என் மூன்றாவது தம்பி குருநாதன் 1973 ஜூலை மாதத்திற்குப் பின் பாளையங்கோட்டை அரசு சித்த
மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையிலுள்ள மாணவர் விடுதியில் தங்கிப
படித்து வந்தான். முதலாம் ஆண்டிலேயே மாணவர் சங்க உதவி செயலாளராக இருந்து, ஒரு பேராசிரியரிடம் தலைமை செவிலியர்
மரியாதைக் குறைவாக பேசினார் என்பதற்காக வேலைநிறுத்தத்தில்
ஈடுபட்டு படிப்பில் பின்தங்க
வேண்டிய நிலை ஏற்பட்டது. 1981 இறுதியில்
BIM முடித்தான்.
1982 சனவரியில் உதவி சித்த
மருத்துவராக வட ஆற்காடு மாவட்டம் ஆலங்காயம் என்ற ஊரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில்
சேர்ந்தா(ர்)ன்.
குருநாதன் கல்லூரியில் மாணவனாக
படிக்கும் காலத்தில் ஆசிரியர்களிடம் பெருமதிப்பு வைத்திருந்தார். முதிய
மாணவர்கள், இளம் மாணவர்கள்,
சம வகுப்பில் படித்தவர்கள் என்று அனைவருடனும்
அன்பும், நட்பும் கொண்டு உறவினர்கள் போலவே
பழகி வந்தார்.
கல்லூரியில் நடக்கும் விழாக்களில் பாட்டு, நாடகம் போன்ற கலைகளில் கலந்து கொண்டு பரிசுகளும்
வாங்கியுள்ளார். 'இசைச்
சித்தர்' சிதம்பரம் ஜெயராமன் பாடல்களை
இனிமையாகப் பாடுவார். அலைபேசி வசதி இல்லாத அக்காலத்தில் கடிதப் போக்குவரத்துதான்.
மாணவப் பருவத்தில் அவர்க்கு நண்பர்களிடமிருந்து வந்த கடிதங்கள் நூற்றுக் கணக்கில். அனைத்திலும்
அண்ணன், மாமா, தாத்தா, அத்தான், தம்பி, பாஸ் என்று உறவு
முறை வைத்து விளித்துத்தான் கடிதங்கள் வந்தன.
ஆலங்காயத்திலிருந்து மாற்றலாகி உசிலம்பட்டி
மருத்துவமனையில் பணியில் சேர்ந்த பொழுது 1984 ல் திருமணம் நடந்தது. அப்பொழுது சோழவந்தானிலிருந்தே போய் வந்தார். ஒரு
அழகிய பெண் குழந்தை பிறந்தது. தன தாயார் பெயரையும் சேர்த்து சந்திரவதனா என்று பெயரிட்டு
அன்போடு வளர்த்து வந்தனர் பெற்றோர்.
பின் விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாற்றல்.
1996 மே மாதத்திற்குப்
பின் திருச்சி மாவட்டம், ஆரம்ப
சுகாதார நிலையம் சோமரசம்பேட்டையில் பணி. பெருங்குடலில் (Rectum
carcinoma) புற்று நோய் ஏற்பட்டு,
1997 மார்ச் மாதம் அறுவை
சிகிட்சைக்குப் பின் ஆறு மாதங்கள் நலமுடன் வாழ்ந்தார். கடைசியாக சில மாதங்கள் மதுரை யானைமலை ஒத்தக்கடை அரசு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிந்தார். அதன்பின்
பின்விளைவுகளால் 1997 நவம்பர்
மாதம் 3 ஆம் தேதி
உயிரிழந்தார்.
வேலைக்குச் சென்றபின், திருமணத்திற்குப் பின் வந்த கடிதங்கள் அவர் மனைவியிடம் இருக்க
வாய்ப்புண்டு. சித்த மருத்துவக் கல்லூரியில் படிக்கும்பொழுது மருத்துவர்கள்
திரு.வேலுச்சாமி, திரு.பசியுதீன்
அகமது, திரு.ஜெயபிரகாஷ்
நாராயணன் போன்றவர்களை 'அண்ணன்'
என்றுதான் அன்போடு அழைத்து பழகி வந்தார்.
சென்ற 31.05.2012 தேதியில் நோய்வாய்ப்பட்டு எங்கள் தாயார் மரணம்
எய்தியதை அடுத்து வீட்டிற்கு வெள்ளையடிக்க சில
இடங்களை சுத்தம் செய்தோம். அப்பொழுது பல வருடங்களாக பூட்டியிருந்த அறையிலிருந்து
சாமான்களை வெளியிலெடுத்தோம். கத்தையாக குருநாதனுக்கு வந்த கடிதங்கள் கிடைத்தன.
அவற்றில் ஒன்று மருத்துவர்.ஜெயபிரகாஷ் நாராயணன் அவரது
ஆசிரியரும், தமிழ்நாடு இந்திய
மருத்துவத்துறை இயக்குநருமான திருமிகு.பொன்.குருசிரோன்மணி
அவர்களுக்கு எழுதி
அனுப்பப்படாமல் (அல்லது அனுப்பியும் இருக்கலாம்) என் தம்பி குருநாதன் வசம் இருந்த கடிதம்.
Dr.P.Jeyaprakash Narayanan
M.D,(Siddha) Place: பாளையங்கோட்டை
Date:
2/4/77
பெறுநர்:-
திருமிகு.Dr.பொன்.குருசிரோன்மணி B.A, G.C.I.M அவர்கள்,
தமிழ்நாடு இந்திய மருத்துவத்துறை இயக்குநர்.
பெருமதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு –
இதய நிறைவான வணக்கம். இறைவன்
திருவருளால் இங்கு நட்பும் சுற்றமும் நலம். இதுபோல் அங்கு தாங்களும் சுற்றமும் நட்பும்
நலமுடன் திகழ இறைஞ்சுகிறேன்.
"விரிவுரையாளர்" பதவி உயர்வு ஆணை
கிடைக்கப் பெற்றேன். தங்கள் அன்பிற்கும் அருளிற்கும் எனது நன்றி.
யார் எதைச் சொன்னாலும் நான் உங்களால் ஏற்றி வைக்கப்பட்ட
விளக்கு.
தனக்கே உரிய தனிக்கோட்பாடுகளை என்றும்
தளரவிடாது ஏறுநடை போடுகின்ற அரிமா தாங்கள்.
"சித்த மருத்துவ வளர்ச்சிக் குழு" தனி அதிகாரி
பொறுப்பிற்கு அழைத்தீர்கள் . பின் கல்லூரியிலேயே பணியாற்றப் பணித்தீர்கள்.
இரண்டிற்கும் சரி என்றேன்.
இருபது ஆண்டு காலமாக சித்த மருத்துவத்
துறையின் வளர்ச்சிகள் - குறைபாடுகள் அனைத்தையும் நன்கு அறிந்தவர்கள் நீங்கள்.
இன்று கொள்கைகளை உருவாக்கி அதற்குச் செயல்வடிவம்
தருகின்ற சிற்பியாக அமைந்திருக்கிறீர்கள்.
அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
தொலைவிலிருந்து கேலி பேசியவர்கள் இப்போது நன்கு குளிர் காய்ந்து
கொண்டிருக்கிறார்கள்.
அதைப்பற்றி எனக்கு எந்த வருத்தமும்
கிடையாது. தெய்வீக நியதிகளை நான் உறுதியாக நம்புகிறேன்.
உங்களுக்கு நான் என்றும் தலைவணங்குகிறேன். அது எனது
கடமை மட்டுமல்ல - உரிமையுங் கூட.
உங்களுக்குப் பக்கத்திலே நிற்கிறோம் என்ற நினைப்பில்
இங்கே சில பரிவாரமூர்த்திகள் அவர்களுக்கும் பயப்படவேண்டும் என எண்ணுகிறார்கள் - அது எப்படி முடியும்!
தெய்வத்திற்குக் கொடுக்கின்ற மதிப்பு தேர் இழுக்கிறவனுக்கும் கொடுக்க முடியுமா!
உங்கள் அன்பை வைத்து வியாபாரம் செய்கின்ற அசடுகள் சில
அப்படி எதிர்பார்க்கின்றன.
இவர்கள் தேரை இழுக்காவிட்டால்
இன்னொருவன் வந்து இழுக்கிறான். நீண்ட தொலைநோக்கோடு திட்டங்களை
உருவாக்குகிறீர்கள். அதில் என்னை நீங்கள் "கலசமாக வைத்தாலும் சரி. மிதிபாயாகப் போட்டாலும்
சரி" கொடுத்த பணியை முறையாகச் செய்கிறேன்.
அதிகாரத்திலிருக்கும்போது எனக்கு யார் யார்
வேண்டுமென்றே கெடுதல்கள் புரிந்தார்களோ அவர்களிடமெல்லாம் இப்போது அன்பாகத்தான்
இருக்கிறேன்.
அப்படி இருக்கையில் எனது வாழ்க்கைப்
பாதையைத் தொடங்கி வைத்த உங்களிடம் எத்தகைய பற்றுக் கொண்டிருப்பேன் என்பதை
உங்கள் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறேன்.
உங்களுக்கு இந்த மகிழ்ச்சியான
நேரத்தில் என் நன்றியை - என் நெஞ்சத்தில் தாங்கள் குடிகொண்டு என்னை வாழ்த்திக்
கொண்டிருக்கும் முறை இவைகளை தங்கள் திருவடிகளில் சமர்ப்பித்திட எண்ணி எதையெதையோ
எழுதி என் நெஞ்சம் எப்படிப்பட்டது என்று விளக்கம் கொடுத்துவிட்டேன்.
என்னை மாணவனாக, மணமகனாக, ஆசிரியனாக, தாங்கள் உயிரையே வைத்திருக்கும் தங்களால் உருவாக்கப்பட்ட இம்மருத்துவக்
கல்லூரியில் ஒரு தொண்டனாக என்னை ஆக்கி, தாங்கள் ஆசீர்வதித்து தங்களால் இன்று பதவி உயர்வும் பெற்று நான் நிற்பதை நினைத்து
தங்களுக்கு எத்தனை கோடி நன்றி - எப்படிப்பட்ட நன்றி கூற முடியும் என்று எழுத ஆரம்பித்தேன்.
கடைசியில் தங்களுக்கு ஒரு தலைமகனாக, உண்மை மாணவனாக, தாங்கள்
இடும் கட்டளையைச் செய்யும் தொண்டனாக என்றென்றும் இருப்பேன் என உறுதி கூறி தாங்கள் நீண்ட நாள்
வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி முடிக்கிறேன்.
நன்றியுள்ள -
பு ஜெயப்பிரகாசு நாராயணன்.
2 /4 /77
.
"விரிவுரையாளர்" பதவி
உயர்வு ஆணை கிடைத்ததற்கு நன்றி தெரிவித்து 2/4/77 தேதியிட்டு எழுதிய பணிவான கடிதம். இது மிகுந்த
நயத்துடன் முத்து முத்தான கையெழுத்துடன் எழுதப்பட்டது.
இக்கடிதம் ஆசிரியர் - மாணவர் நல்லுறவை இவ்வுலகத்திற்கு
எடுத்துக் காட்டும் விதமாக அமைந்திருப்பதாக நான் கருதுகிறேன். மருத்துவர்
ஜெயப்பிரகாசு நாராயணனின் விலாசமும், அலைபேசி
எண்ணும் வலைத்தளத்தில் கண்டுபிடித்து நேற்று அவரிடம் பேசினேன். அவருக்கு மட்டற்ற
மகிழ்ச்சி. அவர் சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப்
பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் தற்சமயம் சென்னை அரும்பாக்கம், பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவில் நோயாளிகளை சந்திக்கிறார்.
அவரது அனுமதி பெற்று இக்கடிதத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன்.