Saturday 16 June 2012

எப்படி ஆறுதல் சொல்வேன்? - இரங்கல் கவிதைகள்


தூத்துக்குடியைச் சேர்ந்த திரு.எசேக்கியல் அவர்கள் எனக்கு அறிமுகம். இந்தியன் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்று சென்னை, சேலையூர் அருகிலுள்ள மாடம்பாக்கம் என்ற இடத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் எழுத்து தளத்தில் 01-02-2012 முதல் நல்ல கவிதைகள் நிறைய எழுதி வருகிறார். பெரும்பாலும் மரபுக் கவிதைகள். சில புதுக் கவிதைகளும் அடக்கம். இத்தளத்தில் நானும் சுமார் 350 புதுக்கவிதைகள் இயற்றி வெளியிட்டிருக்கிறேன்.

திரு.நிலாசூரியன் என்ற கவிஞர் கவிதை திருவிழாஎன்ற பரிசுப் போட்டியை எழுத்து தள அனுமதியுடன் இம்மாதம் 30 ஆம் தேதி வரை நடத்துகிறார். அதற்கான வழிமுறையாக திரு.எசேக்கியலும் சில குறிப்புகள் தருகிறார்.

பாரதிதாசன் இறந்த பொழுது திரு மு. மேத்தா அவர்கள் 'கண்ணீரில் ஒரு சாட்சி' என்னும் தலைப்பில் எழுதிய பாடல் ஒன்றினை 14.06.2012 தேதியில் எழுத்து.காமில் திரு.எசேக்கியல் அளித்திருக்கிறார்.

"வானம்பாடி வண்ணத் தமிழ்மலர்
போனது மாய்ந்து புவியோர் புலம்ப!
பாரதி தாசன் எனுமொரு பறவை
பாரை மறந்து பறந்தது பறந்தது!

எப்படி இதனைச் செப்பிடு வேன்,நான்?
இப்புவி யினைத்தன் எழுது கோலால்
ஆட்டிப் படைத்த அரசன் மாய்ந்தான்!
வீட்டில் ஏற்றிய விளக்கு அணைந்தது!

அஞ்சா மைக்கு அவனே உவமை!
'
துஞ்சா திருப்பீர்\' எனும்முர சறைந்தான்!
பூட்டிய இரும்புக் கூட்டை உடைத்து
மூட்டிச் சிந்தனை முழக்க மிட்டவன்!

'
பாரில் எங்கும் பைந்தமிழ் பரப்ப
வாரீர்' என்றே கூவிய குயிலவன்!
தமிழ்ப்படைத் தலைவன் ; தாவும் புலியவன்!
தமிழ்ப்பற் றாளரின் தரம்பிரித் தறைபவன்!
தமிழால் பிழைத்திடும் தடியரைச் சுடுபவன்!
செந்தமிழ் ஏறு சாய்ந்தான்
என்தமிழ் நெஞ்சே என்செய் வாயோ?"

இது ஒரு இரங்கல் கவிதை. இதுபோல் வேறு பல பேருடைய இரங்கல் கவிதைகளை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். அவற்றையும் படியுங்கள் என்றும், கவிஞனானவன் எப்படிப் பாடுபொருளாக எடுத்துக் கொண்டவரின் குண நலன்களை, வாழ்நாள் முக்கிய குறிப்புகளை எடுத்துக் கூறுகிறான் - நல்லதொரு சொல்லாட்சியுடன் எதுகை மோனையுடன் கூடிய சந்தம் கொண்டு என்று உணரப் பழகுங்கள் என்றும் திரு.எசேக்கியல் கூறியிருக்கிறார்.  

இந்நேரத்தில் மற்றொரு அருமையான இரங்கல் கவிதையை நான் தற்செயலாக காண நேர்ந்தது. கும்பகோணம் பள்ளியில் சூன் 2004 ல் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குழந்தைகளின் சார்பில், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி என்ற ஊரிலிருந்து வெளியாகும் நமது நல்லாசிரியர் என்ற திங்களிதழின் பொறுப்பாசிரியர் புலவர்.துரை.தில்லான் அவர்கள் இயற்றி, சூலை 2004 இதழில் வெளியிட்ட கும்பகோணத்தில் தாயின் அரற்றல்என்ற மனதை உருக்கும் இரங்கல் கவிதை.

குடந்தை நர்சரிப் பள்ளி
கொள்ளிவா யைத்தி றந்து
நடந்ததை யார றிந்தார்? – நூறு
நாற்று மடிந்ததையோ!

பாடம் படிப்ப தற்குப்
பள்ளிக்குச் சென்ற கண்ணே!
கூடம்எ ரிந்த தென்றார் – எனது
கூடும் எரிந்ததையோ!

வண்டின்கால் பட்டால் கூட
வாடுமிதழ் போன்ற வள்நீ
மண்டிய தீக்கு கையில் – உன்னை
மரணம் அணைத்ததையோ!

பள்ளிக்குச் சென்று கற்றால்
பாராள்வாய் என்று சொன்னார்
கொள்ளிக்குள் நீம டிந்தாய் – எனது
கோட்டை இடிந்ததையோ!

நோயில் கிடக்க வில்லை
நூறு கிளிகள் ஒன்றாய்த்
தீயில் கருகினவே –இந்தத்
தீவினை யார்செயலோ?

உன்கையை நான்பி டித்தே
உயிர்விடக் காத்தி ருந்தேன்
என்கையில் நீக ரியாய் – மயிலே
எரிந்து விழுந்தனையே!

அள்ளிக் கொடுத்தா லென்ன?
ஆறுதல் சொன்னா லென்ன?
துள்ளிக் குதித்துவந்து – எனது
தோளில் புரள்வதுண்டோ?

கண்ணீரும் வற்றும், இந்தக்
காவேரி நீரும் வற்றும்
எண்ணாத நாளு முண்டோ – நீஎன்
இல்லத்தின் தெய்வமன்றோ?

குடந்தை நர்சரிப் பள்ளி எரிந்த நாளில், நான் காரைக்காலில் இருந்து கும்பகோணம் வழியாக மதியம் மூன்று மணியளவில் மதுரைக்குச் செல்கிறேன். பேருந்தில் சிலர் மௌனமாகப் பேசிக் கொள்கிறார்கள். அதன் தீவிரத்தை நான் அன்று அறியவில்லை. மறுநாள் நாளிதழைப் பார்த்து மிக அதிர்ச்சிக்கு உள்ளானேன்.

பெற்றோர்களுக்கும், உற்றோர்களுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்
 

1 comment:

  1. மிக அருமை அய்யா, நல்லதொரு பதிவு மட்டுமல்ல... அறிவுகுகந்த அவசியமான பதிவும்கூட. மேலும் தாங்களின் அணைத்து பதிவுகளையும் நான் வாசித்துக்கொண்டு இருக்கிறேன் அய்யா... தாங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அய்யா.

    பாரெங்கும் பறை முழங்கட்டும் தமிழ்
    உங்கள் பதிவிடலால்...
    அண்டமெங்கும் ஆழ பதியட்டும் தமிழ்
    உங்கள் அச்சானியால்...
    உலெகெங்கும் ஊற்றாய் சுரக்கட்டும் தமிழ்
    உங்கள் உவமைகளால்...
    தரணியெங்கும் தழைத்தோங்கட்டும் தமிழ்
    உங்கள் கவிமழையால்...
    எட்டுத்திக்கும் எதிரொலிக்கட்டும் தமிழ்
    உங்கள் முழக்கங்களால்...
    கவிதைகளாய் கரைபுரலட்டும் தமிழ்
    கடல் பேரலைகளாய்....

    பணிவன்புடன்
    நிலாசூரியன்.
    (18.06.2012)

    ReplyDelete