Wednesday, 21 March 2012

இனிய நினைவுகள்


புனித சவேரியார் கல்லூரி
1960 -61 ல் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் ஓராண்டு படித்த அனுபவம். சொந்த ஊரிலும், வீட்டிலும் சுதந்திரமாக சுற்றித் திரிந்த காலம். கல்லூரி புகுமுக வகுப்பு மாணவர் விடுதியில் சேர்க்கப் பட்டேன். தாயின் கைச்சாப்பாடு சாப்பிட்ட பிள்ளை.. விடுதிச் சாப்பாடு.கிராமத்து வளர்ப்பு. சில நேரங்களில் தவறு செய்யும்போது அடிக்க வரும் அம்மாவை திட்டுவது வழக்கம். 'உன்னைக் கொண்டு போய் ஹாஸ்டலில் விட்டால்தான் திருந்துவாய்' என்பார் அம்மா.

என் அம்மா

ஹாஸ்டலில் விட்டாயிற்று. அந்தக் காலத்தில் தொலைபேசியோ, அலைபேசியோ வசதி ஏது? அம்மாவிடமிருந்து தபாலில் கடிதம் வந்தது. அம்மா எழுதியிருந்த கடிதத்தை வாசித்து கண்ணீர் பெருகியது. அதில், 'என் அன்பு மகனுக்கு அம்மாவின் அநேக ஆசீர்வாதங்கள்' என்று நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அன்றுதான் அன்னையின் அன்பைப் புரிந்து கொண்டேன். அதன் பின் அம்மாவிடம் கோபிப்பதே இல்லை.

நண்பரின் மகன் திரு.ஜாபர் சேட்

அதன் பின் சுமார் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னால்... நான் கண் மருத்துவராகி மதுரை மேல மாசி வீதியில் நடத்திய கண் கலந்தறிதல் (Consultation) அறைக்கு தன் மகளுக்கு பரிசோதிக்க ஒருவர் வந்தார். அவரை என்னிடம் அனுப்பியவரோ அவரின் மாணவர். அந்த மாணவரின் தந்தை திரு.முகமது சையது என் நண்பர். அவர் 1970 - 74 ல் திண்டுக்கல்லில் கூட்டுறவுத் துறையில் உதவி பதிவாளர் ஆக பணி புரிந்தார். அந்த மாணவர்தான் பின்னாளில் IPS ஆகி, DGP யாக (தற்சமயம் தற்காலிக பணி நீக்கம்) உள்ள திரு.ஜாபர் சேட்.

என் நண்பர் திரு.சாம் ஜார்ஜ்

கண் பரிசோதனைக்கு மகளை அழைத்து வந்தவர் என் வயதுக்காரர். பார்த்த முகம். விசாரித்த போது, அவரும் நானும் புனித சவேரியார் கல்லூரியில் புகுமுக வகுப்பில் ஒரே E செக்சனில் (Natural Science, Physical Science, Economics, Advanced Tamil) படித்தவர்கள். அவர் பிரிட்டோ விடுதியிலும், நான் மற்ற மாணவர்கள் தங்கும் விடுதியிலும் இருந்தோம். அவர்தான் அமெரிக்கன் கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியர் திரு.சாம் ஜார்ஜ்.
சாம் ஜார்ஜுடன் நான்
புகழ் பெற்ற இதய அறுவை சிகிட்சை நிபுணர் டாக்டர்.A.R.ரகுராம்

மீண்டும் 2006 ஆம் ஆண்டு. மே மாதம். காருக்கு பெட்ரோல் போடும்போது மதுரை விளாங்குடியில் சாம் ஜார்ஜும், நானும் சந்தித்தோம். எனக்கு இருதய பை-பாஸ் (CABG) அறுவை சிகிட்சை மீனாக்ஷி மிஷன் மருத்துவ மனையில் செய்திருந்த நேரம். எனக்கு அறுவை சிகிட்சை செய்த மருத்துவர் புகழ் பெற்ற டாக்டர்.ரகுராம்.
டாக்டர்.ரகுராம்
7.3.12 தேதியிட்ட 'என் விகடனி'ல் வலையோசைப் பகுதியில் என் நண்பர் சாம் ஜார்ஜின் பங்களிப்பை அறிந்தேன். நான் சில ஆண்டுகளாக வலைத் தளங்களுக்குப் பரிச்சயமானவனானாலும், blog பற்றி அறிந்ததில்லை. சாம் ஜார்ஜைச் சந்திக்க ஆவலாயிருந்தேன்.

சனிக்கிழமை இரவு. சுமார் 7 மணி. தல்லாகுளம் இந்தியன் வங்கியின் ATM உள்ளே சிறிய இடம். மங்கிய ஒளி. நான் தலைக் கவசம் அணிந்திருந்தேன். அடுத்து நுழைந்த குறுந்தாடி வைத்திருந்தவர் நண்பர் சாம் ஜார்ஜ். ஆறு ஆண்டுகளுக்குப் பின் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.

வை.கோ வும் நானும்

நேற்று 17.03.2012 ல் நண்பர் சாம் ஜார்ஜ் என் வீட்டிற்கு வந்திருந்தார். சில மணி நேரங்கள் பழைய கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம். Blog பற்றியும் அதில் பதிவு செய்வது பற்றியும் எனக்கு உதவினார். சாம் ஜார்சிடம் 1961 ல் நான் நண்பர்களிடம் பெற்ற ஆட்டோகிராப் காட்டினேன்.

அதில் 23.3.61 தேதியிட்டு,

'நாடும் நற்றமிழர் ஏடும் புகழப்
பணியாற்றுக'
என எழுதி அன்புக் கையெழுத்திட்டவர் எங்கள் வகுப்பு நண்பர் திரு.கலிங்கப்பட்டி வை.கோபால்சாமி.
      
ஆட்டோகிராபும்   இணைத்துள்ளேன்.

நாங்கள் எடுத்துக் கொண்ட வகுப்பு புகைப்படம் இணைத்துள்ளேன்.

அமர்ந்திருப்பவர்கள் வரிசையில் வலமிருந்து இரண்டாவது திருநெல்வேலியில் புகழ்பெற்ற கண் டாக்டர்.போத்திலிங்கம், ஐந்தாவது வை.கோபால்சாமி, மேல் வரிசையில் வலமிருந்து ஐந்தாவதாக நிற்பது நான். வை.கோ வை 1961 க்குப் பின் நான் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை.

நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுமுன் 2002 ல் படத்திலிருப்பது வை.கோ தான் என்று ஒருவாறு உறுதி செய்தவர் நுண்கதிர் துறையைச் சேர்ந்த டாக்டர் ஜெகதீசன். அவரும் வை.கோ வின் தம்பியும் நண்பர்கள் என்று சொன்னார்.

என் அறை நண்பர் ந.பூபாலன், திரு.காசிப்பழம் இருவரும் படத்தில் இருக்கிறார்கள். நாங்கள் இருந்தது கொடைக்கானல் பிளாக் என்ற ஓட்டுக் கட்டடம். கடைசி மூன்று மாதங்கள் புதுக் கட்டடத்திற்கு மாறி விட்டோம்.

நான் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 1970 - 74 ல் பணி புரிந்த போது பூபாலன் பிஎஸ்சி முடித்து விட்டு பல்பொருள் கடையில் அவர் தந்தையுடன் தொழில் செய்து வந்தார். கடைத் தெருவுக்கு செல்லும் போதெல்லாம் அவரை சந்திப்பேன். சிலநிமிடங்கள் பேசிக் கொண்டிருப்பேன். கடையை விட்டு இறங்கமாட்டார். நண்பர் காசிப்பழத்தை கல்லூரி விடுதியை விட்ட நாளிலிருந்து நான் சந்திக்கவேயில்லை.

கல்லூரியில் எனக்குப் பிடித்தது தாவரவியல். அந்த வருடம்தான் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் MSc முடித்துவிட்டு எங்கள் ஆசிரியராக திரு.ஆராச்சி சேர்ந்திருந்தார். அவர் திருச்சி கல்லூரியைப் பற்றி மட்டுமின்றி ஆண்டா(ர்)ள் தெருவைப் பற்றியும் சொல்வார். என்ன விசேசமோ எங்களுக்குத் தெரியாது.

அவர் பாடம் எடுத்த Thallophyta, Bryophyta, Pterydophyta இன்னும் நினைவில் இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் பாளையங்கோட்டை சென்றிருந்த போது பேராசிரியர் ஆராச்சி அவர்கள் வீட்டிற்கு சென்று சந்தித்து வணங்கினேன். மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது.   




   

2 comments:

  1. பதிவுலகத்திற்கு தங்களை வரவேற்ப்பதில் மகிழ்வடைகிறேன். மேலும் துறை சார்ந்த பதிவுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். நான் சவேரியார் பள்ளியில் 6ம் வகுப்பு 1975-76ல் படித்தேன் தங்கள் கல்லூரி வழியாகத்தான் வீட்டிற்கு செல்வேன்.

    வலம்புரி ஜான் தங்களுக்குப் பின் படித்தவரா?

    ReplyDelete
  2. அன்புள்ள பிரபு ராஜதுரை,
    தங்கள் வரவேற்பில் மகிழ்கிறேன். என் பள்ளிப் பருவத்தில் என் தாய்வழிப் பாட்டனார் திருநெல்வேலி மாவட்டத்தில் தாசில்தார் பணியிலிருந்தார். கல்லூரிக் காலத்திற்கு முன்பும் பலமுறை விடுமுறையில் பாளையங்கோட்டை வந்திருக்கிறேன். வ.உ.சி மைதானத்தில் விளையாடியிருக்கிறேன். வலம்புரி ஜான் பற்றி என் நினைவில் இல்லை.

    ReplyDelete