து போகுமே
ஃபீசும் குறைவே;
பணிக்கர் டாக்டர் மறைந்தாலும்
அவர் நினைவுகள் மறையாது.                                                                         (தொடரும்)

Wednesday 4 April 2012

புகுமுக வகுப்பிற்கு - பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரி 1960 - 61

நான் சோழவந்தான் போர்டு உயர்நிலைப் பள்ளியில் 1960 ல் SSLC முடித்து பரீட்சை தேறிவிட்டேன். அடுத்து புகுமுக வகுப்பிற்கு கல்லூரி செல்ல வேண்டும். அந்தக் காலத்திலும், இன்றும் எங்களூரில் கல்லூரி செல்பவர்கள் மதுரைக்கு புகைவண்டியில் தான் செல்வார்கள். அதுவும் முதலிலேயே ஏறி அமர மாட்டார்கள். வண்டி கிளம்பி ஓட ஆரம்பித்ததும் நகரும் வண்டியில் ஏறுவதுதான் வழக்கம், வீரச் செயலும் கூட.

அதனால் என் தந்தை அந்த செயலுக்கு என்னை விடவில்லை. எனவே பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் சேர்க்க திட்டமிட்டார். மதுரையில் அப்பொழுது அரசியலில் பிரபலமாயிருந்த முனிசிபல் சேர்மன் திரு. சிதம்பர முதலியார் திருநெல்வேலியிலிருந்த உறவினர்க்கு கடிதம் தந்தார். அவர் மீண்டும் எனக்கு சவேரியார் கல்லூரி கணிதத் துறை பேராசிரியர். திரு.ஜானகிராமன் அவர்களுக்கு கடிதம் கொடுத்து பார்க்கச் சொன்னார்.

கணிதத்தில் 76 மார்க்கும், விஞ்ஞானத்தில் 45 மார்க்கும் எடுத்திருந்ததால் பேராசிரியர். திரு.ஜானகிராமன் என்னை முதல் குரூப் கணிதம் எடுத்துக் கொள்ள சொன்னார். எனக்கு காம்போசிட் கணக்கு வராது என்றும், விஞ்ஞான குரூப் எடுத்துக் கொள்வதாகவும் கூறினேன். அதுவே எனக்கு கிடைத்தது.   

பேராசிரியர் செல்வநாயகம் (ஆங்கிலம்), பேராசிரியர் குரூஸ் அந்தோணி (தமிழ்), பேராசிரியர் M.V.ராஜேந்திரன் (விலங்கியல்), உதவிப் பேராசிரியர் ஆராச்சி (தாவரவியல்), ஃபாதர்.ஜார்ஜ் (பொருளாதாரம்), விரிவுரையாளர்களாக திரு S.வெங்கடராமன் (வேதியியல்), திரு.சூசை ரத்னம் (பௌதிகம்), திரு.பாலாஜி (விலங்கியல்) ஆகியோர் பாடம் நடத்துவார்கள். தமிழ் வழிக் கல்வி கற்ற எனக்கு சில நாட்கள் புரிந்து கொள்ள பிரமிப்பாக இருந்தது. திரு.பொன்னரசு என்ற தமிழ் ஆசிரியர் மிகவும் அருமையாக திருக்குறள் வகுப்பெடுப்பார்.
 
சுமார் 25 வருடங்களுக்குப் பின் ஒருநாள் மதுரை திருநகரில் என் உறவினர் வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் இடம் தேடி என்னிடம் விசாரித்தார். அவரை நான் தெரிந்து கொண்டு, 'சார், நீங்கள் கெமிஸ்ட்ரி பேராசிரியர் வெங்கட்ராமன் தானே' என்று கேட்டேன். அவருக்கு மிகுந்த ஆச்சர்யமாய்ப் போய் விட்டது. நான் அவரிடம் 1961 ல் சவேரியார் கல்லூரியில் படித்த மாணவன் என்றேன். அவர் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் பேராசிரியராக இருப்பதாகச் சொன்னார். இருவர்க்கும் மகிழ்ச்சியாக இருந்தது.        
                                                                                                                                             (தொடரும்)

Monday 2 April 2012

சூடான பானங்களை சாசரில் ஊற்றிக் குடிக்கலாமா?

"Saucered and blowed" என்ற சொற்றொடர் அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் மற்றும் நியூ மெக்சிகோ பகுதியிலும் பரவலாகப் பேசப்படுகிறது. இது சூடான பானம், குறிப்பாக காப்பியை விரைந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் சாசரில் ஊற்றி, ஊதி சாசரிலிருந்தே குடித்துவிட்டுச் செல்வதைக் குறிக்கிறது. இது சரியான பழக்கமா, நாகரீகமா என்ற கேள்விக்குரியது.

பெண் பயணி ஒருவர் நீண்ட பயணத்தின் போது நடுவழி உணவு விடுதியில் சூடான காப்பியை விரைந்து குடித்துச் செல்ல முயற்சிக்கிறார். இதை கவனித்துக்கொண்டிருந்த அருகிலிருந்தவர் தன் அருகிலிருந்த காப்பிக் கோப்பையையும் சாசரையும் காட்டி, ' என்னுடைய காப்பியை அருந்துங்கள். இது சாசரில் ஊற்றி, ஊதி ஆற வைக்கப்பட்டது' என்றாராம். நற்குடியில் பிறந்தவர்கள் காப்பியை சாசரில் ஊற்றி, ஊதி சாசரிலிருந்தபடியே குடிக்க மாட்டார்களாம். "Saucered and blowed" என்பது ஒரு கேலிச் சொற்றொடராகக் கருதப்படுகிறது.

இச்சொற்றொடர் இன்றைய நாளில் வேறு சில பேச்சு வழக்கிலும், வாக்கியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, ஒரு செயல் (Project) கவனமாக, விரைந்து முடிக்கப்பட்டு, மேற்கொண்டு 'ஆற அமர செய்வதற்கு ஒன்றுமில்லை' என்ற அர்த்தத்தில் பேசப்படுகிறது. கால்பந்துப் பயிற்சியாளர் ஒருவர் "பயிற்சியிலிருக்கும் விளையாட்டு வீரர் ஒருவர் இன்னும் தயார் நிலையில் இல்லை. நீண்ட பயிற்சி தேவை" என்னும் பொருளில் "He has not been saucered and blown yet" என்று இச்சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். பில் கிளின்டன் 2004 ல் கவர்னர் தேர்தலில் எப்படியிருந்தாலும் நான் வெற்றி பெற்றிருக்க முடியாது, ஏனென்றால் (It was saucered and blowed) இது தேர்தலுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது என்றாராம்.

பிரிட்டனில் சாசர்கள் சிறியவையாக இருக்கும், அமெரிக்காவில் பெரியவையாக இருப்பதால், கோப்பையிலுள்ள காப்பி முழுவதையும் சாசரில் ஊற்றி ஒரே மூச்சில் குடித்துவிட முடியும் என்று நகைச்சுவையாகக் கூறுவதுண்டு. சூடான டீயை சிறு சிறு அளவில் சாசரில் பிரிட்டனில் உள்ள தொழிலாளர்கள் ஊற்றிக் குடிப்பதை 19 - 20 ஆம் நூற்றாண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வேறு சந்தர்ப்பத்தில் ஒருவன் சாசரில் ஊற்றிக் குடித்ததற்காக தண்டிக்கப்பட்டபோது, கோப்பையிலிருந்து குடித்தால் ஸ்பூன் கண்ணில் குத்துகிறது என்று தன் எதிர்ப்பைத் தெரிவித்தானாம். இன்னொரு சிற்றுண்டி சாலையில் சாசரில் ஊற்றிக் குடிக்கும் ஒருவரைப் பார்த்து அவர் நண்பர் "இப்படிக் குடிப்பது சரியல்ல, அதனால் உன் தொப்பியினால் விசிறி காப்பியை ஆற வைத்துக் குடி" என்றானாம்.

எனவே விருந்துகளின் போதும், பொது இடங்களிலும் சூப், காப்பி போன்ற சூடான பானங்களை நாகரிகம் கருதி, சாசரில் ஊற்றாமல் (We shall not saucer and blow in dinner in public places) கோப்பையிலிருந்தபடியே நிதானமாகக் குடித்து நாகரிகம் காப்போம்.

(ஆதாரம்: "World Wide Words" என்ற வாராந்திர ஆங்கில மின் செய்திக் கடிதத்திலிருந்து)

சொல்லின் வனப்பே வனப்பு

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான 'சிறுபஞ்சமூலம்' என்ற நூலின் 37 வது வெண்பாவில் ஒருவற்கு 'அழகின் சிறப்பு' எதனால் அமைகிறது என்று சொல்லப்படுகிறது.

'மயிர்வனப்புங் கண்கவரு மார்பின் வனப்பு
முகிர்வனப்புங் காதின் வனப்புஞ் - செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு
 
இப்பாடலின் கருத்து
 
  ஒருவர்க்கு நன்றாக வாரப்பட்ட அழகிய தலைமுடி இருக்கலாம். மற்றவர் கண்டு மயங்கும்படியான நல்ல தோற்றமும், விரிந்த மார்பும்  இருக்கலாம். எடுப்பான காது மடல்களும், கை விரல்களில் அழகிய நீண்ட நகங்களும், கவர்ச்சிகரமான பல் வரிசையும் உடையவராக இருக்கலாம். ஆனால் இவைகளெல்லாம் ஒருவர்க்கு உண்மையான வனப்பையும், அழகையும் தராது. நல்ல கல்வியறிவும், அதற்கேற்ற இலக்கண வரம்பின்படி பேசும் திறமையும்  அமைந்திருப்பதே உண்மையான வனப்பும் அழகுமாகும். 
 
  இதற்கு நல்லதொரு உதாரணமாக, என் தந்தையார் எங்களூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து பேச வந்த ஒரு பெரியவரைப்பற்றி மிகவும் பெருமையுடன் கூறுவார். 
     
  என் தந்தை திரு.'கன்ட்ரோல்' கன்னியப்ப முதலியார் சுமார் 40 வருடங்களுக்கு முன் சோழவந்தானில் உள்ள ஜனகை நாராயணப் பெருமாள் மற்றும் மாரியம்மன் கோவில் தக்கார் தலைவராக இருந்த சமயம். 

  அப்பொழுது ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறும். அச்சமயம் தினமும் ஆன்மிக சொற்பொழிவு, நாதஸ்வர கச்சேரி நடைபெறுவதுண்டு. சிறந்த பேச்சாளர்களாக திருமுருக கிருபானந்த வாரியார், கிரிதாரிப்ரசாத், புலவர் கீரன் மற்றும் பலர் வருவதுண்டு. 

  ஒருநாள் திரு.ராமச்சந்திர பத்தர் என்பவரை சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இவர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியராக (Assistant Collector / RDO) ஆகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். இவர் ஒரு நல்ல இலக்கியவாதி. ஆன்மிகச் சொற்பொழிவாளர். பார்ப்பதற்கு மிகவும் எளியவர். கவர்ச்சிகரமான தோற்றம் கிடையாது. பார்வையில் அவர் பேச்சுத் திறமையும், கல்வியறிவையும் எடை போட இயலாது. 

  அவர் ஆன்மிகச் சொற்பொழிவாற்றும் ஆற்றல் படைத்தவர் என்று தெரிந்து எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆன்மிகச் சொற்பொழிவாற்ற அவரை ஏற்பாடு செய்ய விரும்பினர். கோவில் பணிகளில் பங்கு கொள்ளும் தமிழய்யாவும், என் அப்பாவும் ஆட்சியர் அலுவலகம் சென்று அவரைச் சந்தித்தனர். அவரும் சொற்பொழிவிற்கு  வர சம்மதித்தார்.

  அவரை சோழவந்தானிற்கு பேருந்தில் வந்து விடும்படியும், சொற்பொழிவு முடித்து எங்கள் வீட்டில் உணவருந்தி, இரவு தங்கி காலையில் செல்லும்படியும் வேண்டினர். அவர் இரவு தங்குவதற்கு தன வீட்டிற்கு செல்ல வேண்டும் என விரும்பினார். இருந்தாலும் எங்கள் வீட்டில் வசதியாகத் தங்கலாம் என்றும் வற்புத்தியதால் ஒத்துக் கொண்டார்.

  ஆனால் அன்று அவர் பேருந்தில் வந்து ஆற்றிய அருமையான சொற்பொழிவைக் கேட்டு ரசித்த என் தந்தையும், தமிழய்யாவும் மிக மகிழ்ந்தனர். உடனே என் தந்தை ஒரு வாடகைக் கார் ஏற்பாடு செய்து இரவு உணவு முடிந்து, சொற்பொழிவாளர் வியக்கும் வண்ணம் அன்றிரவே அவரின் விருப்பப்படி அவரது வீட்டில் மதுரையில் விட்டுவரச் செய்தார்.

  எனவே இந்நிகழ்ச்சியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது 'ஒருவரை புறத் தோற்றத்தை கொண்டு மதிப்பீடு செய்யலாகாது. அவரவர் கல்வியறிவு, சொல்லழகு போன்ற நற்குணங்களைக் கொண்டே மதிக்க வேண்டும்' என்பது தெளிவு.

Sunday 1 April 2012

ஈத்துவக்கும் இன்பம்


தானங்கள் பல செய்த என் அப்பா
சோழவந்தான்  ’கன்ட்ரோல்’ கன்னியப்ப முதலியார்
அவர்களின் வலது கை
  உடன்பிறப்புகளுக்கும், உறவினர்களுக்கும், நம்மைத் தேடி வரும் வறியவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற பேருண்மையை திருவள்ளுவர் மிக அழகாக ஈகை என்னும் அதிகாரத்தில்

'ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை 
வைத்திழக்கும் வன்க ணவர்'.

 என்ற திருக்குறள் (228) வழியாக வெளிச்சமாக்குகிறார்.

   ஒருவர் தம் படிப்பு, அறிவு, பூர்வீகச் செல்வம், தன் உழைப்பு வழியாக செல்வம் சேர்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய நல்ல நேரம் பணம், நகை, வீடு, சேமிப்பு என்று சொத்துக்களை சேர்த்துக் கொண்டே போகிறார். பிள்ளைகள் கல்வி, மக்கள் திருமணம் என்று பெரும் செலவு. இருந்தாலும் அவரிடம் குறையாத செல்வமாய் பணம்  சேர்ந்து கொண்டிருக்கிறது

   பணத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை. வருமான வரி விலக்குப் பெற, சேமிக்க என்று பலவித மியூச்சுவல் ஃபண்ட்கள், பங்கு வர்த்தக மூலதனங்கள் என்று பலவிதமாக வருமானத்தைப் பெருக்கும் திட்டங்கள் உண்டு. இதிலெல்லாம் நல்ல அனுபவமிருந்தால் மட்டுமே பணம் பெருக வாய்ப்புண்டு. இந்தத் திட்டங்களில் ஆசைப்பட்டு பெரும் பணத்தை முதலீடு செய்கிறார்.

   எவ்வளவு அனுபவமிருந்தாலும், சில நேரங்களில் நாம் எதிர்பார்த்தது நடக்காமல் இழப்பு ஏற்படுவதும் உண்டு. உதாரணமாக 2008 சனவரிக்குப் பின் மே, 2009 வரை சுமார் ஒன்றரை வருட கால கட்டத்தைச் சொல்லலாம். அதே போல 2011 ஆம் வருடத்தையும் சொல்லலாம்நடப்பாண்டில் ஏற்பட்ட பங்குச் சந்தை வீழ்ச்சியால், அவர்களின் முதலீட்டில், 19 லட்சத்து 11 ஆயிரத்து 122 கோடி ரூபாய், மாயமாக மறைந்து விட்டது. பங்குச் சந்தை சரிவால், சராசரியாக ஒரு முதலீட்டாளருக்கு 9.70 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது

   இதை நான் சொல்வதற்குக் காரணம் மியூச்சுவல் ஃபண்ட்கள் மற்றும் பங்கு வர்த்தக மூலதனங்களில் பெருமளவு இழந்ததில் நானும் ஒருவன் என்பதுதான். இதில் ஒரே ஆறுதல் நான் வட்டிக்குக் கடன் வாங்கி முதலீடு செய்யவில்லை என்பதும், என் பங்குகளும், மியூச்சுவல் ஃபண்ட்களும் மதிப்புள்ளவை என்பதும், மேலும் ஒரு வருடத்தில் இழப்பு  சமன்படும் என்ற நம்பிக்கையுமே.

   தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் (குறள், 228) என்பதில் வன்கண் - வன்-மை: பொருள்: மனக்கொடுமை, இரக்கமின்மை, கல்நெஞ்சினர் என்றும் சொல்லலாம். இத்தகைய இரக்கமில்லா தன்மையை நீக்கி, நாம் கொடுத்து உதவும்போது, அவர்கள் உள்ளத்திலும், முகத்திலும் தோன்றும் மகிழ்ச்சிக்கும், மன நிறைவுக்கும் ஈடு இணை ஏதுமில்லை என்பதை 'ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்' என்று வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார்

  எனவே நம் தேவைக்கு மேல் உள்ள பணத்தை, பொருளை தேவையுள்ள உடன்பிறப்புகளுக்கும், உறவினர்களுக்கும், நம்மைத் தேடி வரும் வறியவர்களுக்கும் அவர்கள் தேவையறிந்து, கல்வி, திருமணம், மருத்துவம் போன்ற நற்காரியங்களுக்கு உதவும் மனப்பான்மை வர வேண்டும், வளர வேண்டும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.