Friday, 30 March 2012

கொஞ்சம் புன்சிரிப்பு, நிறைய பாசம்

'மதர் கிரியேசன்ஸ்' நாடகம்,  
பார்த்தேன் 'பிரியமுடன் அப்பா'
கதை, வசனம், இயக்கம்
சி.வி.சந்திரமோகன்;

பார்த்தது கதையல்ல,
வாழ்க்கையில் நடக்கும் நிஜம்,
வயதான பெற்றோரை - உதாசீனப்படுத்தும்
பிள்ளைகள்;

நடிகர்கள் நடிக்கவில்லை,
வாழ்ந்து காட்டினார்கள் - நாடகம்
கண்டவர்கள் கண்களில்
கண்ணீர் மழை;    

பெற்றோர்களுக்கு தேவை
'பிள்ளைகளின் அக்கறை,
கொஞ்சம் புன்சிரிப்பு,
நிறைய பாசம்'!

The lover speaks to his heart


Part I - Introduction

A lover likes to meet his sweetheart
Arranged by the confident maid
in a trysting place every night;

The faithful MAID refuses to continue
And conveys to the Hero her inability;

The hardships you have to meet out
while you come through the darkness
to reach this place every night;

And the fear of thy neighbors come to know
And what they may speak ill of you both;

It is better you both get married
And that is good for both of you. 

Part II - அவ்வையார் இயற்றிய குறுந்தொகைப் பாடல் 29 ஆங்கில மொழிபெயர்ப்பு

In Response,
THE LOVER SPEAKS TO HIS HEART;

O' MY HEART,
Pleasant opinions about you might be lost,
Unpleasant rumors might spread against you;

Like an unburnt fresh mud-pot
Absorbing the showered rain water;

Uncontrolled love makes me
to swim against the flooded river of desire,
You like to assume the precious one.

As if a female monkey with her baby,
embraced by her baby securely
helps to climb atop the tiny branch of a tree;

If you could get someone
who listens your notion;

And understands your grief
who can help to solve the issue;

your struggle is worth it
to reach the secret site;

I will have the pleasure
of meeting my sweetheart!

குறுந்தொகை 29

நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்
    பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல
    உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி
    அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும் 
  5பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு 
    மகவுடை மந்தி போல         
    அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே - ஒளவையார்.

Tuesday, 27 March 2012

பிறர்மனை நயவாமை

நாலடியார் அறத்துப்பாலில் , 'பிறர்மனை நயவாமை' என்னும் அதிகாரத்தில் 85 வது வெண்பா:

செம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை
வலியாற் பிறர்மனைமேற் சென்றாரே, இம்மை
அலியாகி ஆடிஉண் பார்.

முற்பிறப்பில் ஆண் தன்மையும், ஆட்பலம், பணபலம் அதிகாரம் மற்றும் செல்வாக்கு முதலிய வலிமை உடையவராய்ப் பிறர் மதிக்க வாழ்ந்திருந்தவர் தமக்குள்ள இடம் பொருள் ஏவல் என்னும் வலிமைகளால் நடுவுநிலைமை என்னும் குணம் சிறிதுமில்லாமல் கீழ்மக்கள் கூட்டத்தோடு கூடியவராய் திரட்சி பொருந்திய கோல மெழுதிய மார்புகளையுடைய பெண்மகளின் தோள்களைச் சேர விரும்பி அயலார் மனைவியர்பாற் செல்கிறார்.

அத்தகையவர்கள் இப்பிறப்பில் அலித்தன்மையுடையவராய்ப் பிறந்து, ஆண்மையும், வலிமையையும் இழந்து பெண்ணின் நலத்தைத் துய்க்க இயலாத பிறவியாய் தெருக்களிலும், பொது இடங்களிலும் பிறர் நகைக்கக் கூத்தாடிப் பிச்சையேற்று வயிறு பிழைப்பவராவர் என்றும் 'பிறர்மனை நயவாமை'யே   அறமாகும் என்றும் கூறி இப்புலவர் அறிவுறுத்துகிறார்.

இன்றைய கால கட்டத்தில் மேற்கூறிய இழிசெயல் மட்டுமின்றி, மற்ற எளியவரின் பொருள், நிலம், வீடு மனைகளையும் செல்வாக்கு, ஆட்பலம், அதிகாரத்தைப் பயன்படுத்தி அடாவடியாக பிறர்மனை நயந்து (மனை அபகரிப்பு வழக்குகள்) அவைகளை அபகரித்துக் கொண்ட வழக்குகளில் சில அரசியல்வாதிகள், அதிகாரிகள், அவர்களுக்குத் துணை போனவர்கள்  சிக்கி இருக்கிறார்கள். வழக்கு, நீதிமன்றம், சிறை என்று சென்று வருகிறார்கள். இவர்களும் தங்கள் செல்வாக்கை இழந்து பிறர் நகைக்க வாழ நேரவேண்டும். இது மற்ற சுயநலவாதிகளுக்கு படிப்பினையாக இருக்க வேண்டும்.

இலவசங்கள் அவசியம்தானா? மலிவு விலையில் தடையில்லா மின்சாரம் வேண்டும்!

மதுரையில்
சென்ற சனிக்கிழமை (24.03.2012) காலை 6 - 9 மணியிலிருந்து கீழ்கண்டவாறு 
மதியம் 12 - 3 மணி 
            4 - 4.30 மணி
            4.45 - 5 மணி
            6 - 6.45 மணி
       7.30 - 8.15 மணி
     9.45 - 10.30 மணி
இரவு 12 - 12.45 மணி
          1.30 - 2.15 மணி
ஞாயிற்றுக் கிழமை காலை 3.45 - 4.30 மணிவரை பல மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ஒவ்வொரு நாளும் இதே நிலைதான். இதை சரி செய்வார் யாருமில்லை. கேட்டாலும் எதிர்முனையில் பதில் கிடைக்காது. என்ன செய்ய! சுதந்திர நாட்டில் பழகித் தொலைய வேண்டியதுதான்.

இந்த லட்சணத்தில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் இலவச திட்டங்கள் மற்றும் மானியத்திற்கு 22 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது அவசியம்தானா? தமிழ் நாடெங்கும் மலிவு விலையில் தடையில்லா மின்சாரம் வேண்டும்!

Sunday, 25 March 2012

பாத்திமா கல்லூரிக்கருகில்... போக்குவரத்து சிக்கல்களை சீரமைக்க சில யோசனைகள் - பலனளிக்குமா?

பாத்திமா கல்லூரிக்கருகில் உள்ள போக்குவரத்து சிக்கல்களை, தருமி என்ற நண்பர் சாம், வலைப்பூவில் தெரிவித்திருந்தார். பாத்திமா கல்லூரிக்கருகில் உள்ள போக்குவரத்து திட்டுக்கள் (Traffic islands) வாகனம் ஓட்டுபவர்களுக்கு மிகுந்த சவாலாகவே உள்ளன. எந்த வாகன ஓட்டுனர்களும், நடந்து செல்பவர்களும் எந்த ஒழுங்கு முறையும் கடைப்பிடிப்பதில்லை. மிகவும் குழப்பமாகவும், தன்னிச்சையாகவும் செல்கின்றனர். பல விபத்துக்களும் ஏற்படுகின்றன. கண்டிப்பாக இதை சரி செய்ய இயலுமென்றே நினைக்கிறேன். போக்குவரத்து காவல் துறை ஒரு சில மாற்றங்களை செய்ய சில வழிமுறைகளை யோசனைக்கு வைக்கிறேன்.

அந்த இடத்தில் இரண்டு திட்டுக்கள் உள்ளன. ஆலமரம் பஸ் நிறுத்தத்திலிருந்து வரும்பொழுது முதலில் உள்ள சிலையில்லாத சிறிய முதல் திட்டு. இந்த இடத்தில் இடது புறமாகவே சென்று வைகைப் பாலம் வழியாக காளவாசல் செல்வதில் எந்த குழப்பமுமில்லை.

ஆலமரம் பஸ் நிறுத்தத்திலிருந்து வந்து பாத்திமா கல்லூரி வழியாக சமயநல்லூர் வழி செல்லும் வாகனங்கள் முதல் திட்டிலேயே இடது புறமாக சுற்றி பிரதான சாலையில் சேர்ந்து கொள்ளுதல். இதற்கு மாருதி showroom ஐ அடுத்து  (கொய்யா பழக்கடை இருக்கிறது) சிக்னல் அமைக்கலாம். 

அடுத்து காளவாசல் பகுதியிலிருந்து வந்து ஆலமரம் நிறுத்தம் வழியாக பாலமேடு, கோரிப்பாளையம் செல்லும் வாகனங்கள் முதல் திட்டிலேயே இடதுபுறமாக சுற்றி பாத்திமா கல்லூரி காம்பவுண்டை ஒட்டி சேர்ந்து கொள்ளுதல். இதற்கு SUZUKI Arun motors க்கு முன்னால் சிக்னல் அமைக்கலாம். (இந்த வாகனங்கள் தற்சமயம் இன்னும் சற்று தூரம் வந்து சிலைகள் உள்ள பெரிய இரண்டாவது திட்டைச் சுற்றி, திரும்ப மிகுந்த சிரமப்பட்டு செல்கின்றன).

சமயநல்லூர் வழியாக வரும் வாகனங்கள் இடது புறமாக சென்று ஆலமரம் நிறுத்தம் வழி செல்லலாம். நேர்வழியாக காளவாசலும் செல்லலாம். இதற்கு பாத்திமா கல்லூரியை அடுத்து இடதுபுறம் காம்பவுண்ட் அருகில் சிக்னல் அமைக்கலாம். 

என் யோசனைகள் பலனளிக்குமா?

Saturday, 24 March 2012

சியாட்டிலில் என் 'ரெஸ்ட் ரூம்' அனுபவம்

ஒலிம்பியாவில் நானும் என் மனைவியும்
என் இளைய மகன் க.கிருஷ்ணகுமார் TCS நிறுவனத்தில் பணியாற்றும் பொழுது அமெரிக்காவின் சியாட்டில் என்ற நகரில் Foothill commons என்ற பகுதியில் தன மனைவியுடன் வசித்து வந்தார். 2002 ல் நான் என் மனைவியுடன் சியாட்டில் சென்றிருந்தேன். இது வாஷிங்டன் என்ற மாகாணத்தில் இருக்கிறது (வாஷிங்டன் DC வேறு). இந்த மாகாணத்தை 'என்றும் பசுமை மாகாணம்' (Evergreen state) என்கின்றனர். இதன் தலைநகரம் 'ஒலிம்பியா' எனப்படுகிறது.

அங்கு சியாட்டில் சென்ற ஓரிரு நாட்களில் ஒரு வார இறுதியில் 'துலிப் மலர் வயல்வெளி'யைக் காண காரில் சென்று கொண்டிருந்தோம். குமார் கார் ஓட்டிக் கொண்டிருந்தார். நான் என் மகனிடம், 'குமார், காரை ஓரமாக நிறுத்து, சிறுநீர் கழிக்க வேண்டும்' என்றேன். 'ஐயோ, அப்பா, இங்கெல்லாம் நினைத்த இடத்தில் ரோட்டோரத்தில் போக முடியாது' என்று சொல்லி ஒரு கால் மணி நேரப் பயணத்துக்குப் பின் சாலையோர பகுதி ஓய்வகத்தில் (Rest room) நிறுத்தினார். சுமார் 20 வாகனங்கள் நிறுத்துமளவு இடவசதியிருந்தது.

அங்கு எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தனியாக ஒரு திறந்த அறையில் இருவர் எங்களை வரவேற்று, ஓய்வுப் பகுதிக்கு வருவோர்க்கு உதவ தட்டில் பிஸ்கட்டுகளும், பெரிய கோப்பையில் காபி அல்லது தேநீர் அளித்தனர். அனைத்தும் இலவசம். இவைகள் போக்குவரத்துத் துறை செலவில் அளிக்கின்றனர். நல்ல வசதியான சுகாதாரமான கழிப்பறைகள் இருந்தன. வேறு சில வழிகாட்டி அட்டைகளும் இருந்தன. சுற்றுலாவுக்கும் பயணத்திற்கும் வெளிநாட்டில் அவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள்.

துலிப் வயல் வெளியிலும் ஒரே ஒரு கழிப்பறை இருந்தது. அதில் செல்வதற்கு நீண்ட வரிசை. 'Are you in queue' என்று கேட்டு வரிசையில் சேர்ந்து கொள்கிறார்கள். நான் முந்தி, நீ முந்தி என்று தள்ளு முள்ளு இல்லை.

இதுபோல நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோர்க்கு உதவ பல இடங்களில் Rest room கள் இருக்கின்றன. இதை ஏன் நம் நாட்டிலும் செயல்படுத்தக் கூடாது? நம் ஊரில் பேருந்து நிலையங்களிலும், நெடுஞ்சாலைப் பயணங்களிலும் நல்ல உணவகங்களும், கழிப்பறைகளும் இருப்பதில்லை. இருப்பவைகள் அரசியல்வாதிகளால் வியாபாரமாக்கப்படுகின்றன.  

டென்மார்க்கில் 'தெருவில் சிறுநீர் கழித்தால் 1000 குறோணர் தண்டம்' என்ற சட்டம் அமலில் இருப்பதை அறிந்தேன். ஆனால், இங்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் கழிக்கலாம், மலம் கழிக்க ஒதுங்கலாம் என்பதே நடைமுறையாக இருக்கிறது. அருகில் வீடு இருக்கிறதே, பெண் பிள்ளைகள் இருக்கிறார்களே என்ற அறிவும் கிடையாது, கூச்சமும் கிடையாது.

பொது இடங்களில் சிறு நீர், மலம் கழிப்பது, புகை பிடிப்பது, பிரேத ஊர்வலத்தில் வழிநெடுகிலும் மலர் மாலைகளைப் பிய்த்தெறிந்து சாலைகளை அசிங்கப்படுத்துவது, திருமணம் மற்றும் அரசியல் ஊர்வலங்களில் 1000 முதல் 10000 வரை வெடியை வெடிக்கச் செய்து ஆபத்தை வரவழைத்து, ஊரையும் அசிங்கப்படுத்துவது கண்டிப்பாக சட்டம் போட்டு தடுத்தாலொழிய மக்கள் திருந்தப் போவதில்லை.

Thursday, 22 March 2012

குழந்தைக்குப் பெயர்

சஞ்சனா, சஹானா

   நான் சென்ற வருடம் ஒரு நாள் காலை 11 மணியளவில் மதுரை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் புதிதாகப் பிறந்த குழந்தையைப் பார்க்கப் போயிருந்தேன். என் மைத்துனரின் மகளுக்கு முந்தைய இரவு 11 மணிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருந்தது. சுகப் பிரசவம்தான்.  சென்றிருந்த நேரம் குழந்தை நன்றாக உறங்கிக் கொண்டிருந்தது. நான்கைந்து உறவினர்கள் ஆண்களும், பெண்களுமாக பார்க்க வந்திருந்தனர். நான் புதிதாகப் பிறந்த குழந்தையைப் பார்க்க எங்கு சென்றாலும் நான் ஒரு கண் டாக்டர் என்ற முறையில் குழந்தையின் இரு கண்களையும் மேலோட்டமாக பரிசோதித்து பார்த்துவிடுவேன்.

  அப்போது என் மைத்துனரின் மகள், குழந்தையின் தாய், நேற்றிரவு பிறந்த குழந்தை இவ்வளவு நேரம் கடந்த பின்னும் இன்னும் ஒன்றுக்குப் போகவில்லை என்றாள். அப்போது எனக்கு ஒரு பழைய நினைவு வந்தது. பல வருடங்களுக்கு முன்னால், சுமார் 22 வருடங்கள் இருக்கும். என் தம்பியின் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்தது. அப்போது என் தம்பி, அவர் மனைவி மற்றும் உறவினர்கள்  குழந்தைக்குப் பெயர் வைப்பது பற்றி ஒவ்வொருவரும் வெவ்வேறு பெயர்களை தேர்வு செய்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தக் குழந்தைக்கும் மேலே முன்பு சொன்ன ஒன்றுக்குப் போகும் பிரச்னை எழுந்தது. 

   இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆன்மீகத்தில் நம்பிக்கையுள்ள என் அப்பா ஆளாளுக்கு வெவ்வேறு நாகரிகமான பெயர்களை யோசித்துக் கொண்டிருப்பதால்தான் தெய்வ குற்றம் காரணமாக குழந்தை ஒன்றுக்குப் போகவில்லை. எனவே இதை விடுத்து நம் குல தெய்வம் பெயரையே வைத்து விடுவோம் என்று சொல்லியவுடன், தற்செயலாக குழந்தை நெடு நேரம் ஒன்றுக்குப்  போகாததால் திடீரென்று ஒன்றுக்கு பீச்சியடித்தது. உடனே என் அப்பா, பார், சாமி பெயர் வைக்கிறேன் என்றதும் ஒன்றுக்குப் போய்விட்டது' என்று அதையே வைத்து விட்டார்கள். ஆகவே நீங்களும் அப்படி செய்து விடாதீர்கள்.

   குழந்தைக்கு தாய்ப்பால் அடிக்கடி கொடுக்கவேண்டும். முதல் பாலை வீணாக்கக் கூடாது. அதில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட 'கொலஸ்ட்ரம்' என்ற பொருள் உள்ளது. இதில் 'இம்யூனோகுளோபின் Ig A' உள்ளது. ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் கொடுக்கும் பொழுது முதலில் குழந்தைக்கு கிடைப்பது நீர்த்தன்மையுடைய தாகத்தைத் தணிக்கும் வகையிலானது. அதன் பின் வருவது அதிக சத்துள்ள 'க்ரீமி' கெட்டித்தன்மையுள்ளதாகும். எனவே தாய் கொடுக்கும் பாலின் அளவைப் பொறுத்தே சிறு நீர் கழிப்பதின் அளவும் உள்ளது.

  குழந்தையின் பெற்றோர்கள் அவர்களுக்குள் பேசி நல்ல பெயராக வைத்துக் கொள்ளுங்கள். நல்ல தமிழ் பெயராக வைக்க வேண்டும், நவ நாகரீகமாக வைக்கிறேன் என்று தஸ் புஸ் என்று வைத்து விடாதீர்கள். பெயர் புரியும்படியும் இருக்க வேண்டும். சிறிய பெயராகவும் அமைய வேண்டும். சிறிய பெயர் கணினியில் வடிவமைக்கப்பட்ட விண்ணப்பங்களில் பெயர் விபரங்களை நிரப்புவது எளிதாக இருக்கும். முடிந்த அளவு ஆங்கிலத்திலுள்ள முதல் நான்கைந்து எழுத்துக்களில் அமைந்தால் பள்ளியில், வேலைக்கு செல்லுமிடங்களில் முதலாவதாக அழைப்பு வரும்.

  ஒரு சில வீடுகளில் பிறந்த குழந்தைக்குப் பெயர் வைப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுவதுண்டு. சம்பந்திகள் இருவரும் தீவிரமாகவும் காரசாரமாகவும் மோதிக் கொள்வார்கள். பெயர் வைப்பதில் யாருக்கு உரிமை என்றும் தங்கள் முன்னோர்கள் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்பார்கள். இதில் பெண் வீட்டார் சற்று விட்டுக் கொடுப்பது நன்மை பயக்கும். 

   ஓரிடத்தில் 1988 ல் இத்தகைய நேரத்தில் நான் போய்ச் சேர்ந்தேன். வீட்டிற்கு வெளியே பெயர் சூட்டு விழாவிற்கு வந்திருந்த உறவினர்களிடம் மிகுந்த இறுக்கம் இருந்தது. விசாரித்ததில் குழந்தையின் தகப்பன் தன் தாயாரின் பெயரை வைக்கவேண்டும் என்றும் அத்துடன் பிரியா என்று சேர்த்தும் 'சண்முகப் பிரியா' என்று வைக்கலாம் என்றார். அது நாகரீகமாக இல்லை என்றும் 'குஷ்பு' என்று வைக்கவேண்டும் என்றும் குழந்தையைப் பெற்றவள் கூறினாள். நானும், மற்றவர்களும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் குழந்தையின் தாய் தான் சொன்னதையே வைத்தாள். இன்றும் அந்த குழந்தை பள்ளியிலும், கல்லூரியிலும் 'குஷ்பு' என்றே அழைக்கப்பட்டாள்.

   இன்னொரு நண்பர் வீட்டில் முதல் குழந்தைக்கு நாகரிகப் பெயர் மற்றும் தகப்பன்வழித் தாத்தாவின் பெயரையும் சேர்த்து வைத்தார்கள். இரண்டாவது குழந்தைக்கு நாகரிகப் பெயர் மற்றும் தாய்வழித் தாத்தாவின் பெயரையும் சேர்த்து வைத்தார்கள். எனவே குழந்தைக்கு பெயர் வைப்பதில் இரு வீட்டாருக்கும் நல்ல புரிதல் அவசியம். இன்று தற்செயலாக ஒரு காரின் பின்புற கண்ணாடியில் ஒரு பெயர் பார்த்தேன். பெயர் நீளமாக இருந்தது 'சரவணவிஷ்ணு ஹரிகரன்'. சிவன், விஷ்ணுவை வணங்குபவர்களாக இருக்கலாம். நீண்ட பெயர் வைப்பவர்கள் அதிலுள்ள சிரமத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். விண்ணப்பங்கள் நிரப்புவது, வங்கி காசோலைகளில் கையொப்பம் இடுவது, குறிப்பாக உறவினர்கள் நண்பர்கள்  கூப்பிடுவது, இன்னும் வெளிமாநில, வெளி நாட்டினர், நாம் படிக்க, வேலை பார்க்க செல்லும் பொழுது நம்மைக் கூப்பிடுவது சிரமம்.

எனவே சிறிய பெயர்களை சூட்டுங்கள்.

அழகிய தமிழ் பெயர்களை சூட்டுங்கள்.

வடமொழி எழுத்துக்களை தவிருங்கள்.

குறிப்பாக பெயரின் ஆரம்பத்தில் வடமொழி எழுத்துக்களை (ஸ்ரீ, , ஸ்) தவிர்க்கலாம். எழுதுவது கடினம்.

கடவுள் பெயர், வீட்டில் உள்ள முன்னோர் பெயர் என்பதற்காக பழமையான பெயர்களையும், கூப்பிடுவதற்கு கூச்சமான பெயர்களையும் தவிர்த்து விடுங்கள்.

(இது என் தனிப்பட்ட அபிப்பிராயம், யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல)

கவனம்!! குழந்தைகள் கவனித்துக் கொண்டுதான்...

எழுத்து.காம் ல் 16.09.2011 தேதியில் வெளியிட்ட என் கவிதை
மேக கன்னிகா, குருபிரசாத்

திரும்பி விட்டார்கள்
பள்ளியிலிருந்து பிள்ளைகள்
பேரப் பிள்ளைகள்;

பசியாற சாதமுடன்
முட்டைப் பொரியல் அல்லது
நூடுல்ஸ்;

தாத்தாவிற்கும் வேண்டும், தா! என்று
செல்லங்களிடம் கேட்பேன் வேண்டுமென்றே! 
தரமாட்டார்கள்;

மீண்டும் மீண்டும் கேட்பேன்,
என்னிடம் தயங்கியபடி கேட்டார்கள்
ஒரு கேள்வி!

இரவினில் நீங்கள் அருந்தும்
பானத்தை 'என்றாவது' கேட்டோமா
நாங்கள்? 

கவனம்!!
குழந்தைகள் நம்மையும்
கவனித்துக் கொண்டுதான்...
இருக்கிறார்கள்.    

Wednesday, 21 March 2012

இனிய நினைவுகள்


புனித சவேரியார் கல்லூரி
1960 -61 ல் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் ஓராண்டு படித்த அனுபவம். சொந்த ஊரிலும், வீட்டிலும் சுதந்திரமாக சுற்றித் திரிந்த காலம். கல்லூரி புகுமுக வகுப்பு மாணவர் விடுதியில் சேர்க்கப் பட்டேன். தாயின் கைச்சாப்பாடு சாப்பிட்ட பிள்ளை.. விடுதிச் சாப்பாடு.கிராமத்து வளர்ப்பு. சில நேரங்களில் தவறு செய்யும்போது அடிக்க வரும் அம்மாவை திட்டுவது வழக்கம். 'உன்னைக் கொண்டு போய் ஹாஸ்டலில் விட்டால்தான் திருந்துவாய்' என்பார் அம்மா.

என் அம்மா

ஹாஸ்டலில் விட்டாயிற்று. அந்தக் காலத்தில் தொலைபேசியோ, அலைபேசியோ வசதி ஏது? அம்மாவிடமிருந்து தபாலில் கடிதம் வந்தது. அம்மா எழுதியிருந்த கடிதத்தை வாசித்து கண்ணீர் பெருகியது. அதில், 'என் அன்பு மகனுக்கு அம்மாவின் அநேக ஆசீர்வாதங்கள்' என்று நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அன்றுதான் அன்னையின் அன்பைப் புரிந்து கொண்டேன். அதன் பின் அம்மாவிடம் கோபிப்பதே இல்லை.

நண்பரின் மகன் திரு.ஜாபர் சேட்

அதன் பின் சுமார் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னால்... நான் கண் மருத்துவராகி மதுரை மேல மாசி வீதியில் நடத்திய கண் கலந்தறிதல் (Consultation) அறைக்கு தன் மகளுக்கு பரிசோதிக்க ஒருவர் வந்தார். அவரை என்னிடம் அனுப்பியவரோ அவரின் மாணவர். அந்த மாணவரின் தந்தை திரு.முகமது சையது என் நண்பர். அவர் 1970 - 74 ல் திண்டுக்கல்லில் கூட்டுறவுத் துறையில் உதவி பதிவாளர் ஆக பணி புரிந்தார். அந்த மாணவர்தான் பின்னாளில் IPS ஆகி, DGP யாக (தற்சமயம் தற்காலிக பணி நீக்கம்) உள்ள திரு.ஜாபர் சேட்.

என் நண்பர் திரு.சாம் ஜார்ஜ்

கண் பரிசோதனைக்கு மகளை அழைத்து வந்தவர் என் வயதுக்காரர். பார்த்த முகம். விசாரித்த போது, அவரும் நானும் புனித சவேரியார் கல்லூரியில் புகுமுக வகுப்பில் ஒரே E செக்சனில் (Natural Science, Physical Science, Economics, Advanced Tamil) படித்தவர்கள். அவர் பிரிட்டோ விடுதியிலும், நான் மற்ற மாணவர்கள் தங்கும் விடுதியிலும் இருந்தோம். அவர்தான் அமெரிக்கன் கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியர் திரு.சாம் ஜார்ஜ்.
சாம் ஜார்ஜுடன் நான்
புகழ் பெற்ற இதய அறுவை சிகிட்சை நிபுணர் டாக்டர்.A.R.ரகுராம்

மீண்டும் 2006 ஆம் ஆண்டு. மே மாதம். காருக்கு பெட்ரோல் போடும்போது மதுரை விளாங்குடியில் சாம் ஜார்ஜும், நானும் சந்தித்தோம். எனக்கு இருதய பை-பாஸ் (CABG) அறுவை சிகிட்சை மீனாக்ஷி மிஷன் மருத்துவ மனையில் செய்திருந்த நேரம். எனக்கு அறுவை சிகிட்சை செய்த மருத்துவர் புகழ் பெற்ற டாக்டர்.ரகுராம்.
டாக்டர்.ரகுராம்
7.3.12 தேதியிட்ட 'என் விகடனி'ல் வலையோசைப் பகுதியில் என் நண்பர் சாம் ஜார்ஜின் பங்களிப்பை அறிந்தேன். நான் சில ஆண்டுகளாக வலைத் தளங்களுக்குப் பரிச்சயமானவனானாலும், blog பற்றி அறிந்ததில்லை. சாம் ஜார்ஜைச் சந்திக்க ஆவலாயிருந்தேன்.

சனிக்கிழமை இரவு. சுமார் 7 மணி. தல்லாகுளம் இந்தியன் வங்கியின் ATM உள்ளே சிறிய இடம். மங்கிய ஒளி. நான் தலைக் கவசம் அணிந்திருந்தேன். அடுத்து நுழைந்த குறுந்தாடி வைத்திருந்தவர் நண்பர் சாம் ஜார்ஜ். ஆறு ஆண்டுகளுக்குப் பின் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.

வை.கோ வும் நானும்

நேற்று 17.03.2012 ல் நண்பர் சாம் ஜார்ஜ் என் வீட்டிற்கு வந்திருந்தார். சில மணி நேரங்கள் பழைய கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம். Blog பற்றியும் அதில் பதிவு செய்வது பற்றியும் எனக்கு உதவினார். சாம் ஜார்சிடம் 1961 ல் நான் நண்பர்களிடம் பெற்ற ஆட்டோகிராப் காட்டினேன்.

அதில் 23.3.61 தேதியிட்டு,

'நாடும் நற்றமிழர் ஏடும் புகழப்
பணியாற்றுக'
என எழுதி அன்புக் கையெழுத்திட்டவர் எங்கள் வகுப்பு நண்பர் திரு.கலிங்கப்பட்டி வை.கோபால்சாமி.
      
ஆட்டோகிராபும்   இணைத்துள்ளேன்.

நாங்கள் எடுத்துக் கொண்ட வகுப்பு புகைப்படம் இணைத்துள்ளேன்.

அமர்ந்திருப்பவர்கள் வரிசையில் வலமிருந்து இரண்டாவது திருநெல்வேலியில் புகழ்பெற்ற கண் டாக்டர்.போத்திலிங்கம், ஐந்தாவது வை.கோபால்சாமி, மேல் வரிசையில் வலமிருந்து ஐந்தாவதாக நிற்பது நான். வை.கோ வை 1961 க்குப் பின் நான் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை.

நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுமுன் 2002 ல் படத்திலிருப்பது வை.கோ தான் என்று ஒருவாறு உறுதி செய்தவர் நுண்கதிர் துறையைச் சேர்ந்த டாக்டர் ஜெகதீசன். அவரும் வை.கோ வின் தம்பியும் நண்பர்கள் என்று சொன்னார்.

என் அறை நண்பர் ந.பூபாலன், திரு.காசிப்பழம் இருவரும் படத்தில் இருக்கிறார்கள். நாங்கள் இருந்தது கொடைக்கானல் பிளாக் என்ற ஓட்டுக் கட்டடம். கடைசி மூன்று மாதங்கள் புதுக் கட்டடத்திற்கு மாறி விட்டோம்.

நான் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 1970 - 74 ல் பணி புரிந்த போது பூபாலன் பிஎஸ்சி முடித்து விட்டு பல்பொருள் கடையில் அவர் தந்தையுடன் தொழில் செய்து வந்தார். கடைத் தெருவுக்கு செல்லும் போதெல்லாம் அவரை சந்திப்பேன். சிலநிமிடங்கள் பேசிக் கொண்டிருப்பேன். கடையை விட்டு இறங்கமாட்டார். நண்பர் காசிப்பழத்தை கல்லூரி விடுதியை விட்ட நாளிலிருந்து நான் சந்திக்கவேயில்லை.

கல்லூரியில் எனக்குப் பிடித்தது தாவரவியல். அந்த வருடம்தான் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் MSc முடித்துவிட்டு எங்கள் ஆசிரியராக திரு.ஆராச்சி சேர்ந்திருந்தார். அவர் திருச்சி கல்லூரியைப் பற்றி மட்டுமின்றி ஆண்டா(ர்)ள் தெருவைப் பற்றியும் சொல்வார். என்ன விசேசமோ எங்களுக்குத் தெரியாது.

அவர் பாடம் எடுத்த Thallophyta, Bryophyta, Pterydophyta இன்னும் நினைவில் இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் பாளையங்கோட்டை சென்றிருந்த போது பேராசிரியர் ஆராச்சி அவர்கள் வீட்டிற்கு சென்று சந்தித்து வணங்கினேன். மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது.   




   

Sunday, 18 March 2012

இசை மேதை மதுரை சோமசுந்தரம்

'என்ன கவி பாடினாலும்
உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையோ முருகா';

ஆனையாம்பட்டி
ஆதிசேசய்யர் பாடல்,
நீலமணி ராகம்;

தேவரின் தெய்வம் திரைப்படம்,
'மருதமலை மாமணியே முருகையா'
தர்பாரி கானடா ராகம்;

'மஹா கணபதிம் பாவயே'
கோபிகாதிலகம் ராகம்;

இசை மேதை
மதுரை சோமசுந்தரம்,
பாடிக் கேட்க வேண்டும்,
அருமையான குரல் வளம்,
கேட்டுக் கொண்டே இருக்கலாம்!

கவிஞர்.வ.க.கன்னியப்பன் 

Saturday, 17 March 2012

Meka

குதூகலத்துடன் மேகா
அவள் கூந்தல் முல்லை

என் பேத்தி கூந்தலுக்கு
மகிழம்பூ வாசமுண்டு;
அவள் கூந்தல் முல்லைக்கு
அதீத வாசமுண்டு.

அவள் முக மலர்ச்சிக்கு
என்றென்றும் நான் அடிமை;
அவள் வரையும் ஓவியங்கள்
எல்லையில்லாக் கற்பனையின்
உயிரோட்டம்.



Saturday, 3 March 2012

என்னைப் பற்றி


 சில வரிகள்...
நான் மதுரை மாவட்டம், சோழவந்தான் ஊரில் பிறந்து, வளர்ந்து பள்ளிப் பருவம் முடித்தது அரசு தொடக்கப்பள்ளி, மந்தைக்களம் மற்றும்  போர்டு உயர் நிலைப்பள்ளி, ஆலங்கொட்டாரம், சோழவந்தான்.(தற்பொழுது அரசஞ் சண்முகனார் உயர்நிலைப் பள்ளி என பெயர் மாற்றப்பட்டுள்ளது). என் தந்தை C.கன்னியப்பன், தாயார் சந்திரா அம்மாள் ஆவார்கள். என் தந்தை எங்கள் வட்டாரத்தில் ‘கன்ட்ரோல்’ கன்னியப்ப முதலியார் என்ற நற்பெயர் பெற்ற பெருந்தகை ஆவார்.  
என் உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில் மதிப்பிற்குரிய புலவர். கு.குருநாதன், இராசகோபாலன், சச்சிதானந்தம் ஆகிய தமிழாசியர்களிடம் தமிழ் கற்றேன்.
நான் தமிழ்நாடு மருத்துவப் பணியில் 32 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றேன். சுமார் 26 வருடங்கள் கண் மருத்துவ நிபுணராகவும், கண் மருத்துவப் பேராசிரியராக 9 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் உண்டு. 
கடந்த பிப்ரவரி 2011 லிருந்து 'கீற்று' வலைத்தளத்தில் தமிழில் சுமார் 50  கட்டுரைகள் - பொது, மருத்துவம், வரலாறு, இலக்கியம் - வெளியிட்டிருக்கிறேன்.
'எழுத்து' வலைத்தளத்தில் சூன், 2011 லிருந்து சுமார் 300 கவிதைகள் பல்வேறு கருத்துக்களில் வெளியிட்டிருக்கிறேன்.
poemhunter.com ல் செப்டம்பர் 2011 லிருந்து சுமார் 142 கவிதைகளும் வெளியிட்டிருக்கிறேன். 
 இவற்றுள் ஆங்கில மொழிபெயர்ப்பாக சுமார் 30 திருக்குறளும், நான்மணிக் கடிகை (9), நாலடியார் (4) வெண்பாக்கள், திரிகடுகம் (2) செய்யுட்களும் அடக்கம்.