Thursday, 14 June 2012

மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த புனித சவேரியார் கல்லூரி மாணவர்கள்

புனித சவேரியார் கல்லூரியில் 1960 - 61 ல் புகுமுக வகுப்பில் படித்த எங்களில் சுமார் 20 பேர் வரை மதுரை மருத்துவக் கல்லூரியில் 1961 சூன் மாதம் சேர்ந்தார்கள். நான் கர்நாடக மாநிலம் மணிப்பாலில் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். விடுமுறையில் மதுரை வரும்பொழுது ஓரிரு முறை மதுரையில் மருத்துவக் கல்லூரியில் நண்பர்களைச் சந்தித்து இருக்கிறேன்.

நான் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி, மணிப்பாலில் இரண்டரை ஆண்டுகளும் (Preclinical), வடகர்நாடகா மாவட்டத் தலைநகர் மங்களூரில் உள்ள எங்கள் கல்லூரியிலும், வென்லாக் தலைமை மருத்துவ மனை, பிரசவ மற்றும் பெண்கள் மருத்துவமனையான (Lady Goschen Hospital) லேடி கோஸ்சென் மருத்துவமனையிலும்       மூன்றாண்டுகளும் (Clinical) பயின்று 1969 ல் பயிற்சி மருத்துவராக மதுரையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன்.

புனித சவேரியார் கல்லூரியில் என்னுடன் படித்த நண்பர்கள் சேது, சிவானந்தன், காமராஜ் மற்றும் பலர் மதுரையில் மருத்துவக் கல்லூரியில் இருந்தனர். சிலர் பயிற்சி முடித்து அரசு வேலைக்கும், மேற்படிப்பிற்கு அமெரிக்காவும் சென்றிருந்தார்கள்.

நான் அரசுப் பணியிலிருந்தபடியே கண் மருத்துவப் பேராசிரியர்கள்  G.வேங்கடசாமி மற்றும் S.தியாகராஜன் அவர்களிடம் பயின்று, கண் சிகிட்சைத் துறையில் M.S, D.O பட்டம் பெற்றேன். 1977 லிருந்து மதுரை, தஞ்சாவூர், திருச்சி மருத்துவமனை சார்ந்த பல கண் சிகிட்சை முகாம்களில் பணிபுரிந்து பல்லாயிரக் கணக்கான பேர்களுக்கு பார்வை கிடைக்க சேவை செய்துள்ளேன். 

எங்களுடன் படித்த நெல்லை மாவட்டம் பரமன்குறிச்சியைச் சேர்ந்த S.ஜெயபோஸ் என்ற நண்பர் அமெரிக்காவிலிருந்து சில ஆண்டுகள் வந்து தற்சமயம் மீனாக்ஷி மிஷன் மருத்துவ மனையின் குழந்தைகள் புற்று நோய்த் துறையில் பொறுப்பேற்று பணிசெய்து வருகிறார். 

மருத்துவர்கள் சேது (அறுவை சிகிட்சைத் துறை), சிவானந்தன் (காது மூக்கு தொண்டை சிகிட்சைத் துறை), காமராஜ் (குழந்தைகள் சிகிட்சைத் துறை) ஆகியோர் அவர்கள் பயின்ற சிறப்புத் துறைகளில் நிபுணர்களாக இன்றும் சிறந்து விளங்குகிறார்கள்.

No comments:

Post a Comment