Wednesday 25 April 2012

நான் அறிந்த நல் உள்ளம் கொண்ட மருத்துவர்கள்

3. மருத்துவர் T.துரைராஜன், குழந்தைகள் அறுவை மருத்துவர்

1970 - 74 ஆம் ஆண்டுகளில் நான் திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் உதவி மருத்துவராகப் பணியாற்றிய நேரம். என் இரண்டாவது குழந்தை - பெண் குழந்தை - குறைப் பிரசவமாக வீட்டிலேயே பிறந்தது. குழந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதில் மதுரை அரசு மருத்துவமனையில் பேராசிரியர் K.A.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் காண்பித்து வந்தோம். அவர் குழந்தைக்கு Congenital heart disease with cutis laxa இருப்பதாகச் சொல்லி மருத்துவம் செய்தார்.

cutis laxa குறைபாட்டினால் குழந்தை தொடர்ந்து அழும்பொழுது Inguinal hernia ஏற்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ நண்பர்கள் குழந்தையைக் கவனித்து வந்தாலும், மதுரையிலுள்ள குழந்தைகள் அறுவை சிகிட்சைத் துறையின் மூத்த மருத்துவர் T.துரைராஜனிடம் காண்பித்து விட முடிவு செய்தேன்.

அவரிடம் அறிமுகப்படுத்த எங்கள் குடும்ப மருத்துவர் பணிக்கர் அவருடைய காரிலேயே வடக்குச் சித்திரை வீதியிலுள்ள மருத்துவர் T.துரைராஜனின் கிளினிக்கிற்கு எங்களை - நான், என் மனைவி, நான்கு மாதக் குழந்தை, என் அப்பா - அழைத்து வந்தார்.

அறிமுகம் ஆனதும் மிக இளம் மருத்துவரான என்னிடம் அவர் சொன்ன முதல் செய்தி, 'நீங்களும் மருத்துவராக இருக்கிறீர்கள். நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் என்னிடம் வந்து குழந்தையைக் காண்பிக்கலாம். பீஸ் மட்டும் நான் உங்களிடம் வாங்க மாட்டேன், கொடுக்க முயற்சிக்காதீர்கள்' என்பதே.

அதன்பின் பலமுறை அவருடைய கிளினிக்கிலும், அரசு மருத்துவ மனையின் அவர் துறையிலும் காண்பித்து வந்தேன். அவ்வப்பொழுது குடலிறக்கத்தை உள்ளே அழுத்தி சரி செய்தாலும், ஒரு சந்தர்ப்பத்தில் அறுவை சிகிட்சை செய்ய அவர் முடிவு செய்தார். உதவி மயக்க நிபுணரிடம், இந்த நான்கு மாதக் குழந்தைக்கு பொது மயக்கம் (General anesthesia) கொடுக்கலாமா என்ற ஆலோசனைக்கு சென்ற போது, 'இதை நாங்கள் சொல்ல முடியாது, எங்கள் Chief தான் முடிவு செய்ய வேண்டும்' என்று சொல்லி விட்டார்கள்.

அப்பொழுது இருந்த மயக்க இயல் தலைமை மருத்துவர் திரு.தி.சீனிவாசன் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் வேண்டிய நண்பரின் மகன் என்பதால் அவர் வீட்டிற்கே குழந்தையைப் பரிசோதிக்க கொண்டு சென்றோம். குழந்தையைப் பரிசோதித்த அவர் இந்தக் குழந்தைக்கு 90% ஆபத்து உண்டு, பொது மயக்கம் (General anesthesia) கொடுத்தால் 100% ஆபத்து உண்டு என்றும் சொல்லி விட்டார்.

ஆனாலும் மருத்துவர் T.துரைராஜன் இறுதியாக Local anesthesia விலேயே அறுவை சிகிட்சை செய்ய முடிவெடுத்து, அழகிய மிகச் சிறிய incision மூலமாக அருமையாக அறுவை சிகிட்சை செய்து Hernia வை சரி செய்தார். அடுத்த 5 வது மாதத்தில் மறுபக்கத்தில் ஏற்பட்ட Hernia வும் சரி செய்யப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டமாக 6 வது மாதத்தில் Prolapse rectum ஏற்பட்டு குழந்தை இறந்து விட்டது.

தன் நீண்ட அனுபவத்தின் காரணமாக மிகவும் திறமையுடன் செயல்பட்டு பல குழந்தைகளைக் காப்பாற்றிய மருத்துவர் மிகவும் வணங்கத் தக்கவர். அவர் இன்றில்லாவிட்டாலும் அவர் புகழ் அவர் சென்றவிடமெல்லாம் விளங்கும்.   

No comments:

Post a Comment