புறப்பொருள் என்பது
பொருள் இலக்கண வகைகளுள் ஒன்று. இது புறம் பற்றிய உலகியல் நெறிகளாகிய மன்னனின்
வீரம், வெற்றி, கொடை, புகழ், கல்வி, அறம் முதலியவற்றைக் குறித்து விளக்கிக்
கூறுவது ஆகும். புறப்பொருள் அல்லது புறத்திணை பன்னிரண்டு வகைப்படும்.
1.
வெட்சித் திணை:
பகை நாட்டின் மீது
போர் தொடங்கும் முன் அந்நாட்டிலுள்ள ஆநிரைகளுக்குத் தீங்கு நேரக்கூடாது எனக்
கருதும் மன்னன், தன் வீரர்களை அனுப்பி ஆநிரைகளாகிய ஆடு, மாடுகளைக் கவர்ந்து வரச்
செய்வது வெட்சித்திணை ஆகும். அவ்வீரர்கள் வெட்சிப்பூவைச் சூடிச் செல்வர். நிரை
என்பது ஆடு, மாடுகள் ஆகும். இது நிரை கவர்தல் எனப்படும்.
2. கரந்தைத் திணை:
வெட்சி வீரர்களால்
கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை கரந்தைப்பூவைச் சூடிச் சென்று மீட்டுவருவது
கரந்தைத் திணை ஆகும். கரந்தை என்பது நிரை மீட்டல் ஆகும்.
3. வஞ்சித் திணை:
மண்ணாசை காரணமாகப்
பகைவர் நாட்டுடன் போரிடுதல். வீரர்கள் வஞ்சிப்பூவைச் சூடிப் போரிடுவர்.
4. காஞ்சித் திணை:
தன் நாட்டைக்
கைப்பற்ற வந்த மாற்றரசனோடு காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடுவர்.
5. நொச்சித் திணை:
தன்னுடைய மதிலை
வேண்டி உள்ளிருந்தே, வெளியே இருக்கும் பகை அரசனோடு நொச்சிப் பூவைச் சூடிப்
போரிட்டு அம்மதிலைக் காப்பர்.
6. உழிஞைத் திணை:
உழிஞைப் பூவைச் சூடி
தன் வீரர்களுடன் மாற்றரசன் கோட்டைக்குள் புகுந்து மதிலைக் கைப்பற்றுவர்.
7. தும்பைத் திணை:
பகைவேந்தர் இருவரும்
தும்பைப் பூவைச் சூடி வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தம் வீரர்களுடன்
இணைந்து போரிடுவர்.
8. வாகைத்திணை:
வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வான்.
9. பாடாண் திணை:
பாடு + ஆண் = திணை = பாடாண்திணை
பாடுதற்குத் தகுதி
உடைய ஓர் ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப்
பாடுவது பாடாண் திணை.
10. பொதுவியல் திணை:
வெட்சி முதல் பாடாண்
வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல்
திணை.
11. கைக்கிளைத்
திணை:
கைக்கிளை என்பது
ஒருதலைக் காமம். இது ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று என இரு வகைப்படும்.
12. பெருந்திணை:
பெருந்திணை என்பது
பொருந்தாக் காமம். இதுவும் ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று என இரு வகைப்படும்.