Monday 2 April 2012

சொல்லின் வனப்பே வனப்பு

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான 'சிறுபஞ்சமூலம்' என்ற நூலின் 37 வது வெண்பாவில் ஒருவற்கு 'அழகின் சிறப்பு' எதனால் அமைகிறது என்று சொல்லப்படுகிறது.

'மயிர்வனப்புங் கண்கவரு மார்பின் வனப்பு
முகிர்வனப்புங் காதின் வனப்புஞ் - செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு
 
இப்பாடலின் கருத்து
 
  ஒருவர்க்கு நன்றாக வாரப்பட்ட அழகிய தலைமுடி இருக்கலாம். மற்றவர் கண்டு மயங்கும்படியான நல்ல தோற்றமும், விரிந்த மார்பும்  இருக்கலாம். எடுப்பான காது மடல்களும், கை விரல்களில் அழகிய நீண்ட நகங்களும், கவர்ச்சிகரமான பல் வரிசையும் உடையவராக இருக்கலாம். ஆனால் இவைகளெல்லாம் ஒருவர்க்கு உண்மையான வனப்பையும், அழகையும் தராது. நல்ல கல்வியறிவும், அதற்கேற்ற இலக்கண வரம்பின்படி பேசும் திறமையும்  அமைந்திருப்பதே உண்மையான வனப்பும் அழகுமாகும். 
 
  இதற்கு நல்லதொரு உதாரணமாக, என் தந்தையார் எங்களூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து பேச வந்த ஒரு பெரியவரைப்பற்றி மிகவும் பெருமையுடன் கூறுவார். 
     
  என் தந்தை திரு.'கன்ட்ரோல்' கன்னியப்ப முதலியார் சுமார் 40 வருடங்களுக்கு முன் சோழவந்தானில் உள்ள ஜனகை நாராயணப் பெருமாள் மற்றும் மாரியம்மன் கோவில் தக்கார் தலைவராக இருந்த சமயம். 

  அப்பொழுது ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறும். அச்சமயம் தினமும் ஆன்மிக சொற்பொழிவு, நாதஸ்வர கச்சேரி நடைபெறுவதுண்டு. சிறந்த பேச்சாளர்களாக திருமுருக கிருபானந்த வாரியார், கிரிதாரிப்ரசாத், புலவர் கீரன் மற்றும் பலர் வருவதுண்டு. 

  ஒருநாள் திரு.ராமச்சந்திர பத்தர் என்பவரை சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இவர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியராக (Assistant Collector / RDO) ஆகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். இவர் ஒரு நல்ல இலக்கியவாதி. ஆன்மிகச் சொற்பொழிவாளர். பார்ப்பதற்கு மிகவும் எளியவர். கவர்ச்சிகரமான தோற்றம் கிடையாது. பார்வையில் அவர் பேச்சுத் திறமையும், கல்வியறிவையும் எடை போட இயலாது. 

  அவர் ஆன்மிகச் சொற்பொழிவாற்றும் ஆற்றல் படைத்தவர் என்று தெரிந்து எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆன்மிகச் சொற்பொழிவாற்ற அவரை ஏற்பாடு செய்ய விரும்பினர். கோவில் பணிகளில் பங்கு கொள்ளும் தமிழய்யாவும், என் அப்பாவும் ஆட்சியர் அலுவலகம் சென்று அவரைச் சந்தித்தனர். அவரும் சொற்பொழிவிற்கு  வர சம்மதித்தார்.

  அவரை சோழவந்தானிற்கு பேருந்தில் வந்து விடும்படியும், சொற்பொழிவு முடித்து எங்கள் வீட்டில் உணவருந்தி, இரவு தங்கி காலையில் செல்லும்படியும் வேண்டினர். அவர் இரவு தங்குவதற்கு தன வீட்டிற்கு செல்ல வேண்டும் என விரும்பினார். இருந்தாலும் எங்கள் வீட்டில் வசதியாகத் தங்கலாம் என்றும் வற்புத்தியதால் ஒத்துக் கொண்டார்.

  ஆனால் அன்று அவர் பேருந்தில் வந்து ஆற்றிய அருமையான சொற்பொழிவைக் கேட்டு ரசித்த என் தந்தையும், தமிழய்யாவும் மிக மகிழ்ந்தனர். உடனே என் தந்தை ஒரு வாடகைக் கார் ஏற்பாடு செய்து இரவு உணவு முடிந்து, சொற்பொழிவாளர் வியக்கும் வண்ணம் அன்றிரவே அவரின் விருப்பப்படி அவரது வீட்டில் மதுரையில் விட்டுவரச் செய்தார்.

  எனவே இந்நிகழ்ச்சியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது 'ஒருவரை புறத் தோற்றத்தை கொண்டு மதிப்பீடு செய்யலாகாது. அவரவர் கல்வியறிவு, சொல்லழகு போன்ற நற்குணங்களைக் கொண்டே மதிக்க வேண்டும்' என்பது தெளிவு.

No comments:

Post a Comment