Tuesday, 27 March 2012

பிறர்மனை நயவாமை

நாலடியார் அறத்துப்பாலில் , 'பிறர்மனை நயவாமை' என்னும் அதிகாரத்தில் 85 வது வெண்பா:

செம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை
வலியாற் பிறர்மனைமேற் சென்றாரே, இம்மை
அலியாகி ஆடிஉண் பார்.

முற்பிறப்பில் ஆண் தன்மையும், ஆட்பலம், பணபலம் அதிகாரம் மற்றும் செல்வாக்கு முதலிய வலிமை உடையவராய்ப் பிறர் மதிக்க வாழ்ந்திருந்தவர் தமக்குள்ள இடம் பொருள் ஏவல் என்னும் வலிமைகளால் நடுவுநிலைமை என்னும் குணம் சிறிதுமில்லாமல் கீழ்மக்கள் கூட்டத்தோடு கூடியவராய் திரட்சி பொருந்திய கோல மெழுதிய மார்புகளையுடைய பெண்மகளின் தோள்களைச் சேர விரும்பி அயலார் மனைவியர்பாற் செல்கிறார்.

அத்தகையவர்கள் இப்பிறப்பில் அலித்தன்மையுடையவராய்ப் பிறந்து, ஆண்மையும், வலிமையையும் இழந்து பெண்ணின் நலத்தைத் துய்க்க இயலாத பிறவியாய் தெருக்களிலும், பொது இடங்களிலும் பிறர் நகைக்கக் கூத்தாடிப் பிச்சையேற்று வயிறு பிழைப்பவராவர் என்றும் 'பிறர்மனை நயவாமை'யே   அறமாகும் என்றும் கூறி இப்புலவர் அறிவுறுத்துகிறார்.

இன்றைய கால கட்டத்தில் மேற்கூறிய இழிசெயல் மட்டுமின்றி, மற்ற எளியவரின் பொருள், நிலம், வீடு மனைகளையும் செல்வாக்கு, ஆட்பலம், அதிகாரத்தைப் பயன்படுத்தி அடாவடியாக பிறர்மனை நயந்து (மனை அபகரிப்பு வழக்குகள்) அவைகளை அபகரித்துக் கொண்ட வழக்குகளில் சில அரசியல்வாதிகள், அதிகாரிகள், அவர்களுக்குத் துணை போனவர்கள்  சிக்கி இருக்கிறார்கள். வழக்கு, நீதிமன்றம், சிறை என்று சென்று வருகிறார்கள். இவர்களும் தங்கள் செல்வாக்கை இழந்து பிறர் நகைக்க வாழ நேரவேண்டும். இது மற்ற சுயநலவாதிகளுக்கு படிப்பினையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment